Saturday, December 22, 2012

விமர்சனம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ‘ஈயைக் காயடிக்கும் கொல்லன் பட்டறை’




பழைய்ய ஜபர்தஸ்தான பார்ட்டிகளின் வீட்டு வராந்தாவில் அல்லது ஹாலில் ஒரு புலித்தோலும், துருப்பிடித்துப்போன துப்பாக்கியும் கண்டிப்பாக தொங்கும்.
அப்படி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேட்டையாடி தொங்கவிட்ட புலித்தோலை அணிந்துகொண்டு, அவரது துருப்பிடித்த துப்பாக்கியை கொல்லன் பட்டறையில் தூர் எடுத்து, புதிய தொழில்நுட்பத்துடன் புறப்பட்டு வந்திருக்கிறார் இளம் சிறுமி இயக்குனர் சிநேகா பிரிட்டோ.[ குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டம் இங்கே செல்லுபடியாகாதோ?]
பழைய ‘சட்டம் ஒரு இருட்டறை’ காலத்து பார்ட்டிங்களெல்லாம், பாட்டன், பாட்டிகளாகிவிட்டிருப்பீர்கள்  என்பதால் கதையை மறுபடியும் அவுத்துவிடவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
ஹாங்காக்கில் ஏதோ ஒரு சம்மர் கோர்ஸ் படிக்கப்போயிருக்கும் நாயகன் விஜய், தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சந்திப்புகளால் உந்தப்பட்டு, குட்டி பியா எனப்படும் பியாக்குட்டியை லவ் பண்ண ஆரம்பிக்கிறார்.[காஸ்ட்யூமருக்கும் இவருக்குமிடையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, படம் முழுக்கவே இவரை ஜட்டி பியாவாகவே அலையவிட்டிருக்கிறார்கள்]
கண்ணில் கண்டதையெல்லாம் தனது கேமராவில் சுட்டுத்தள்ளும் வழக்கம் கொண்ட சுட்டி பியா ஒருமுறை படத்தின் மூன்று முரட்டு வில்லன்கள் ஒரு கொலை செய்வதை சுட்டுவிடுவதோடு நில்லாமல், அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லவும் கோர்ட்டுக்கு கிளம்ப, வில்லன் கோஷ்டிகள் பியா மீது, ஒரு காரை ஏற்றி அவரை ’மர்கயா’ ஆக்குகிறார்கள்.
மனிதனுக்குத்தேவை மனசாட்சி. ஆனால் கோர்ட்டுக்குத் தேவையோ மனித சாட்சி. அப்படிப்பட்ட சாட்சிகள் இல்லாததால், வில்லன் பட்சிகள் தப்பிவிட, அவர்களை சாட்சிகள் இன்றி விஜய் எப்படிப் போட்டுத்தள்ளுகிறார் என்பதுதான் ‘சட்டம் ஒரு குருட்டறை’.
கதையில் இன்னும் விறுவிறுப்பும் மொறுமொறுப்பும் இருந்தால் என்ன கெட்டுப்போச்சி என்று நினைத்து, தம்பி விஜயின் அக்காவாக போலிஸ் யூனிஃபார்மில் ரீமாசென்னை, ’வாமா சென்னைக்கு’ என்று அழைத்திருக்கிறார்கள்.
’தாத்தா எஸ்.ஏ.சி. 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்‌ஷன் படமாக பண்ணியதை நான் இந்த ஜெனரேஷனின் ரசனை கருதி லவ்- ஆக்‌ஷனாக மாற்றியிருக்கிறேன்’ என்று குழந்தை இயக்குனர் சிநேகா பிரிட்டோ பல பேட்டிகளில் டேப்பை ஓட்டியாதாக ஞாபகம்.
டி.வி கேம் ஷோக்களின் ஆக்‌ஷன்களை குழந்தைகள் பலரும் காமெடியாக கருதி ரசிப்பதாலேயே நாமும் சிநேகா சொன்ன ’ஆக்‌ஷனை’ காமெடி என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் படம் முழுக்க ஆக்‌ஷன் என்ற பெயரில் ரசிப்பதற்கு ஏகப்பட்ட காமெடிகள் இருக்கின்றன.
இதுபோதாதென்று க்ளைமேக்ஸை ஒட்டி, ஒரு மகா நேர்மையான கேரக்டரில் பழைய்ய இயக்குனர் எஸ்.ஏ.சி.யும் இருட்டறையின் கூட்ஸ் வண்டியில் ஏறிக்கொள்ள அதன்பிறகு எண்ட் வரை காமெடி கதகளி நடக்கிறது.
சினிமாவிலிருந்து ரிடையராகி, குழந்தை பெற்றுக்கொண்டு, மும்பையில் செட்டில் ஆனதற்கான எல்லா தர்மங்களும், நியாயங்களும் ரீமா சென்னிடம் பரந்துவிரிந்து கிடக்கின்றன.
பிந்துமாதவியும், பியாவும் படத்தை ஆளுக்கொரு பாதியாய் பிரித்துக்கொண்டு நமது ஆவியை மேய்கின்றனர். பிரம்மனின் வார்ப்பில் என்ன பிரச்சினையோ இருவரிடமும் எந்தவித ஈர்ப்பும் இல்லை. அதிலும் செத்தபிறகும் செகண்ட் ஆஃபில் வந்து ஒரு குத்துப்பாட்டில் ஆடிவிட்டுப்போகிறாரே பியா அட போய்யா,..
’21-ம் தேதி உலகம் அழியப்போகிறது’ என்பதை சீரியஸாக நம்பியவர்களில் நீங்களும் ஒருவர் எனில், மீதி வாழ்க்கையெல்லாம் போனஸ்தானே ‘போனால் போகட்டும் போடா’ பாடி, மீதி பொழுதுகளைக் கழிக்கவிருபுகிறவர் எனில்,’இதுக்கும் மேல நம்மள யாரு என்னங்க பண்ணிரமுடியும்’ என்று மீதிவாழ்நாள் முழுக்க சொல்லிக்கொண்டே அலைய, நீங்கள் ஒருமுறை கண்டிப்பாக’சட்டம் ஒரு இருட்டறை’ பார்க்கலாம். உங்களுக்கான விபரீத ராஜயோகம் படம் முழுக்க விரவிக்கிறது.

