Tuesday, February 19, 2013

’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்





 படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள். இந்தமாதிரியான முன்னார்வ ஷோக்கள் பலமுறை  வெறுமனே ஆர்வக்கோளாறு ஷோக்களாகவே மாறி படம் ரிலீஸான பிறகும் விமர்சனம் எழுதமுடியாத தர்மசங்கடமாகவே பெரும்பாலும் மாறிவிடும்.
ஆனால் ‘ஹரிதாஸ்’ வெகுநாட்களுக்குப் பிறகு, வந்திருக்கும் மிக அருமையான படம்.
தங்கள் வீட்டிலேயே அப்படிப்பட்ட பிள்ளை இருந்தபோதிலும், அந்நோயின் பெயர், அதை எப்படி எதிர்கொள்வது என்று விழிப்புணர்வு இல்லாத, ’ஆட்டிஸம்’ பாதிப்புற்ற சிறுவன் தான் படநாயகன்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான கிஷோரின் மனைவி பிரசவத்தின்போது இறந்துவிட, மனப்பிறழ்வு [ஆட்டிஸம்] பாதிப்படைந்த அவரது மகன், பாட்டியிடம் வளர்கிறான். பணியில் இருக்கும் ஒரு தினம், கிஷோருக்கு அவரது அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப்போய் திரும்பி வருகையில், உறவினர்களிடம் மகனை ஒப்படைக்க விரும்பாமல் தன்னோடே அழைத்து வருகிறார்.
பேச்சுவராத, தன்னை ஏறிட்டும் பாராத, வேறொரு உலகில் வாழும் சிறுவனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்று ஒரு கட்டத்தில் குமுறி அழும் கிஷோர், குழந்தை மருத்துவர் யூகிசேதுவை சந்தித்தவுடன் ‘ஆட்டிஸம்’ சம்பந்தமான சில தெளிவுகள் பெற்று மகனுக்காக சில மகத்துவ காரியங்களில் ஈடுபட்டு அவனை எப்படித்தேற்றுகிறார் என்பதுதான் கதை. இதனை ஒட்டிய பக்கத்து டிராக்கில்,கிஷோரின் என்கவுண்டர் நண்பர்கள், இவரது எதிரிகள் சம்பந்தமான ஒரு கதையும் விறுவிறுப்பாக நகர்கிறது.
நல்ல கதையில் காதல், டூயட்டெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவுடன், கிஷோருக்கும், அவரது மகனின் டீச்சராக வரும் சிநேகாவுக்கும் இடையில் எதையும் வைக்காமல், கடைசிவரை கதையை நகர்த்தியதற்கும், கிஷோரின் பிள்ளையை வில்லன்கள் கடத்தினார்கள் என்ற யூகத்திற்கு இடமளித்து, அப்படியில்லாமல், அவன் காணாமல் போனதையே கதையின் முக்கிய புள்ளியாக்கியதற்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலனுக்கும் சபாஷ்.
