Sunday, November 23, 2014

' ஒரு முரட்டு மனிதனின் வறட்டு பயணக்கட்டுரை’



’அண்ணன் அடுத்த வாரம் மலேசியா, சிங்கப்பூர் பயணம் போறாரு. திரும்பி வந்தவுடனே ‘ஓஹோ’வுல கண்டிப்பா பயணக்கட்டுரைகளை எழுதி நம்ம எல்லாரையும்  இம்சை பண்ணுவாரு’.

’சும்மாவே தையா தக்கான்னு ஆடுற மனுசன்... கால்ல தங்கச்சலங்கையைக் கட்டிவிட்டா?’

பயணம் உறுதியானதை அறிவித்ததிலிருந்தே, இப்படியான சில மைண்ட் வாய்ஸ்கள் எனது இடது வலது, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பக்கங்களில் வலம் வந்துகொண்டிருப்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். [அலோ தங்கச்சங்கிலியக்கட்டிவிட்டா நாங்க ஆடமாட்டோம். உடனே ஓடிப்போய் அடமானம்தான் வைப்போம்ங்கிறதை அவை அடக்கத்தோடு தெரியப்படுத்துகிறேன்]

அச்சம் வேண்டாம். சத்தியமாக எனக்கு பயணக்கட்டுரைகள் எழுதவராது.  அப்படியே எழுதினாலும், முன்குறிப்பாக ‘எச்சரிக்கை. இது முரட்டு மனிதன் ஒருவனின் வறட்டு பயணக்கட்டுரை.  இந்த ப.க.படிப்பதை அலர்ஜியாக உணருபவர்கள்  இந்தக்கட்டுரைக்குள் பயணிக்கவேண்டாம்’ -இப்படி ஒன்றை எழுதிவைத்துவிடுகிறேன். ஓ.கே.வா?’.

தொடர்ந்து எழுதாமல் நான் தான் சொதப்புகிறேனே ஒழிய, ’ஓஹோ’ நண்பர்கள்  பலரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள்.  உதாரணத்துக்கு, ஒரு நான்கு தினங்கள் முன்பு, சிங்கப்பூர், மலேசிய பயணம் குறித்து, ‘பாஸ்போர்ட் இங்கே பயணம் எங்கே?’ என்று  ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டேன்.

அப்பதிவை இட்ட இரண்டாவது நிமிடம், என் இன்பாக்ஸுக்குள் வந்த சிங்கப்பூர் செந்தமிழர் ஒருவர் ’என் பெயரை இப்போதைக்கு குறிப்பிடவேண்டாம்’  என்ற அன்புக் கட்டளையுடன் எனது வருகை, செல்கை டிக்கட் மற்றும் விசா செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, அதை அடுத்தநாளே செய்துமுடித்து டிக்கட்டுகளையும் எனக்கு மெயில் செய்துவிட்டார்.

சரி மேட்டருக்கு வருகிறேன்.

வரும் புதன் இரவு ஃப்ளைட்டில் நானும், வியாழன் இரவு ஃப்ளைட்டில் நண்பர் ஜெய்லானியுமாக https://www.facebook.com/mjailani    சிங்கப்பூர் வருகிறோம். வெள்ளி,சனிகளில் சிங்கப்பூரிலும், ஞாயிறு, திங்கள்களில் மலேசியாவிலும் நடமாட உத்தேசம்.

உண்மையில் சிங்கப்பூர், மலேசியாவைப் பொறுத்தவரை நான் இப்போதைக்கு ‘நேக்கு இங்க யாரைத்தெரியும்?’ கேஸ்தான்.

’படியில் நின்று அடம்பிடித்தாவது உங்க மடியில் இடம்பிடிப்பேன்’

பயணத்தின் முக்கிய நோக்கம் மூவிஃபண்டிங்  http://www.moviefunding.in/ தொடர்பாக ஏற்கனவே போனில் பேசிய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திப்பதுதான்.