Wednesday, December 19, 2012

’ ‘கும்கி’ யில என்ன நடந்ததுன்னு சொல்லுங்கண்ணே சொல்லுங்க’






’கும்கி’ விமர்சனம் எழுதியபோது, டைட்டில் கார்டில், பதினெட்டு உதவி இயக்குனர்களின் பெயர் இடம்பெற்றது. இவ்வளவு பேர் எதற்கு என்று கேட்டால் சொல்கிறேன்’ என்று ஒரு குறிப்பு வைத்திருந்ததற்கு, ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்று விளக்கம் கேட்டு கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்பு கொண்டனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சில கடிதங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்கமிங் ஃப்ரீ என்பதால், நேரில் கேட்டவர்களையும், அனைத்து தொலைபேசிகளையும் அட்டெண்ட் பண்ணத்தவறவில்லை.

’ஏதோ ஒரு நல்ல எண்ணத்துல நிறைய அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கு வேலை குடுத்துருக்காரு பிரபு சாலமன். இதுலயுமாய்யா குறை கண்டுபிடிப்பாய்ங்க?’ என்ற அங்கலாய்ப்பு குரல்களும் எனக்குக் கேட்காமலில்லை. அந்த ‘வேலை குடுத்துருக்காங்களே’விலேதான் பிரச்சினையே  ஆரம்பமாகிறது.

படம் பார்க்காதவர்களுக்கும் தெரியும், ‘கும்கி’ படம்  முழுக்க முழுக்க மலைப்பிரதேசங்களில் படமாக்கப்பட்டதென்பது. அந்த மலைப்பிரதேசங்களுக்கு படப்பிடிப்பு உபகரணங்களைத் தூக்கிச்செல்ல, வழக்கமான கேமரா அசிஸ்டெண்டுகள் போதவில்லை. இவர்களை அதிகம் அழைத்துக்கொண்டால் பேட்டா, மற்ற சமாச்சாரங்கள் ஜாஸ்தி. லைட்மேன்கள் சமாச்சாரமும் மேற்படியே. 750 ரூபாய் பேட்டாவில் துவங்கி தலைக்கு ரூ 2000 வரை ஆகும். ஆனால் உதவி இயக்குனர்கள் எனப்படுபவர்களோ, இதில் பத்தில் ஒரு மடங்கை கொடுத்தால் கூட வாயைப் பொத்தி வேலை பார்க்கத் தயங்காதவர்கள். எனவே ஏழைப் பங்காளன் லிங்குசாமியைக் காப்பாற்றும் பொருட்டு, அல்ப பேட்டாக்களில், படம் முழுக்கவே சுமார் 26 உதவி இயக்குனர்களைப் பயன்படுத்தி, சில லட்சங்களை சிக்கனம் செய்த மகாபிரபு சாலமன், கடைசிவரை தாக்குப் பிடித்த 18 உதவி இயக்குனர்களின் பெயரை டைட்டில் கார்டில் போட்டாராம்.

