Monday, November 17, 2014

’மோகன்குமார் என்றொரு சாஃப்ட்வேர் சமையல் கலைஞன்’

கையெழுத்துப்போடுகிற வேலை ஒன்றை தவிர்த்து, காகிதத்தில் எழுதுகிற பழக்கம் நின்று,  அநேகமாக  4 வருடங்கள் ஓடிவிட்டது.  எனினும் சட்டைப்பையில் பேனா இல்லாமல் ஒருநாளும் வெளியே போனதில்லை.

சுமார் முப்பதாண்டுகாலப் பழக்கம். மும்பை ‘போல்டு இண்டியா’ லே-அவுட் வேலைகளுக்காக வாங்கி சொருகிக்கொள்ள ஆரம்பித்த  வெள்ளை நிற மைக்ரோ டிப் பேனாக்கள்,  இன்று வரை என் சட்டைப்பையை விட்டு இறங்கவில்லை.  அன்று 86, 87-களில் இரண்டு அல்லது  மூன்று ரூபாய்க்கு வாங்கிய பேனா இன்று 40 ரூபாய்.

அது ஒரு காலம்,  நண்பர்களுக்கு மாதத்தில் நூறு கடிதங்களுக்கும் மேல் எழுதிய நட்புக்காலம்.  நைட் ஷிஃப்ட் முடிந்து அதிகாலை 4 மணிக்கு கூட கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது.  [ஆனால் அவற்றில் ஒன்றுகூட காதல் கடிதம் இல்லை. அப்போதெல்லாம் பார்க்க படு ஸ்மார்ட்டாக ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரஜினி ஸ்டைலில்  இருப்பேன். ஆனால் எவளுக்கும் காதல் கடிதம் எழுதும் பாக்கியம் எனக்கு கிட்டியதில்லை.] எனக்கும் ’போல்டு இந்தியா’ அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கடிதங்களாவது வந்த வண்ணம் இருக்கும். அனைத்தும் வெட்டிக்கதைகள் பேசும்  வருத்தமில்லா வாலிபர் சங்கக்கடிதங்கள்.

எதாவது ஒரு சங்கதிக்கு பீடிகை போட ஆரம்பிக்கும்போது, அதை சுருக்’கென முடித்துக்கொள்ள முடிவதில்லை. கிழவனாகிக்கொண்டிருப்பதன் முதல் அறிகுறி இதுவென நினைக்கிறேன்.

இன்று நான் சொல்லவந்த சங்கதிக்கும், மேற்படி பீடிகைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஆனாலும் இருக்கிறது.

ரொம்ப காலத்திற்குப் பிறகு, ஒரு பதிவை, காகிதத்தில் எழுதிப்பார்த்து, பின்னர் தட்டச்சு செய்கிறேன்.

காகிதத்தில் எழுதிப்பார்க்கும் ஆசை என்பதை விட, இந்தப்பதிவில் நான் எழுதப்போகும் நண்பர் மோகன்குமாரை   @mohan kumar,  இவ்விதமின்றி,  நான் வேறு எப்படி கவுரப்படுத்தி விடமுடியும் என்று தோன்றவில்லை.

www.moviefunding.in க்கு அவர் உதவ முன்வந்த விதம் அத்தனை 'சுவையான' ஒன்று.
மோகன்குமார்

இத்தனைக்கும்,  ஃபேஸ்புக் சாட்டில் ஒன்றிரண்டுமுறை ‘ஹாய் ஹலோ’ கடந்த ஒரு வாரத்துக்கு நாட்களுக்கு முன்பு,  சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் சுமார் ஒருமணி நேர சந்திப்பு தாண்டி இந்த மோகன்குமாரை எனக்கு முன்னப்பின்ன சத்தியமாக தெரியாது.

செய்திக்கு வருகிறேன்.

மூவி ஃபண்டிங் திட்டத்தின் வெற்றியை,  நானும் ஜெய்லானியும்,  அவ்வளவு சுலபமான நிகழும் என்றெல்லாம் கணிக்கவில்லை. நாங்கள் இழுக்க விரும்பிய தேர் எத்தகைய அசுரத்தனமானது என்பதை நாங்கள் அறிந்தே இறங்கினோம்.  அதை எதிர்கொள்ள வெறும் பலம் மட்டும் போதாது, சில உபாயங்களும் இருந்தால்தான் வெற்றியை எட்டமுடியும் என்று தோன்றியது.

அதை ஒட்டிதான் படத்திற்கு தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் பிரித்து  உதவிகள் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது. [ஓ இதுதான் பிரிச்சி மேயுறதுங்குறதா?]  முதல் முத்திரையாக மேளதாளம் முழங்க  ‘சவுண்டு பார்ட்டி’ சுதர்ஷன் லிங்கம் வந்தார். [ விபரம் அவரது பதிவில் படிங்க]  அவருக்காக எழுதிய பதிவின் இறுதியில் நாசூக்காக ’படப்பிடிப்புக்குழுவுக்கு அன்னமிட யாராவது முன்வருகிறீர்களா?’ என்று வேண்டுகோள் வைத்திருந்தோம்.