ஒரு பக்கம் என்கவுண்டரில் சிறுத்தையாக, இன்னொரு பக்கம் ‘ஆட்டிச’குழந்தையின் தந்தையாக மனம் சிறுத்தவராக, கிஷோருக்கு அருமையான ஆடுகளம் இந்தப்படம். இவரோடு சேர்ந்து சிறுவனும், சிநேகாவும்,.. அண்ணா பிரசன்னா, அண்ணி அடுத்த வருஷம் வாங்கப்போற அவார்டுகளுக்கு அலமாரியில இப்பவே கொஞ்சம் விலாவாரியா இடம் ஒதுக்கிவைங்க.
எவ்வளவு துணிச்சல் இருந்தாலும், இருட்டினில் நடக்கையில், நடுங்கிக்கொண்டே பாட்டுப்பாடுவோமே, அதுபோலவே ஒன்றிரண்டு பிட்டுப் பாடல்களையும், போலீஸ்காரர்களுக்கு வக்காலத்து வாங்கி ஒரு கானாபாடலும் சேர்த்து லைட்டாக மசாலா தூவ முயன்றிருக்கிறார் இயக்குனர். அதேபோல் பரோட்டா சூரி, இதுல உங்க காமெடி கொஞ்சம் சாரி.
முன்னாள் பத்திரிகையாளர்  ஏ.ஆர்.வெங்கடேசன் வசனம் எழுதியிருக்கிறார். ‘என் பையன் போட்டியில ஜெயிக்கவேணாம் சார். அதுல கலந்துக்கிட்டாலே போதும்’ ‘அவன் என்ன கோச்சா, இல்ல காக்ரோச்சா? டாக்டர் சொல்லவேண்டியதை கோச் சொல்றான். கோச் சொல்லவேண்டியதை டாக்டர் சொல்றான்’ என்று பல இடங்களில் ஈர்த்து, பத்திரிகையாளர்கள் மத்தியிலயும், இன்னும் கூட ஓரளவுக்கு வெவரமானவங்க இருக்காய்ங்க’ என்று மானம் காக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக இப்படத்தின் ஜீவன்களாக இருப்பவர்கள் படத்தின் தயாரிப்பாளர் ராமதாஸும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும். இப்படி ஒரு கதையைப் படமாக்க, அதுவும் பெரும்பொருட்செலவில், முன்வந்ததற்காக,’ அய்யா வந்தனம், வந்தனம்.
படத்தின் கதையை சிறுவன் ஹரி சொல்வதுபோல் அமைத்திருந்தாலும், படம் துவங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை ஒளிப்பதிவாளரின் படமாகவே இது நகர்கிறது. ஒரு சில காட்சிகளின் அழுத்தத்தை, இது திசைதிருப்பினாலும், வெகு நேர்த்தியான, உள்ளம் கொள்கிற ஒளிப்பதிவு ரத்னவேலுவுடையது. வெல்டன் ராண்டி. ‘எந்திரன்’ மாதிரி வெட்டிப்படங்களுக்கு உங்க திறமையை வீணடிக்கிறதை விட்டுட்டு, இப்படி நல்ல படங்களுக்கு ரண்டி.