கதைப்படி, மலைப்பிரதேச மக்களை டார்ச்சர் செய்த, கொம்பன் யானையை விரட்டக்கூட பிரபு சாலமன் பெரும் செலவுகளை இழுத்துவைக்கும், ஒரு கும்கி’ யானையைத் தேடிப் போயிருக்கவேண்டியதில்லை. அதற்கும் கூட, எந்த செலவும் வைக்காத ‘பலம்’ வாய்ந்த உதவி இயக்குனர்களைப் பயன்படுத்தியிருக்கலாமோ? 

இந்த ஐடியாவை அடுத்த படத்துக்கு பயன்படுத்தினா நமக்கு ராயல்டி அனுப்ப மறந்துராதீங்க பாஸ்.             

Sunday, December 16, 2012

விமர்சனம் ‘கும்கி’- நல்ல டைரக்டருங்களுக்கெல்லாம் சூன்யம் வச்சிட்டாய்ங்களோ?’



ஒரு படம் துவங்கும்போது, பொதுவாக, கொஞ்சநேரம் கதை நடக்கும் லொகேஷனையும், கதை மாந்தர்களையும் அரசல்புரசலாக அறிமுகப்படுத்துவார்கள்.
ஆனால் ஒரு ரெண்டேகால் மணிநேரத்தில், ரெண்டுமணிநேரம் மேற்படி சமாச்சாரத்திற்கே முழுக்கவனம் செலுத்தி நம்மை அநியாயத்துக்கு சோதிக்கிறார் பிரபு சாலமன்.
தகுதிக்கு மீறி பணமும் புகழும் சேர்ந்துவிடுகிறபோது பெரும்பாலான மனிதர்களிடம் பக்தி பற்றிக்கொள்கிறது. ‘சாட்டைக்குப் பிறகு இதிலும் ‘தேங்க் யூ ஜீஸஸ்’ என்று போட்டபிறகுதான் கதையையே ஆரம்பிக்கிறார் சாலமன்.
ஒரு மலைகிராமம். மதம் பிடித்த கொம்பன் யானை ஒன்று அவர்களது வெள்ளாமையை நாசம் செய்துவிட்டு, ஜனங்களையும் கொன்றுபோட்டுவிட்டுக்கொண்டிருக்க, அதை அடக்கி விரட்ட ‘கும்கி’ யானை ஒன்றை அமர்த்த கிராமத்தார் முடிவு செய்கிறார்கள். கதையில் சுவாரசியம் வேண்டுமே? ‘உள்ளத்தில் பூனையடி’ ரேஞ்சில் இருக்கும் விக்ரம் பிரபுவின் யானை,மாணிக்கம் மலைகிராமத்துக்கு வருகிறது. மலைப்பூ,மலைவாசனைதிரவியங்கள், மலைத்தேன் மாதிரி விஷேசமான மலைஜாதிப்பெண்ணான லட்சுமி படுகா மேனனைப் பார்த்ததும் கொம்பன் யானையை விட சற்று அதிகமாகவே மதம் பிடித்து சுற்றிச்சுற்றி வருகிறார் ஜூனியர் பிரபு.
லட்சுமி-விக்ரம் பிரபு காதல் கைகூடியதா? கொம்பன் யானையை நம்ப சும்பன் யானை மாணிக்கம் விரட்டி அடித்ததா? மலைஜாதி மக்கள் அப்புறம் சுபிட்சமாக வாழ்ந்தார்களா?’- போன்ற கொடிய கேள்விகளுக்கு விடியவிடிய விடைதேடுவதுதான் ‘கும்கி’யின் கதை.
படத்தின் ஒரிஜினல் நாயகன் கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் சுகுமார்தான். யானைக்கு வைத்திருக்கும் பரிதாப ஷாட்கள் தவிர்த்து, படமெங்கும் தனது அபார உழைப்பால் வியாபிக்கிறார்.