நடிக்க விருப்பமுள்ளவர்கள், அல்லது   சினிமாவில் வேறெதாவது ஒரு பிரிவில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் எங்களோடு தங்களை இதில் இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் பங்கெடுத்துக்கொண்ட அடுத்த நிமிடத்திலிருந்து, எங்கள் செயல்பாடுகள் அனைத்தும், உங்களுக்கு வெளிப்படையாக தொடர்ந்து பகிரப்படும்.

இதுகுறித்து விரிவாக பேச விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்...
என் மெயில் ஐ.டி. muthuramalingam30@gmail.com.     mobile no; 98409 14026 .

அதெல்லாம் ஓகே.... இந்த ஆண்ட்டிகளுக்கு இங்கே என்ன வேலை? என்ற சின்ன குழப்பம் உங்களுக்கு வரத்தான் செய்யும். 

நான் புதனன்று ஏறக்கூடிய ஃப்ளைட்டில் இந்த ஆண்ட்டிகள் ஏர்ஹோஸ்டஸ்களாக வந்தால்தான் நான் ஃப்ளைட்டில் ஏறுவேன். அதுவரை படிக்கட்டில் நின்று அடம்பிடிப்பேன் என்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.


Monday, November 17, 2014

’மோகன்குமார் என்றொரு சாஃப்ட்வேர் சமையல் கலைஞன்’

கையெழுத்துப்போடுகிற வேலை ஒன்றை தவிர்த்து, காகிதத்தில் எழுதுகிற பழக்கம் நின்று,  அநேகமாக  4 வருடங்கள் ஓடிவிட்டது.  எனினும் சட்டைப்பையில் பேனா இல்லாமல் ஒருநாளும் வெளியே போனதில்லை.

சுமார் முப்பதாண்டுகாலப் பழக்கம். மும்பை ‘போல்டு இண்டியா’ லே-அவுட் வேலைகளுக்காக வாங்கி சொருகிக்கொள்ள ஆரம்பித்த  வெள்ளை நிற மைக்ரோ டிப் பேனாக்கள்,  இன்று வரை என் சட்டைப்பையை விட்டு இறங்கவில்லை.  அன்று 86, 87-களில் இரண்டு அல்லது  மூன்று ரூபாய்க்கு வாங்கிய பேனா இன்று 40 ரூபாய்.

அது ஒரு காலம்,  நண்பர்களுக்கு மாதத்தில் நூறு கடிதங்களுக்கும் மேல் எழுதிய நட்புக்காலம்.  நைட் ஷிஃப்ட் முடிந்து அதிகாலை 4 மணிக்கு கூட கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது.  [ஆனால் அவற்றில் ஒன்றுகூட காதல் கடிதம் இல்லை. அப்போதெல்லாம் பார்க்க படு ஸ்மார்ட்டாக ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரஜினி ஸ்டைலில்  இருப்பேன். ஆனால் எவளுக்கும் காதல் கடிதம் எழுதும் பாக்கியம் எனக்கு கிட்டியதில்லை.] எனக்கும் ’போல்டு இந்தியா’ அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கடிதங்களாவது வந்த வண்ணம் இருக்கும். அனைத்தும் வெட்டிக்கதைகள் பேசும்  வருத்தமில்லா வாலிபர் சங்கக்கடிதங்கள்.

எதாவது ஒரு சங்கதிக்கு பீடிகை போட ஆரம்பிக்கும்போது, அதை சுருக்’கென முடித்துக்கொள்ள முடிவதில்லை. கிழவனாகிக்கொண்டிருப்பதன் முதல் அறிகுறி இதுவென நினைக்கிறேன்.

இன்று நான் சொல்லவந்த சங்கதிக்கும், மேற்படி பீடிகைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஆனாலும் இருக்கிறது.

ரொம்ப காலத்திற்குப் பிறகு, ஒரு பதிவை, காகிதத்தில் எழுதிப்பார்த்து, பின்னர் தட்டச்சு செய்கிறேன்.