Saturday, February 9, 2013

விமரிசனம் ’விஸ்வரூபம்’ –அமெரிக்கா ஆத்து அம்பிபடம் பாத்தேளா?



'இதுக்கு இவ்வளவு பஞ்சாயத்து தேவையா ண்ட்ரியா?’

தினத்தந்தியில் மூன்று முறை பேனர் செய்தியாக, மற்ற பத்திரிகைகளில் மற்றும் இணையதளங்களில் அடைமழைபோல் கொட்டிக்கொண்டே இருந்த செய்திகள் என்று கடந்த இரு மாதங்களாக மாபெரும் சர்ச்சைகள் பலவற்றை சந்தித்து திரைக்கு வந்திருக்கும் கமலின்விஸ்வரூபம்பார்க்க நேர்ந்தபோது, அது சந்தித்த அத்தனை சர்ச்சைகளுக்கும் தகுதி உடைய படமாகவே இருந்தது.
நம்ம ஊர் சுப்பிரமணி[ரத்னம்] முதல் கமால்பாய் வரைஹாலிவுட் தரத்தில்என்று சொல்லிக் கொள்வதையே உயர்ந்த தரமான விஷயம் என்ற மூடநம்பிக்கை போதை ஊட்டி வளர்க்கப்பட்டதால், கமல் அதே குழந்தை உள்ளத்தோடு, ஹாலிவுட் தரம் என்று எல்லோரும் சொல்லவேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு அமெரிக்க- அல்கொய்தா அரசியலைப் படமாக எடுத்தார் என்று அப்பாவியாய் நம்பி ஏமாற மனம் ஒப்பவில்லை.
தமிழ்சினிமாவின் வரலாறை, நாளை எழுத விருப்பவர்கள் தன்னை வெறும் கோடம்பாக்க கூத்தாடி என்று குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்து, குண்டு சட்டி ஓட்டிவிடக்கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் கமல் இப்படி ஒரு அமெரிக்க விசுவாச அவதாரம் எடுத்தார் என்று அல்பத்தனமாக மனது சமாதானம் அடையவில்லை. ஏதாவது ஒரு பல்கலைக்கழக மாணவர்  டாக்டர்பட்ட மேற்படிப்புக்காக ஆராய்ச்சிப்பொருளாக எடுத்துக்கொள்ளவேண்டிய,  பல்நோக்கம் கொண்ட அவரது உள்நோக்கம் படு ஆபத்தானது.
கமலின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் கொஞ்சம் கூடுதலான அறிவும், உலக ஞானமும், ஆஸ்கார் வாங்கத் துடிக்கும் அரிப்பும் கொண்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய கதை.
விஸ்வநாத் என்ற பெயரில், அஜால்குஜால் நாட்டிய ஆசிரியராக நடித்துக்கொண்டிருக்கும் வாசிம் அஹமத் காஷ்மிரி ஆகிய கமல்ஹாசன், தனது தற்காலிக மனைவி நிருபமாவுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆண்ட்ரியா உட்பட சில ஆண்ட்டிகளுக்கு கமல் நடனம் கற்றுத்தந்து கொண்டிருக்க, தனது நிறுவன முதலாளியுடன் கள்ளக்காதலில் ஈடுபட விழையும் நிருபமா, தனது கணவர் கமலுக்கும் அதே போல் ஒரு.காஇருக்குமானால் குற்ற உணர்வின்றி இருக்கமுடியுமே என்பதற்காக அவரை உளவு பார்க்க ஆள் நியமிக்கிறார். கமலை விரட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் விஸ்வநாத் இல்லை, இஸ்லாமியர், அதுவும் அல்கொய்தாவில் பயிற்சி பெற்றவர், அவரை தற்போது அல்கொய்தாவின் முக்கிய தலைவர்கள், அவரது தலைக்கு விலை வைத்து, அமெரிக்கா வரை வந்து தேடிவந்திருக்கிறார்கள் என்ற விபரீதரூபம் தெரிய வருகிறது.
