Friday, September 28, 2012

விமரிசனம் ‘தாண்டவம்’ – அட யாருங்க இது, பப்ளிக் இடத்துல, கோரஸா கொட்டாவி விடுறது?





கோடம்பாக்கத்தின் கொதிநிலையை அதிகப்படுத்தியிருக்கும்தாண்டவம்படத்தின் கதைப்பஞ்சாயத்தால், படம் பற்றிய விமர்சனத்தை விட, இதன் கதை என்ன என்று அறிந்துகொள்ளும் ஆர்வம், சினிமாக்காரர்களைத்தாண்டி பாமர ஜனங்களையும் பற்றியிருக்கும் என்பதால், முதலில் கதை என்னவென்று தெரிந்துகொள்வோம் மகாஜனங்களே.

என்னுடைய கதையை திருடி அதைதண்டவம்படமாக எடுத்துவிட்டார்கள்என்ற உதவி இயக்குனர் பொன்னுச்சாமியின் பஞ்சாயத்து குறித்து, இந்த விமர்சனத்துக்குள் எழுதுவது சரிவாராது. ஏனெனில் கதையே இல்லாமல் ஒரு நல்ல இயக்குனரால் பிரமாதமான கலைப்படைப்பை கொடுக்கமுடியும். சில இயக்குனர்களால் நல்ல கதையைக் கூட கண்றாவிப் படங்களாகக்கொடுக்கமுடியும்.

சரி, தாண்டவத்துக்கு தாண்டுவோம்.

டெல்லியின் ஆறு முக்கிய ரா அதிகாரிகளுள் ஒருவர் விக்ரம். மற்றொரு அதிகாரி அவரது உயிர்காக்கும் நண்பர் ஜெகபதி பாபு. டெல்லிக்குள் ஊடுருவிட்ட லண்டன் தீவிரவாதி ஒருவனைப் பிடிப்பதற்காக, விக்ரம் லண்டன் செல்லும்போது, அங்கே ஏழெட்டு இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்பில், விக்ரமின் மனைவி அனுஷ்கா இறந்துவிட, இவர் பார்வையை இழந்துவிடுகிறார்.[ அதற்குள் நாம் இழந்ததை சொல்லிமாளாது. ]

பார்வையை இழந்த விக்ரம், லட்சுமிராயின் தயவுடன், ஈகோலொகேஷன் என்னும் சுற்றுச்சூழல் அறியும் கலையைக் கற்றுக்கொண்டு, வரிசையாய் எதிரிகளைப் பழி வாங்குகிறார். கதையில் திருப்புமுனை வேண்டுமே? அப்படியே கதை லண்டனில் ட்ராவல் ஆகிப்போகும்பொழுது, இவ்வளவுக்கும் பின்னணியில் இருப்பது விக்ரமின் நண்பர் ஜெகபதி பாபு என்பது தெரியவருகிறது. [ அட யாருங்க இது, பப்ளிக் இடத்துல, கோரஸா கொட்டாவி விடுறது?]

.இணைத்தயாரிப்பாளர் யூ.டி.வி. தனஞ்செயனின் பெருமை மிகு படைப்பான தாண்டவத்தின் கதை நமக்குத்தெரிந்தவரை இதுதான்

அகவையில் அறுபதைத்தாண்டிய, விக்ரமின் முகத்தில் ஏற்கனவே கிழட்டுத்தன்மை தாண்டவமாடும் நிலையில், கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல், கதையில் அவருக்கு நிச்சயதார்த்தம், பெண்பார்ப்பது, முதலிரவு என்று கதையில் ஒரு மணிநேரத்தை வீணடிக்கும் முட்டாள்தனத்தை கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி, நமது தமிழ்சினிமா இயக்குனர்களால் மட்டுமே செய்யமுடியும்.
 

அதற்கும் ஒருபடி மேலே போய், கல்யாணம் செய்துகொண்ட விக்ரமும் ,அனுஷ்காவும் கல்யாணம் முடிந்தவுடனே முதலிரவு வைத்துக்கொள்ள விரும்பவில்லையாம். முதலில் நண்பர்களாகி, அப்புறம் காதலைச்சொல்லி, நன்றாகப் புரிந்துகொண்ட பின்புதான் முதலிரவே வைத்துக்கொள்ள விரும்புகிறார்களாம். [தியேட்டரில் ரசிகர்கள் அடிக்கிற கமெண்டில் காதுசேதுவாகிறது.]

அன்புள்ள சியான் விக்ரம் ,இனியும் வயதுக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்காவிட்டால், நானும், ஹல்லோதமிழ்சினிமா.காம் ஊழியர்களும் ஒரு வாரம் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று உங்கள் வீட்டு வாசல் முன் உண்ணாவிரதம் இருப்போம். அல்லது அந்த ஒரு வார சாப்பாட்டுக்காசை வக்கீலுக்கு செலவழித்து, பொதுநல வழக்கு போடுவோம். இந்த ரெண்டில் எது உங்களுக்கு .கே. என்று உடனே சொல்லி அனுப்புங்கள்.

அனுஷ்க்கா அநியாயத்துக்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார். சபதத்தை மீறி இரு இரவுகளில் விக்ரமைகூப்பிடும்காட்சிகளில் மட்டும் லேசாக மனசைத்தொடுகிறார்.

லட்சுமிராய் கதைக்கு லட்சுமி விலாஸ் ஊறுகாய்.

சர்வதேச லெவலில் ஒரு சப்ஜெகடைக்கையாண்டிருப்பதால்சந்தானத்தின் காமெடி அநாவசியம் என்று முடிவெடுத்து அவரை ஒரு டாக்ஸி டிரைவர் வேடத்தில் கொசுறுச்சிரிப்புக்கு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

செய்றதெல்லாம் செஞ்சிட்டு, ஷேவிங் பண்ண வந்த குரங்கு மாதிரியே சைலண்டா உட்கார்ந்திருக்கிறதப் பாருங்கஎன்று விக்ரமை நோக்கி அவர் கமெண்ட் அடிக்கும் காட்சியில் மட்டும் விசில் கிழிகிறது.

ஒளிபதிவு நிரவ் ஷா. இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இவர்கள் இருவருமே, தத்தம் தொழில்களில் ரொம்பவும் டயர்டாகிவிட்டதால்,  விஜய் தான் அடுத்து இயக்கப்போகும் படத்தில், நிரவ் ஷாவை இசையமைக்கச்சொல்லி, ஜீ.வி.பிரகாஷை ஒளிப்பதிவச்சொல்லி, பரிட்சார்த்த முயற்சி ஒன்றை மேற்கொண்டால் ஒரு பிரமாதாமான ரிசல்ட் கிடைக்க வாய்ப்புண்டு என்று  தமிழ்சினிமா ரசிகர்கள் சார்பாக சிபாரிசு செய்கிறோம்.

சுமார் முப்பது முதல் நாற்பது கோடி ரூபாய் வரை செலவழிக்கத்தயாராய், யூடிவி மோஷன் பிக்ஷர்ஸ் போல் ஒரு கம்பெனி கிடைத்த போதிலும்,  ஒரு படத்துக்கு நல்ல கதையே ஜீவன் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், அதற்காக கொஞ்சமும் மெனக்கெடாமல், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் விஜய் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் சினிமாவைதாண்டவனால் மட்டுமல்ல,  நாம் ஏற்கனவே சொன்னபடி, அந்த ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது.