Friday, April 27, 2012

அண்ணிகள் காஜலும்,சமந்தாவும், பின்னே அண்ணன் சண்முகபாண்டியனும்….



டந்த வாரம், முதல்முறையாக, ஒரு பதிவு கூட எழுதாத வாரம்.

வாரத்துக்கு ஒரு மூன்று பதிவுகளாவது எழுதிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஏனோ அது நடப்பதில்லை.

சினிமா தவிர்த்து, கவிதைகளும், சமையல் குறிப்புகளும் எழுத ஆரம்பித்தால் இந்த கேப் குறைய வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.

‘அய்யய்யோ கவிதையா என்று யாரோ அலறும் குரல் கேட்கிறது. அலறல் அவசியமில்லை. ஒரு கழுதையை நீங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு ரசிக்கும்படி என் கவிதைகள் இருக்கும்.

என் ப்ளாக்கில்  ஒரு நூறு கவிதைகள் சேர்ந்தவுடன், தொகுப்பு போட அனுமதி கேட்டு வெகுமதியோடு நிற்பவர்கள் கியூவில் நீங்களும் நிற்பீர்கள்.[உ. ம். கீழே வருகிற பதிவில் இடம் பெறும் அண்ணன் சண்முக பாண்டியனுக்காக,சில வாரங்கள் முன்பு  நான் எழுதிய  பழைய  பதிவு ‘கோலிவுட்டை ஆளப்போகும் மண்ணே ]
 
கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியனார்  எப்படா திரைத்துறைக்குள் வருவார் என்று தவியாய்த் தவிக்கும் உள்ளங்களுக்கு, உங்கள் தாகத்தை அரைகுறையாய்  அடங்கவைக்கும் ஒரு குட்டியானைசெய்தி.[நான் டைப் பண்ணும்போது குட்டியான என்றுதான் அடித்தேன்.அது என்னவோ குட்டியானை என்றே வருகிறது.இதுல டபுள் மீனிங் எதுவும் இல்ல ,அண்ணே மன்னிக்கனும்.]

அண்ணன் பன்முகப்பாண்டியனுக்காக, கோடம்பாக்கத்தின் முக்கால்வாசி ஜனத்தொகைகளிடம் கதை கேட்டும் எதிலும் திருப்தி அடையாத கேப்டன், சில தினங்களுக்கு முன்பிருந்தாவனம்என்ற தெலுங்குப்படத்தின் ரீ மேக் உரிமையை ரகஸியமாக வாங்கி  வைத்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், 2010 ல் ஆந்திராவில் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய அந்தப்படம் தனது வாரிசுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்த கேப்டன்,படம் ரீமேக் தானே என்பதால் முதலில் படத்தை தானே இயக்கிவிடலாம் என்று முடிவு செய்திருந்தாராம்.

இதைக்கேட்டு கொதித்துப்போன இளைய கேப்டன்,பழைய கேப்டனைப்பார்த்து, நாக்கைத்துருத்தியபடியே,’’ஏற்கனவே நீங்க எடுத்த வறுத்த கறியைசாப்பிட்டு அஜீரணத்துல ஆஸ்பத்திரியில அட்மிட் ஆன, ஒரு ஆயிரம்பேர் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகாம இருக்காங்க. நாமல்லாம்  நடிச்சா யாரு பாப்பாங்கன்னு டவுட்டுல,வவுத்துல நெருப்பைக்கட்டிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருக்கேன். அதுல உங்க டைரக்‌ஷனும் சேர்ந்தா, படம் ரிலீஸாகுற சமயத்துல நம்ம ரெண்டுபேரு மேலயும் ஏகப்பட்ட கொலை, தற்கொலைப்பழிகள் விழ வாய்ப்பிருக்கு. அதனால ரீமேக்கை வாங்கி விட்டமா, கட்டிங்கைப்போட்டமா கவுந்து படுத்தமான்னு கம்முன்னு கிடங்கஎன்று கேப்டனை பதில் பேசவிடாமல் கேப் டவுன் ஆக்கிவிட்டாராம்.