ரொம்ப நாளைக்குப் பிறகு காதுகொடுத்துக்கேட்கும் தரத்தில் இமானின் பாடல்கள். பாடல்களிலும், பின்னணி இசையிலும் அப்பா பிரபுவுக்கு ராஜா போட்ட ராகங்களை உரிமையோடு உருவியிருக்கிறார்.
தாத்தாவைப்போலவே எல்லோருக்கும் முதல் படமே ‘பராசக்தி’யாக அமைந்துவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்பா பிரபுவே நல்ல நடிகர் என்று பேர் வாங்க சில டஜன் படங்கள் நடிக்கவேண்டி இருந்தது. படத்தின் முக்கால்வாசி இடங்களில் எதையோ பறிகொடுத்தமாதிரியே முழிக்கும் ஜூனியர் பிரபு மிகவிரைவிலேயே கரையேறி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக அங்கங்கே தென்படுகின்றன.
மேக்கப் மற்றும் கட்டுக்கோப்பான உடைகளைப் பார்த்து லட்சுமி மேனனை மலைஜாதிப்பெண்ணாக ஏற்க மனசு மறுக்கிறது.
சுகுமாருக்கு அடுத்தபடியாக, படத்தின் இன்னொரு ஆறுதல் பரிசு தம்பி ராமையா.சரக்கு எதுவும் இல்லாத வறட்சியான காட்சிகளிலும், இல்லாத முறுக்கு காட்டி, எதையாவது ஸ்கோர் பண்ணிக்கொண்டே இருக்கிறார். [அய்யா ராமையா இனிமே நீங்க உங்க பேரை அண்ணன்ராமையான்னு மாத்திக்கங்கன்னு வேண்டிக்கிறது உங்க சிவய்யாய்யா]
தமிழ்சினிமாவில் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்களெல்லாம் அடுத்து வீணாகப் போகவேண்டுமென்று எங்காவது பில்லி சூன்ய வேலையில் யாரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று தீவிரமாக ஆராயவேண்டிய நேரம் இது. இல்லையென்றால் இத்தனூண்டு ‘மைனா’வில் புலிப்பாய்ச்சல் காட்டிய பிரபு சாலமன் ‘கும்கி’ யானையை பிடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு கொசுவைப் பிடித்துவிட்டுத் திரும்பியிருப்பாரா?’
ஒரு முக்கிய பின்குறிப்பு: டைட்டில் கார்டை மிக கவனமாகப் படித்தபோது’ இந்தப் படத்தில் இடம்பெற்ற உதவி, இணை, துணை இயக்குனர்களின் எண்ணிக்கை 18-ஐத்தொட்டது. இவங்கள்ளெல்லாம் ஆளுக்கு அரை சீன் சொல்லியிருந்தாலே படத்துல ஒன்பது சீனும் ஓரளவு கதையும் இருந்திருக்குமே என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். ஆனால் இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும்.  நீங்கள் கேட்டால் சொல்கிறேன்.