காகிதத்தில் எழுதிப்பார்க்கும் ஆசை என்பதை விட, இந்தப்பதிவில் நான் எழுதப்போகும் நண்பர் மோகன்குமாரை   @mohan kumar,  இவ்விதமின்றி,  நான் வேறு எப்படி கவுரப்படுத்தி விடமுடியும் என்று தோன்றவில்லை.

www.moviefunding.in க்கு அவர் உதவ முன்வந்த விதம் அத்தனை 'சுவையான' ஒன்று.
மோகன்குமார்

இத்தனைக்கும்,  ஃபேஸ்புக் சாட்டில் ஒன்றிரண்டுமுறை ‘ஹாய் ஹலோ’ கடந்த ஒரு வாரத்துக்கு நாட்களுக்கு முன்பு,  சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் சுமார் ஒருமணி நேர சந்திப்பு தாண்டி இந்த மோகன்குமாரை எனக்கு முன்னப்பின்ன சத்தியமாக தெரியாது.

செய்திக்கு வருகிறேன்.

மூவி ஃபண்டிங் திட்டத்தின் வெற்றியை,  நானும் ஜெய்லானியும்,  அவ்வளவு சுலபமான நிகழும் என்றெல்லாம் கணிக்கவில்லை. நாங்கள் இழுக்க விரும்பிய தேர் எத்தகைய அசுரத்தனமானது என்பதை நாங்கள் அறிந்தே இறங்கினோம்.  அதை எதிர்கொள்ள வெறும் பலம் மட்டும் போதாது, சில உபாயங்களும் இருந்தால்தான் வெற்றியை எட்டமுடியும் என்று தோன்றியது.

அதை ஒட்டிதான் படத்திற்கு தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் பிரித்து  உதவிகள் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது. [ஓ இதுதான் பிரிச்சி மேயுறதுங்குறதா?]  முதல் முத்திரையாக மேளதாளம் முழங்க  ‘சவுண்டு பார்ட்டி’ சுதர்ஷன் லிங்கம் வந்தார். [ விபரம் அவரது பதிவில் படிங்க]  அவருக்காக எழுதிய பதிவின் இறுதியில் நாசூக்காக ’படப்பிடிப்புக்குழுவுக்கு அன்னமிட யாராவது முன்வருகிறீர்களா?’ என்று வேண்டுகோள் வைத்திருந்தோம்.

அதைப்படித்த அடுத்த நிமிடம்,  என் எண்ணை சாட்டில் பெற்றுக்கொண்டு அலைபேசியில் வந்தார் ,பெங்களூரில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் மோகன்குமார்.

‘நாளை என் அலுவலக வேலையாக சென்னை வருகிறேன். க்ரீன் பார்க் ஹோட்டலில்தான் தங்கியிருப்பேன். வாங்க சந்திக்கலாம். இரண்டு படங்களுக்குமான உணவுச்செலவு எவ்வளவு ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு படத்துக்காவது என்னால் உதவமுடியும் என்று நினைக்கிறேன்’

பார்ட்னர் ஜெய்லானிக்கு அன்று பாண்டிச்சேரியில் மூவிஃபண்டிங் தொடர்பான முக்கிய சந்திப்பு இருந்ததால் நான் மட்டுமே மோகன்குமாரை சந்தித்தேன்.

சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே இருபட உணவு பட்ஜெட்களையும் பார்த்துவிட்டு,  ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ படத்துக்கான மொத்த உணவுச்செலவு 2 லட்சத்து 50 ஆயிரத்தை, தான் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல்,  ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டே மற்ற உரையாடல்கள் தொடர்ந்தது.

சாப்ளின் குமார்
அந்த உரையாடலில், இருப்பது சாஃப்ட்வேர் துறையில் என்றாலும் மோகன்குமாரை

இசையும்,சினிமாவுமே அதிகம் ஆட்கொண்டிருப்பது அறிந்துகொள்ள முடிந்தது.  தெரியாதது குறித்து கேட்கும்போது ஒரு குழந்தையாகவே மாறி  கேள்விகள் கேட்பவராக இருந்தார்.  சார்லி சாப்ளின் குறித்து நீங்கள் நல்லவிதமாய் நாலுவரிகள் பேசிவிட்டால் அவரிடமிருந்து சில பீர்களையும் டின்னரையும் கரெக்ட் பண்ணிவிடமுடியும் என்று சுலபமாய் யூகிக்க முடிந்தது.