 கமலைத் தேடிவிட்டு மட்டும் சும்மா போவானேன் என்று நினைத்து, அந்த அல்கொய்தாவாளர்கள் அமெரிக்காவுக்கு குண்டு வைக்க முயல, அவர்களது முயற்சியை உண்டு இல்லை என்று பண்ணி, ’பார்ட்2’வுக்காக வில்லனைக் கொல்லாம விடுறேன்.  அமெரிக்காவ ஆபத்துல இருந்து காப்பாத்தியாச்சி. சீக்கிரமே இந்தியாவுல சந்தி[சிரி]ப்போம்’ என்று வெக்கமில்லாமல் சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.
கமல் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, தன்னைத்தவிர அனைவரையுமே எந்த அளவுக்கு முட்டாள்கள் என்று நினைத்திருந்தால், ‘படத்தைப் பார்த்தபிறகு எல்லாருக்கும் பிரியாணி கிண்டிப்போடுவீங்க’ என்று கிண்டலடித்திருப்பார்? அது சிக்கனா மட்டனா என்று சொல்லாததால், மனிதபிரியாணியாக இருக்கக்கூடுமோ? ஜிகாதியாகனும்னு முடிவு பண்ணீட்டிங்களா கமல் சார்?
 ஆப்கானிஸ்தானில், மிக பயங்கரமாக, சித்தரிக்கப்பட்டுள்ள சில காட்சிகள், கதைக்கு தேவைப்பட்டு எடுக்கப்பட்டிருப்பதாக இருந்தாலும் கூட, இஸ்லாமியர்களின் முரட்டுத்தனமான பழமைவாதத்தை பகீரென்று பகிர்கின்றன.  அமெரிக்காவுக்கும், அல்கொய்தாவுக்கும் இடையே நடக்கும் போரில் நம்ம ஊர் அம்பி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியமென்ன? என்னதான் உலகநாயகன்என்ற பட்டம் கொண்டிருந்தாலும், சொந்தமண் இந்தியாவிலேயே எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்கும்போது, அமெரிக்காவைக் காப்பாற்றவேண்டிய அவசியமென்ன? மற்ற பிரச்சினைகளை விடுங்கள். தமிழ்நாட்டில் ஒரு முன்னணி நடிகரின் படம் சென்சார் வாங்கியபிறகு ரிலீஸ் பண்ணவிடாமல் சின்னாபின்னப் படுத்தினார்கள். அமெரிக்காவைக் காப்பாற்றிய நேரத்தில் அட்லீஸ்ட் அந்த நடிகரையாவது காப்பாற்றியிருக்கலாம்.
மற்றபடி ஒரு நடிகராக, தொழில்நுட்பங்களில் புலிப்பாய்ச்சல் காட்டும் கலைஞனாக, கமல் இதற்கு முந்தைய தனது அத்தனை படங்களையும் தூக்கிச்சாப்பிட்டிருக்கிறார். இது அவருக்கும் தெரிந்திருப்பதாலோ என்னவோ, ‘இந்தக்கதையில நல்லவன், கெட்டவன் ரெண்டுமே நானேஎன்ற வசனத்தை மய்யப்படுத்தி இருக்கிறார். ‘சார் காஷ்மீரிங்குற நம்பிக்கை துரோகியை படம் முழுக்கவே பாத்தோம். யாரோ நல்லவர்ங்குறீங்களே, அவரை ஒரு நாலு ஃப்ரேமாவது காட்டியிருக்கக் கூடாதா?
மற்ற விஷயங்களில் எப்படியோ, பழமொழிகளைப் படைத்ததில் தமிழனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. விஸ்வரூபம் பார்த்து முடித்ததும் ‘யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை’ தான் ஞாபகத்துக்கு வந்தது.
 சீக்கிரமே ‘விஸ்வரூபம்’ பார்ட் 2’வோட, கமல் வர்றார் பாய்,.. பிரியாணியை எடுத்து ஒளிச்சி வைங்க,..