அதைப்படித்த அடுத்த நிமிடம்,  என் எண்ணை சாட்டில் பெற்றுக்கொண்டு அலைபேசியில் வந்தார் ,பெங்களூரில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் மோகன்குமார்.

‘நாளை என் அலுவலக வேலையாக சென்னை வருகிறேன். க்ரீன் பார்க் ஹோட்டலில்தான் தங்கியிருப்பேன். வாங்க சந்திக்கலாம். இரண்டு படங்களுக்குமான உணவுச்செலவு எவ்வளவு ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு படத்துக்காவது என்னால் உதவமுடியும் என்று நினைக்கிறேன்’

பார்ட்னர் ஜெய்லானிக்கு அன்று பாண்டிச்சேரியில் மூவிஃபண்டிங் தொடர்பான முக்கிய சந்திப்பு இருந்ததால் நான் மட்டுமே மோகன்குமாரை சந்தித்தேன்.

சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே இருபட உணவு பட்ஜெட்களையும் பார்த்துவிட்டு,  ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ படத்துக்கான மொத்த உணவுச்செலவு 2 லட்சத்து 50 ஆயிரத்தை, தான் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல்,  ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டே மற்ற உரையாடல்கள் தொடர்ந்தது.

சாப்ளின் குமார்
அந்த உரையாடலில், இருப்பது சாஃப்ட்வேர் துறையில் என்றாலும் மோகன்குமாரை

இசையும்,சினிமாவுமே அதிகம் ஆட்கொண்டிருப்பது அறிந்துகொள்ள முடிந்தது.  தெரியாதது குறித்து கேட்கும்போது ஒரு குழந்தையாகவே மாறி  கேள்விகள் கேட்பவராக இருந்தார்.  சார்லி சாப்ளின் குறித்து நீங்கள் நல்லவிதமாய் நாலுவரிகள் பேசிவிட்டால் அவரிடமிருந்து சில பீர்களையும் டின்னரையும் கரெக்ட் பண்ணிவிடமுடியும் என்று சுலபமாய் யூகிக்க முடிந்தது.

இந்த சந்திப்பு நடந்த அடுத்த ஐந்தாவது  நாள்,  அதாவது கடந்த வெள்ளியன்று, தான் ஏற்றுக்கொண்ட தொகையில் ஐந்தில் நான்குபங்கை வங்கியில் நெட் பரிமாற்றம் செய்தார்.[ மீதி ஆன் த வே.]

தாய்மனசுடன் மோகன் செய்த நெட் பணப்பரிமாற்றம், என் படத்தின் முதல் நாள்  தொடங்கி ‘பேக் அப்’சொல்லும் இறுதிநாள் வரை, அவர் பெயரால் நடக்கும் உணவுப்பரிமாற்றமாகவே இருக்கும்.

கிரீன் பார்க்கிலிருந்து கிளம்பும்போது, ‘ஒருசின்ன கேரக்டர்லயாவது தலையக்காட்டுங்களேன் சார்’ என்றபோது, ‘நமக்கு நடிப்பு வேண்டாம் சார். கதை விவாதம், ஷூட்டிங் சமயங்கள்ல வேணா கூப்பிடுங்க சார். என்னால முடிஞ்ச ஒத்தாசையை செய்யிறேன். எனக்கு சமையல்லயும் நல்ல இண்ட்ரஸ்ட். ஒரு நாளைக்கு உங்க யூனிட்டுக்கு கூட சமைச்சுப்போடுறேன்’ என்றார் சிரித்தபடி.

ஆச்சரியமாக இருந்தது.  ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர்  சினிமா ஷூட்டிங்கில், அடர்ந்த காட்டுப்பகுதியில், விறகு அடுப்பில்,  யூனிட் மக்களுக்காக சமைப்பதை கற்பனை செய்து பார்த்தேன். செம ரகளையான வொர்க்கிங் ஷாட்ஸ் உறுதி.

‘எனக்கும் சமைக்கப்பிடிக்கும். அப்ப உங்களுக்கும் எனக்கும் ஒருநாள்  ஷூட்டிங் ஸ்பாட்ல சமையல் போட்டி இருக்கு சார்’ என்றபடி, நன்றி கூறி விடைபெற்றேன்.

இன்னொரு நாலைந்து மோகன்குமார்கள் முன்வந்தால்... இந்த இரண்டு படங்கள் என்ன...எதுவும் எட்டிவிடும் தூரம்தான்.

‘சவுண்டு கேமரா ஆக்‌ஷன்’  பட உணவு பட்ஜெட்டும் ஏறத்தாழ இதுதான்.  நீங்க கால் பண்னுனா நாங்க டீடெய்ல்ஸ் மெயில் பண்ணுறோம்.
www.moviefunding.in 9840914026 9500092255 support@moviefunding.in

1 comment:


  1. ‘சவுண்டு கேமரா ஆக்‌ஷன்’ பட உணவு பட்ஜெட்டும் ஏறத்தாழ இதுதான். நீங்க கால் பண்னுனா நாங்க டீடெய்ல்ஸ் மெயில் பண்ணுறோம்.
    www.moviefunding.in 9840914026 9500092255 support@moviefunding.in

    ReplyDelete