இந்த சந்திப்பு நடந்த அடுத்த ஐந்தாவது  நாள்,  அதாவது கடந்த வெள்ளியன்று, தான் ஏற்றுக்கொண்ட தொகையில் ஐந்தில் நான்குபங்கை வங்கியில் நெட் பரிமாற்றம் செய்தார்.[ மீதி ஆன் த வே.]

தாய்மனசுடன் மோகன் செய்த நெட் பணப்பரிமாற்றம், என் படத்தின் முதல் நாள்  தொடங்கி ‘பேக் அப்’சொல்லும் இறுதிநாள் வரை, அவர் பெயரால் நடக்கும் உணவுப்பரிமாற்றமாகவே இருக்கும்.

கிரீன் பார்க்கிலிருந்து கிளம்பும்போது, ‘ஒருசின்ன கேரக்டர்லயாவது தலையக்காட்டுங்களேன் சார்’ என்றபோது, ‘நமக்கு நடிப்பு வேண்டாம் சார். கதை விவாதம், ஷூட்டிங் சமயங்கள்ல வேணா கூப்பிடுங்க சார். என்னால முடிஞ்ச ஒத்தாசையை செய்யிறேன். எனக்கு சமையல்லயும் நல்ல இண்ட்ரஸ்ட். ஒரு நாளைக்கு உங்க யூனிட்டுக்கு கூட சமைச்சுப்போடுறேன்’ என்றார் சிரித்தபடி.

ஆச்சரியமாக இருந்தது.  ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர்  சினிமா ஷூட்டிங்கில், அடர்ந்த காட்டுப்பகுதியில், விறகு அடுப்பில்,  யூனிட் மக்களுக்காக சமைப்பதை கற்பனை செய்து பார்த்தேன். செம ரகளையான வொர்க்கிங் ஷாட்ஸ் உறுதி.

‘எனக்கும் சமைக்கப்பிடிக்கும். அப்ப உங்களுக்கும் எனக்கும் ஒருநாள்  ஷூட்டிங் ஸ்பாட்ல சமையல் போட்டி இருக்கு சார்’ என்றபடி, நன்றி கூறி விடைபெற்றேன்.

இன்னொரு நாலைந்து மோகன்குமார்கள் முன்வந்தால்... இந்த இரண்டு படங்கள் என்ன...எதுவும் எட்டிவிடும் தூரம்தான்.

‘சவுண்டு கேமரா ஆக்‌ஷன்’  பட உணவு பட்ஜெட்டும் ஏறத்தாழ இதுதான்.  நீங்க கால் பண்னுனா நாங்க டீடெய்ல்ஸ் மெயில் பண்ணுறோம்.
www.moviefunding.in 9840914026 9500092255 support@moviefunding.in

Saturday, November 8, 2014

’இசைஞானி என்னைப்பாட அழைப்பாரா?’


’சுதர்சன லிங்கம்’ என்கிற இந்தப்பெயரை இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தெரியாது.
மூவிஃபண்டிங் தொடர்பாக நாம் அறிவித்த இரண்டாவது நாளில் முகநூலில் சாட்டிங்கில் வந்தார்.https://www.facebook.com/soundpartistudios
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, மிகக்குறைவாகவே சில சந்தேகங்கள் கேட்டார்.

‘இது ஒரு பிரமாதமான முயற்சி. என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நானும் இதில் பங்குதாரராக இணைகிறேன்’.
அடுத்த ஒரு மணிநேரத்தில் நாங்கள் அசோக் நகரிலுள்ள சுதர்சன லிங்கத்தின் ‘சவுண்ட் பார்ட்டி’ ஸ்டுடியோவில் ஆஜர்.

சுமார் ஒருமணிநேர உரையாடலில் அவரது இன்னொருமுகம் தெரிந்தது. ஐ.டி நிறுவனம் ஒன்றில் வருமானத்துக்காக வேலை பார்த்துக்கொண்டே, தனது சினிமாவை கனவை, பொத்திப்பாதுகாக்க தனது சவுண்டு பார்ட்டியை நடத்தி வருகிறார் என்பது புரிந்தது. பணத்தில் கெடுபிடி காட்டாத கலைஞனாக இருந்ததால், குறும்பட இயக்குநர்களின் வேடந்தாங்கலாக சுதர்சனின் ஸ்டியோ இருப்பதை சற்றுநேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிந்தது.

‘உண்மையில் நான் பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்து இந்த திட்டம் வெற்றிபெற உதவவேண்டும் என்றே விரும்பினேன். ஏனெனில்சில ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர்களுடன் சிலருடன் இணைந்து இது போன்றதொரு முயற்சியில் ஈடுபட்டு பெரும் வலியுடன் தோற்றுப்போனோம். உங்கள் முயற்சி அப்படி ஆகக்கூடாது. நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’- சுதர்சன்.

’உங்கள் சூழல் எங்களுக்குத்தெரியாது. உணர்வு பூர்வமான உங்கள் ஆதரவே எங்களுக்கு மாபெரும் உந்து சக்தி’. நீங்கள் எந்த ரூபத்தில் உதவினாலும் ஏற்றுக்கொள்கிறோம்’ -இது நாங்கள்.


அதிகம் யோசிக்காமல் சுதர்சன் தனது பரந்த மனதைத் திறந்தார்.

இசையமைப்பாளர் உங்கள் விருப்பம். மற்றபடி, உங்கள் இரு படங்களுக்குமான பின்னணி இசைக்கோர்ப்பு, பாடல்கள் ,பாடகர்கள், இசைக்கலைஞர்கள், எஃபெக்ட்ஸ் தொடங்கி ஃபைனல் மிக்ஸிங் வரை அனைத்துக்குமான பட்ஜெட்டை கொடுங்கள். என் தியேட்டர் வாடகை உட்பட அவை அத்தனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ - தனது பெருந்தன்மையை வார்த்தைகளாக கொட்டினார் சுதர்சன்.

அலுவலகம் வந்து இருபடங்களுக்குமான தோராய செலவினங்களை பட்டியலிட்டபோது மொத்தம் ஒன்பது லட்சமாக வந்து நின்றது.
மெயில் அனுப்பிக் காத்திருந்தால்,...

அடுத்த பத்துநிமிடங்களில்..

‘இரண்டு படங்களுக்குமான மேற்படி செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒப்பந்தத்தை தயார் செய்து வையுங்கள் உங்கள் அலுவலகம் வந்தே கையெழுத்திடுகிறேன்’ என்று பதில் வந்தது. இன்று அவரது ஸ்டுடியோவுக்கு சென்றே கையெழுத்திட்டோம்.

நமது சங்கத்துக்கு சுதர்சன லிங்கம் என்ற சொக்கத்தங்கம் வந்த கதை இது.

அடுத்த தேடல், நம் இரு படங்களுக்குமான உணவுச்செலவுகளை ஏற்றுக்கொள்ள ஒரு அன்னலட்சுமியோ அல்லது அன்னலட்சுமணனையோ உள்ளே கொண்டுவர முயல்வது.... ஏய்ய்ய்ய் செல்ஃபி புள்ள  அன்னலட்சுமி நீ எங்க இருக்க?’


www.moviefunding.in

பி.குறிப்பு; கடைசி ஸ்டில்லைப் பார்த்து ’ஐயகோ இந்த மனுசன் பாடவும் ஆரம்பிச்சாட்டானா?’ என்று யாரும் பீதியடையவேண்டாம். இது ச்சும்மா மைக் டெஸ்டிங்...ஒன் ,...டூ... த்ரீ தான்.
இசைஞானியைத்தவிர வேறு யார் இசையமைப்பிலும் பாடுவதில்லை என்று சின்னவயசில் செய்துகொண்ட சத்தியத்தில் எப்போதும் போலவே உறுதியாக இருக்கிறேன்.

Monday, November 3, 2014

'சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’

’பட ரிலீஸுக்கு அப்புறம் உங்க புரடியூசரை மீட் பண்ணீங்களா?’
இயக்குநர்களைப் பார்த்து, மிக சாதாரணமாக, சக சினிமாக்காரர்கள் கேட்கும் கேள்வியில் எத்தனை அர்த்தங்கள் உண்டென்று இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
நானும் இந்தக்கேள்வியை ‘சிநேகாவின் காதலர்கள்’ ரிலீஸுக்குப் பின்னர் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன்.
‘எப்பிடியும் கட்டி உருண்டிருப்பாங்க’ கேள்வியாளர்களின் மைண்ட்வாய்ஸ் பெரும்பாலும் இதுதான் என்பதையும் நான் அறிவேன்.
இந்தப்பதிவு அவர்களுக்கான பதிலாகவும், அத்தோடு நமது மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கிற்கான (www.moviefunding.in) அடுத்த முக்கிய நிகழ்வை அறிவிப்பதாகவும் இருப்பதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
உண்மையில் இத்திட்டம் குறித்து நானும் நண்பர் ஜெய்லானியும் முதலில் பகிர்ந்துகொண்டது எனது முதல்பட தயாரிப்பாளரும், தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. கலைக்கோட்டுதயத்திடம் தான்.

சொல்லி முடிக்குமுன் அவர் கேட்ட முதல்கேள்வியே, ’இத்திட்டத்திற்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?’ என்பதுதான். பதிலுக்கு நான் வைத்த கோரிக்கை குறித்து ஒருகணமும் யோசிக்காமல் உதவ முன்வந்தார். நான் அவரிடம் வைத்த கோரிக்கை ஒரு படத்தை எடுத்து முடிக்க அடிப்படையான கேமரா மற்றும் அது தொடர்பான அனைத்து உபகரணங்களும் [முழுவிபரங்களை இந்த லிங்க்-ல் பாருங்கள்: http://www.soundcameraaction.com/blackmagic-4k-camera-comp…/ ]
பணமாக பதினைந்து லட்சம் கேட்டு என் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ படபட்ஜெட்டில் மேலும் ஒரு இருபது சதவிகிதவருவாயை உயர்த்தியிருக்கமுடியும்.
அதைவிட எனக்கு இது இன்னும் உகந்ததாக பட்டது. முதல்படியாக நண்பர் ஜெய்லானியின் ‘சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’ படத்திற்கு, இந்த கேமரா உட்பட்ட உபகரணங்கள் முழுமையாய் பயன்படுத்த திரு.கலை அனுமதித்திருக்கிறார்.
நாளை நமது நண்பர்கள் சிலருக்கும் பாதி தள்ளுபடி வாடகைக்கு தர பயன்படலாம் போன்ற பல உத்தேசங்களுடனேயே நான் கேமராவாக வேண்டுகோளை வைத்தேன்.
அந்த வகையில் எனது படத்திற்கு கேமரா உள்ளிட்ட உபகரணங்களின் வாடகையாக ரூ 5 லட்சத்தை கலை அவர்களின் பங்களிப்பாகவும், நண்பர் ஜெய்லானியின் படத்திற்கு ரூ 4 லட்சத்தையும் ஏற்றுக்கொண்டு, பெரும் உதவிக்கரம் நீட்டியமைக்காக நன்றி தெரிவிக்கிறோம்.
இத்திட்டத்தின் உற்றதோழனாய் எங்களுடன் பயணித்து, தேவைப்பட்டால் இனியும் உதவிக்கரம் நீட்டத்தயாராய் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.