Tuesday, February 5, 2013

விமர்சனம் ‘டேவிட்’- ’ ஏலி ஏலி லாமா சபக்தானி?




நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்பட நாயகன் ஆடிய அதே கிரிக்கெட் கிரவுண்டில்டேவிட்பட இயக்குனர் பிஜய் நம்பியாரும் சமீபத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கக்கூடும்.’ நகொபகநாயகனுக்கு பின்னந்தலையில் அடிபட்டு பெடுளா,சரி விடுளாமறதிநோய் ஏற்பட்டதுபோல், பிஜய்க்கு சைடு மண்டையில் அடிபட்டுசர்ரியலிஷ சைடுளா ப்ளேடுடாவியாதி ஏற்பட்டிருக்கவேண்டும்.
ஏனெனில்டேவிட்கதை இயல்பான புத்தி சுவாதீனம் கொண்டவர்கள் யோசிக்கக்கூடிய சாதாரணகதையே அல்ல.
சினிமா தீவிரவாதிகளிடமிருந்து சிறுபான்மையாகிய எங்களைக் காப்பாற்றுங்கள்என்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருக்கும் இஸ்லாமியர்களின் வழியில், தொடர்ந்து பந்தாடப்படுவதிலிருந்து பந்தோபஸ்து கேட்டு,கிறிஸ்தவ பாதிரியார்களில் பாதியர்களாவது சர்ச்சிலிருந்து இறங்கிவந்து சர்ச்சையில் ஈடுபடவேண்டிய நேரம் இது.
டேவிட்ஒரு பெயர் இரு இம்சையின் கதை இதுதான். ஒரு டேவிட்,[அதாவது ஜீவா டேவிட்]  இதுக்கு டெர்ரரிஸ்ட் எவ்வளவோ தேவலை என்று சொல்லவைக்கும், மும்பையில் தெருத்தெருவாய் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் கிடாரிஸ்ட். அப்பா நாசர் கிறிஸ்தவ மத போதைகார்.  கதை என்ற பெயரில் நம்மை பேஜார் நம்பியார் செய்வது போலவே, அவரை இன்னொரு மதத்தினர் வந்து அடித்து துவம்சம் செய்கிறார்கள்.
இன்னொரு அக்ரமமான விக்ரம் டேவிட் கோவாவில் மீனவர். தொழில் தர்மத்துக்காக ஒரே ஒரு காட்சியில் ஒரே ஒரு மீனைப் பிடித்துவிட்டு, சதா குடித்துக்கொண்டே இருக்கிறார். இவர் கையில் பாட்டில் இல்லாத காட்சியே இல்லை என்பதால், படம் முழுக்கவே விக்ரம் வரும் பின்னே, ‘குடிப்பழக்கம் குடல் நலத்திற்கு தீங்கானதுசப்-டைட்டில் வருதுமுன்னே.
 இவரது நண்பர் பீட்டருக்கும், காது பேசாத, வாய் கேட்காத ஊமையுமான, இஷா ஷெர்வானிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், நட்புக்கு துரோகம் செய்துவிட்டு, ஷெர்வானியை லவட்ட்டிக்கொண்டு ஓடிவிடலாமா என்று யோசித்து, கடைசியில் அப்படிச் செய்யாமல் விட்டுவிடுகிறார். ஏனென்றால்பீட்டர்கள்தான் பீட்டர்களாக இருக்கமுடியும். ஒரு போதும்டேவிட்கள் பீட்டர்களாக முடியாது என்று சில கிலோ மீட்டர் நீளத்துக்கு வசனங்கள் ஜெபிக்கப்பட்டு,  இறைவன் சித்தம் அப்படி’. என்று முடிகிறது கதை.
என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலை பாஸ். வர வர உங்க இம்சை ஓவரா இருக்குஎன்று நினைப்பவர்கள், தியேட்டர்கள் இல்லாத குக்கிராமம்  ஒன்றுக்கு, கொஞ்ச நாளைக்காவது என்னைக் குடியமர்த்தும்படி, வேண்டி விரும்பி, மனம் வெதும்பி, கண்ணீர் ததும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நடிப்பு விவகாரத்தில் சைத்தான் விக்ரம், குட்டி சைத்தான் ஜீவா தொடங்கி, பியூட்டி பார்லர் நடத்திவரும் பாட்டி தபு வரை நாஸ்தி பண்ணியிருக்கிறார்கள். நாசருக்கு மேலும் ஒரு நான்ஸ்டாப் நான்சென்ஸ்.
இசையை, நம்ம கொலவெறி பாய் அனிருத்தில் தொடங்கி, கேரளா முதல் மும்பை வரை, ஆறுபேர் கூறு போட, ஒரு டேவிட்டை ரத்னவேலும், மற்றொருடேவிட்டை பி.எஸ். வினோத்தும் ஒளிப்பதிவியிருக்கிறார்கள்.
கதையிலேயே நம் மதி மங்கி, தொங்கிப்போய்விடுவதால் மற்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் குறித்து சம்சாரிக்க,உடலில் தெம்பு இல்லை.
தயாரிப்பு ரிலையன்ஸ் நிறுவனம். மணிரத்னத்தின் சித்தி பொண்ணு உட்பட வேறு சில நிறுவனங்களுடன் அலையன்ஸ் வைத்துடேவிட்களை தயாரித்திருக்கிறார்கள்.
படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான வசனம்கோடியில ஒருத்தருக்குத்தான் எல்லாத்தையும் தாங்குற வலிமையை கர்த்தர் குடுத்திருக்காரு’. அந்த வலிமை கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய படம்டேவிட்’. மற்றவர்கள் கர்த்தரை நோக்கி கூவ வேண்டிய வசனம்ஏலி ஏலி லாமா சபக்தானி’ [ என் தேவனே என் தேவனே ஏன் எம்மை கைவிட்டீர்?]