விமர்சனம் ‘நீதானே என்பொன் வசந்தம்’- வருண், நித்யா சில ரசிகர்களின் மரணங்கள்,..



கடைசியில கவுதம் பயபுள்ள இப்பிடி கவுத்திருச்சே,..


நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே சுவாரசியமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் சுவாரசியங்களை விட மொக்கையான சம்பவங்களையே நாம் அதிகம் சந்தித்திருப்போம்.
நிதர்சனம் அப்படியிருக்க, எதற்கெடுத்தாலும் சுவாரசியமானவற்றையே சொல்லி ஏன் போரடிக்க வேண்டும்? கொஞ்சம் மொக்கை போட்டுப் பார்க்கலாமே?? என்றுகவுதம் வாசுதேவ மேனன் தீவிரமாக யோசித்ததன் விளைவாகவே இந்த ‘நீ எ பொ வ’ எடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.
அல்லது ’வருண், நித்யா, காதல்,.. சில தருணங்கள்’ என்பதில் தருணங்கள் என்றால்,.. நாம் சொல்கிற சில சம்பவங்களைப் பார்த்து ரசிகர்கள் மத்தியில் சில மரணங்கள் ஏற்படவேண்டும் என்று கவுதம் முடிவு பண்ணியிருக்க வேண்டும்.
கடந்த வாரம் கூட ஒரு நண்பர் என் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார். ’படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறபோது, அவற்றில் கதை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இதுதான் கதை என்ற பெயரில் ‘ நீ பாட்டுக்கு ஒரு இருபத்தி அஞ்சு வரிக்கு குறையாம என்னத்தையாவது எழுதித்தொலைக்கிறியேப்பா?’
நண்பர் என்மீது சுமத்திய அந்த பழிபாவத்திலிருந்து காப்பாற்றவோ என்னவோ ‘நீ எ பொ வ’ வில் கதை என்ற பெயரில் கவுதம் எதையும் சொல்ல கிஞ்சித்தும் முயலவில்லை. ஸோ இதை கதைவிடாத விமர்சனம் என்றும் அழைக்கலாம்.
படத்தின் ஹீரோ கண்டிப்பாக ராஜாதான். கவுதம் தன்னை இந்த அளவுக்கு விளம்பரத்தில் முன்னிறுத்துவார் என்பதை அறியாமல் சுமாரான [ ஆனா யானை படுத்தாலும் குதிரை மட்டம்] பாடல்களைப் போட்டுவிட்டு, விஷூவலில் இல்லாத ஏதோ ஒன்றுக்கு பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார்.
படம் ரிலீஸாவதற்கு முன்பு, ராஜாவின் பாடல்களை விஷுவலாய் கவுரவப்படுத்திய இயக்குனர்கள் பட்டியலில் கவுதமும் இடம்பெறுவார் என்று எண்ணிக்கொண்டிருந்த என்னைப்போன்றவர்கள் எண்ணத்தில் தனது போடோன்கதாஸ் கார்ப்பரேஷன் லாரியைக்கொண்டு மண்ணை தாராளமாய் அள்ளிப்போட்டிருக்கிறார் கவுதம்.
படத்தில் நிகழ்த்தப்படும் அத்தனை பாவகாரியங்களுக்கும் பிராயச்சித்தமாய், நமது சித்தத்தை பித்தமாக்கி ரசிக்க வைப்பவர் சமந்தா. ஏற்கனவே எவ்வளவு பெரிய கியூ நின்றாலும் பரவாயில்லை, நாமும் ஒரு அட்டெம்ப்ட் அடித்துப்பார்க்கலாமே என்று சபலப்பட வைக்கிற கொள்ளை[க்கார] அழகி. நடிப்பில் ஒரு மாடர்ன் சாவித்திரி. ஆனால் அவரைக்காதலிக்கிற ஜீவா சுத்த வேஸ்ட். அனைத்து காட்சிகளிலுமே, ‘அடுத்த பட ஷூட்டிங் கிளம்பனும் சீக்கிரம் ஆளை விடுங்கப்பா’ என்கிற மாதிரியே பதட்டமாக நிற்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ‘நிறைய பட ஷூட்டிங் இருக்கிறதால அடுத்தடுத்த சீன்கள்ல நான் இருப்பேனான்னு தெரியல’ என்று ஒரு காட்சியில் ’பாட்டாகவே’ பாடிவிடுகிறார் சந்தானம்
கதை காஃபி ஷாப்,பள்ளி, கல்லூரிகள் மற்றும் மொட்டை மாடிகளையே முட்டிமோதி வருவதாலேயே என்னவோ ஒளிப்பதிவு, ஏதோ ஒரு ஸ்கூல் கல்சுரல் போட்டிகளை வீடியோவில் ஷூட் பண்ணியமாதிரியே பரிதாபமாக இருக்கிறது. ஓம் பிரகாஷ், வெரி ஷேம் பிரகாஷ்.
ஆண்டனியின் எடிட்டிங்கும் அஃதே.
இதுவரை வந்த கதைகளைத் தாண்டி சற்றே பொரட்சியாக ரிசப்ஷன் வரை நடந்த கல்யாணத்தை நிறுத்தி, காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் கவுதம். ’மறுபடியும் மறுபடியும் காதல் படங்களையே இயக்குவேன்’ என்று அவர் அறிவித்திருப்பதால், அடுத்த படத்தில் காதலன் தன் மொறைப்பொண்ணுக்கு ரெண்டு முடிச்சு போட்டவுடன், மூனாவது முடிச்சு போட நாத்தனார் கைக்கு தாலிக்கயிறு மாறும்போது,அந்தக் கல்யாணத்தை நிறுத்தி, காதலர்களைச் சேர்த்து வைக்கும்படி ‘சமத்துக்குட்டி சமந்தா ரசிகர் மன்றம்’ சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்.