தான் அறிமுகமாகப்போகும் பிருந்தாவனம்படத்தை பலமுறை பார்த்த சண்முகப்பாண்டி அண்ணனுக்கு சின்னதாக ஒரு சபலம்.

அதை வெளியில் சொன்னால் அண்ணன் வன்முகப்பாண்டியாக மாறி, என்னை ஆள் வைத்து அடித்தாலும் அடிப்பார். இருந்தாலும்,அடிதடி இல்லாத அண்ணன் தம்பி உறவு ஒரு உறவா என்று என்னை நானே கலவரப்படுத்திக்கொண்டு சொல்கிறேன்.
 
பிருந்தாவனத்தின் ஒரிஜினலில், ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடிகளாக, தற்போது தமிழில் நம்பர் ஒன்,டூ நடிகைகளான காஜல் அகர்வாலும், சமந்தாவும் நடித்திருந்தனர். அந்த இருவருமே தனக்கு ஜோடியாகக்கிடைத்தால் நல்லது என்பதுதான் சின்ன கேப்டனின் சின்னத்தனமான சபலம். 

 படம் பார்க்கும்போது, ஜூனியர் என்.டி.ஆரை டெலீட் செய்துவிட்டு அந்த இடத்தில் தன்னை நினைத்துக்கொண்டு மேற்படி அண்ணிகளோடு ஆசை ஆசையாய் வாழவே ஆரம்பித்துவிட்டாராம்.

அதை கேப்டனிடம் சொல்ல பயந்து, தங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக புரடக்‌ஷன் மேனேஜராக இருக்கும் மல்லியம்பட்டி மாதவனின் காதைக்கடிக்க, ‘இந்தா ஒரு பத்து நிமிஷத்துல பேசிட்டு வந்துர்றேன் தம்பி’ என்று போன மாதவன், சண்முக பாண்டிக்காக சமந்தாவிடமும், காஜல் அகர்வாலிடமும் கால்ஷீட் கேட்டு, அதை ஒட்டி  நடக்கவிருக்கும் ஏழரையை சந்திப்பதற்குப்பதில்,’பேசாம, இதோட நம்ம ரிடயர்மெண்டை அறிவிச்சிட்டு, மறுபடியும் தன் சொந்த ஊரான மல்லியம்பட்டிக்கே குடியேறிவிடலாமா’ என்று யோசிப்பதாக தகவல்.

ஷூட்டிங்  நடக்கிற தருணங்களில் அந்த ஏரியாவில் அரை பர்லாங்கு தூரம் தள்ளியிருப்பவர்களைக்கூட அழைத்து வந்து சாப்பாடு போடக்கூடிய புண்ணியவான் இந்த மல்லியம்பட்டி.

மேற்படி நியூஸை, முதன்முதலாக வெளியிட்டவன் என்ற முறையில், இதைப்படிக்க நேரும் சமந்தாவோ, காஜல் அகர்வாலோ  சினிமா நியாயதர்மங்களுக்கு கட்டுப்படாமல், சட்டத்துக்கு புறம்பாக எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் நான் பொறுப்பல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே சமயம் சூர்யா,விஜய் ,ஜீவா போன்றவர்களுடன் ஜோடி சேர்வது மட்டும் நடிப்பல்ல. அண்ணன் சண்முகப்பாண்டியன் கூட டூயட் பாடவும் எங்களுக்குத்தெரியும் என்று காட்டுங்கள். அப்போதுதான்  உங்களை பன்முகம் கொண்ட நடிகைகளாக எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியும் என்பதை சற்றே சஞ்சலத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அண்ணே, பாண்டியண்ணே, நானும் மதுரைக்காரன்தாண்ணே. உங்களையெல்லாம் அவ்வளவு லேசுல விட்டுக்குடுத்துருவமா?

ஒரு’ சன்’: குறிப்பு : மேற்படி அண்ணிகளோட படத்துல குடும்பம் நடத்தப்போறாரோ இல்லையோ, இப்போதைக்கு புகைப்படத்துலயாவது நடத்தட்டும்னு நெனச்ச என்னோட ஆசைக்கு வடிவம் தந்த நண்பர் கமாலுக்கு நன்றி.

Saturday, April 21, 2012

வெள்ளைச்சாமியோட மரணம் ஒரு ப்ளாக்பேக்- ஹாஸ்டல் தினங்கள்




மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு,சமீபத்தில் மாஸ்டர்ஸ்மலையாளப்படம் பார்த்துச்சலித்தபோது, எண்பதுகளில் வியந்து,மகிழ்ந்து,அழுது, சிரித்து ரசித்த மலையாளப்படங்கள் பெரும் ஏக்கத்தைத் தூண்டும் நினைவாக வந்து போனதை தவிர்க்க முடியவில்லை.

அப்போதெல்லாம் ஸெகண்ட் ஷோ படம் பார்ப்பதென்பது  மிகவும் பிடித்தமானதாய் இருந்தது.

அமெரிக்கன் கல்லூரியின் நான்கு ஹாஸ்டல்களில் ஒன்றான  வாஷ்பர்ன் ஹாலில் நான் இருந்தேன்.

டெர்ர்ர் என்ற வார்த்தையின் மொத்த அர்த்தமாய் எங்கள் வார்டன் ஜான் சகாயம் இருந்தார்.எப்போதுமே தமிழில் பேசமாட்டார்.

நானோ ஒரு விபத்து போல் ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்து விட்டேனே ஒழிய,அவர் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் சதா காலுக்கடியில் ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்துகொண்டே இருப்பேன்.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதேஎன்பார்களே அதை சத்தியமாக இந்த சகாயத்திடம்  கசாயத்தைக் குடித்த ஏதாவது ஒரு மாணாக்கன் தான் அனுபவித்து எழுதியிருக்கவேண்டும்.

ஏனெனில் இரவு நேரங்களில் ஹாஸ்டலின் எந்த ஒரு தூணிலிருந்தும், எவ்விதமும் அவர் வெளிப்படுவார் என்கிற பயம் எப்போதும் எங்கள் அடிவயிற்றை கவ்விக்கொண்டே இருந்தது.

அவருக்கும், அப்போது வாட்ச்மேனாக இருந்த குருசாமி அண்ணனுக்கும் டேக்கா குடுத்துவிட்டு இரண்டாவது காட்சி சினிமாவுக்குப்போவதென்பதுதான் எங்களது, அப்போதைய  ’அத்து மீறு அடங்க மறு’ [ சிறுத்தைகள் மன்னிப்பார்களாக]

’மாமனாரின் இன்பவெறி’ அஞ்சரைக்குள்ள வண்டி,பாவம் தம்புராட்டி, போன்றவ்ற்றின் மூலம், மலையாளப்படங்கள் என்றாலே பலான படங்கள் என்ற தவறான மனோபாவம் உருவாகியிருந்த அந்த கால கட்டத்தில் தான் ஆகச்சிறந்த மலையாளப்படங்களும் வெளியாகிக்கொண்டிருந்தன.

சக்தி தியேட்டரில் பாலுமகேந்திரா-இளையராஜா-மம்முட்டி கூட்டணியின், ’யாத்ராபடம் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு தூக்கம் பறிபோய் நானும்,பிரபாவும் விடியவிடிய பேசிக்கொண்டிருந்ததுஅந்த இரவின் தாக்கத்தோடே, இன்னும் நினைவில் இருக்கிறது,

ஹாஸ்டல் தினங்களிலும்,படிப்பு முடிந்து மும்பையில் வேலை செய்து சென்னை திரும்பிய வரையிலுமான அந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த அற்புதமான மலையாளப் படங்களின் கதைகளையும் அதன் சிறப்பம்சங்களையும் இன்றும் என்னால் நினைவு கூற முடியும்.

கிருