Thursday, October 30, 2014

பிரபாகர் முதல் பிரபாகர் வரை

ஃபேஸ்புக்கில் இடுவதற்காக எழுத ஆரம்பித்த பதிவு, சற்றே நீளமாகி,கொஞ்சம் ஆழமாகவும் ஆகிவிட்டதால் ஓஹோவுக்கும் வந்து சேர்ந்துவிட்டது. பிரபாகர் என்கிற பெயரில் எனக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். ஒருவன் மிக இளம் வயதிலேயே தவறிவிட்டான். அடுத்த பிரபாகர் எஸ்.கே. முருகனின் நண்பராக இருந்து எனக்கு நண்பரானவர்.81-ல் துவங்கி 33 கால நட்பு. அடுத்த பிரபாகர், நான் படித்த கே.வி.எஸ்சில் தான் படித்தவர் என்றாலும் சந்திப்பு நடந்ததென்னவோ அமெரிக்கன் கல்லூரியில்தான்.82-ல் துவங்கி, என் ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்துக்கு இசையமைத்தது வரை மனதுக்கு மிக நெருக்கமான நட்பு.இன்றும் மதுரை செல்லும்போதெல்லாம் என் சொந்த வீட்டுக்குச் செல்லும் உரிமையுடன் செல்லும் வீடு ப்ரபாவுடையது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவரது துணைவியார் மல்லிகா. அவர்களது காதலின் துவக்கப்புள்ளியிலிருந்து நானும் ஒரு பார்வையாளன் என்பதால், மல்லிகாவால் என்னை ஒருநாளும் அந்நியன் போல் பாவிக்கமுடியவில்லை என்று அனுமானிக்கிறேன். அடுத்த பிரபாகர், மேற்படி ப்ரபாவால் எனக்கு அறிமுகமானவர். பிரபாகர்களை இனம் பிரிக்க, குள்ள பிரபாகர் என்று எங்களால் செல்லமாக அழைக்கபடும் அவரும் 90 களின் மத்தியில் அறிமுகமானார். அந்த சமயத்தில் அவர் வைத்திருந்த கதைகளையும், சொன்ன விதங்களையும் பார்த்து வியந்து, இவரெல்லாம் இன்னும் ஆறே மாதத்தில் இயக்குநராகிவிடுவார் என்று அவ்வளவு உறுதியாக நம்பினேன்.[கோர்வையாக கதை சொல்லத்தெரியாத நானே கூட ஒரு படம் இயக்கிவிட்டேன். அவருக்கு நடந்த காலக்கொடுமையை என்னவென்று சொல்ல?] இந்த பிரபாகர் மூலம் அறிமுகமானவர், இந்த பதிவின் நாயகன் ஐந்தாவது பிரபாகர். நான் சந்தித்த சமயத்தில் HCL நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவர் HCLபிரபாகர். இவரும்90 களின் மத்தியிலிருந்து மிக நெருக்கமான நண்பர். இவர் குறித்து ஒரு தகவல் சொல்கிறேன். அதை சினிமாவில் ஒரு சீனாக வைத்தாலும் நம்ப மாட்டீர்கள். அந்த சமயத்தில் வள்ளுவர் கோட்டத்தில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். எனக்கு தங்குவதற்கு தனி அறை இருந்தாலும்,பெரும்பாலும் புழங்குவது இங்கேதான். பிரபாகர் அப்போது பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். சம்பளம் வாங்கியதும் அதைக்கொண்டு வந்து, பூட்டாத சூட்கேஸில் அப்படியே வைத்துவிடுவார். நாங்கள் எடுத்து செலவு செய்துகொண்டே இருப்போம். பிறகு அடுத்த மாச சம்பளம்,அதற்கடுத்த மாச சம்பளம். அந்த வீடு அப்படித்தான் இயங்கிக்கொண்டிருந்தது. இதை பெரும்பாலானோர் நம்பப்போவதில்லை. ஆனால் சத்தியம். சமீப காலங்களில் இவர் செய்து வந்த உதவிகளை பட்டியலிட முடியாது. அடுத்த படம் நண்பர்களின் உதவியுடம் கிரவுட் ஃபண்டிங் [http://www.moviefunding.in/]முறையில் முயற்சிக்கலாம் என்று முடிவு செய்தபோது நூறு ரூபாயாக இருந்தாலும் முதல் பணம் பிரபாவுடையதாக இருக்குவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று என் பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையுடன் வரவேண்டியவர், என் படத்தின் பட்ஜெட்டில் பத்து சதவிகிதத்தை[ஏழு லட்சத்துஐம்பதினாயிரம்] செக்காக வழங்கி என்னை நெகிழ்வித்தார். இப்படி ஒரு பரவசமான பிறந்தநாள் பரிசை நான் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு ஸ்டில்லுக்கு நிற்பதற்காக படாத பாடு படுத்துபவர் என்பதால், படத்தில் நடிக்கும் ஆசை அவர்க்கு துளியும் இல்லை. ’இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ பாடுவதைத்தவிர வேறொன்றறியேன் பராபரமே.