Wednesday, December 31, 2014

’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்


ஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி.

தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே  அன்றாடம் சந்திப்போமென்பதால், கடந்த தினங்களை ரீவைண்ட் பண்ணிப்பார்க்கும் கெட்ட பழக்கம் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை.

புத்தாண்டு சபதங்களை ஒரு வாரத்துக்குக்கூட கடைப்பிடிக்க முடிவதில்லை ஆகையால் அப்படிப்பட்ட சங்கட்டமான சபதச் சனியன்களையும் எடுப்பதில்லை.


டந்த சில வாரங்களாக, மூவி ஃபண்டிங் குறித்து நிறைய எழுதி போரடிக்கிறேன்... என்று நினைப்பவர்கள்,  உடனே இந்தப்பதிவை விட்டுப் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடலாம்.

எனக்கு இது முக்கியமான பதிவு. ’இது நடக்க சாத்தியமேயில்லை’ என்று பலர் என் காது படவே பேசியபோது, ‘நல்ல நண்பர்கள் இருக்கும் போது எதுவுமே சாத்தியம்’ என்று முத்துவுக்கு கெத்து சேர்த்தவர்கள் நீங்கள்.

முதலில் ஜெய்லானி சார். அவர் இல்லாமல் இப்படி ஒரு திட்டம் குறித்து  எனக்கு கனவு காணக்கூட தெரிந்திருக்காது.

அடுத்து என் தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம், பிரபாகர்,பிரபாகர்,பிரபாகர், சூர்யா வடிவேல், மோகன்குமார், சுதர்சன் லிங்கம்,ஆல்ஃபி, குமாரராஜா,பொற்கோ, குழலி புருசோத்தமன், ஷாநவாஸ் ஐயா, இயக்குநர் மீரா கதிரவன், அடுத்து என் பெயர் சொல்லவேண்டாம் என்று உதவிய, உதவக்காத்திருக்கிற இருவர்.... இவர்களுக்கெல்லாம் வெறுமனே நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு நான் கடந்துபோய் விட முடியாது.

அப்புறம் என்னத்தைத்தான் சொல்லிட்டு கடந்துபோகப்போற? என்று ’கேட்டு’ போடாதீர்கள்.

நேற்று பிரசாத் லேப்பில் மூவி ஃபண்டிங் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். விழாவில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.

தற்செயலாக விஜய் டிவியின்  ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குநர் கரு.பழனியப்பனுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.  நிகழ்ச்சி முடிந்து, அவரது காருக்குப் பின்னாலேயே போய் அவரது ஆபிசில் சாப்பிட்டுவிட்டு, ஒரு சின்ன தயக்கத்துடன் அழைப்பையும் விடுத்தேன்.

தயக்கத்துக்கு இருந்த காரணத்தையும் சொல்லிவிடவேண்டும்.

பழனி என் கல்லூரி ஜூனியர், நெருங்கிய நண்பர், உதவி இயக்குநராக நாங்கள் ஒன்றாக பணியாற்றிய காலங்களில் மதிய உணவுக்கு பலமுறை பாண்டிபஜார் பாலாஜி பவனில் டோக்கன் வாங்கி எங்கள் வயிற்றை நிரப்பியவர், என்னைப்பற்றி அநியாயத்துக்கு நல்ல அபிப்ராயங்கள் வைத்திருப்பவர், இப்படி எங்களுக்குள் நூறு பந்தங்கள் இருக்கிறது எனினும் ‘சிநேகாவின் காதலர்கள்’ இயக்க ஆரம்பித்த பிறகு அவரை சந்திக்க நேரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் விதவிதமாக ஒளிந்துகொண்டேன்.

இப்படி ஓடி ஒளிந்த விளையாட்டுக்கு, அவர் நியாயமாக, நிகழ்ச்சிக்கு வருவதை சாக்குபோக்கு சொல்லி தவிர்த்திருக்கவேண்டும்.

‘நினைவூட்டல்லாம் வேண்டியதில்ல பாஸ். 6.30க்கு பிரசாத்ல இருக்கனும் அவ்வளவுதான...நான் வந்துர்றேன்’.


எனக்கு மேடைப்பேச்சு என்றாலே லெஃப்ட், ரைட், செண்டர், பேஸ்மெண்ட் இப்படி சகலமும் ஆட்டம் காண ஆரம்பித்துவிடும்.

பழனியப்பன் நேரெதிர். கல்லூரி காலத்திலிருந்தே பேச்சுப்புலி. [அது என்ன புலி?’ மனுசனை உங்களுக்கு மனுசனாவே பாக்கத்தெரியாதா?என்பார் ]. ஆனாலும் கிரவுட் ஃபண்டிங் குறித்து என்னத்தைப்பேசிவிட முடியும்? என்றுதான் நான் நினைத்தேன்.

’அரைவட்டி,முக்கால் வட்டி புழங்கிய நாட்களில்,20 ஆயிரம் புரட்டி, புத்தகம் வெளியிடுவதற்காக  இரண்டு வட்டி தருகிறேன்’ என்று நண்பர்களிடம் நூறு ரூபாய்க்கு கையேந்தி கடிதம் எழுதிய மகாகவியை முதல் கிரவுட் ஃபண்ட் அழைப்பாளர் என்று நினைவூட்டி, கலங்கடித்தார்.

‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
 நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’

என்று, கிரவுட் ஃபண்டிங் குறித்த குழப்பங்களுக்கு, அதே பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, ‘எதுவும் செய்ய விருப்பம் இல்லாட்டி சும்மா இருந்தாலே போதும்’ என்று ஆச்சரியமுடிச்சு போட்டார்.

அவரது பேச்சில், நானே மறந்து போன, எனது பழைய கதைகள் பலவந்துபோயின. ’ரொம்ப வருஷமாவே முத்துராமலிங்கம் ஒரு கோபக்கார பயபுள்ள’ என்றார். சில நிமிடங்கள் இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் போய், திரும்பவும் பிரசாத் லேப் இருக்கைக்கு திரும்புவதுமாக இருந்தேன்.

இளையராஜாவின் வெறிகொண்ட ரசிகர்களாய் நானும் நண்பன் தீஸ்மாஸ் டிசில்வாவும் நாளும் அலுக்காமல் பேசித்திரிந்த காலத்தை ரசிப்பதற்காகவே தானும் பலநாட்கள் தீஸ்மாஸின்  அச்சகத்துக்கு அடிக்கடி ஆஜரானதை நினைவு கூர்ந்தார்.

மொத்தத்தில் நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கினார்.  இதற்காகவே நேற்று இரவு நிகழ்வு முடிந்து பழனியப்பன் கிளம்பிப்போன நிமிடத்திலிருந்தே அவருக்கு நன்றி சொல்ல ஒரு போன் அடிக்கலாமா என்று யோசித்து, ஏனோ இந்த நிமிடம் வரை அதைச்செய்யவில்லை.

3 comments: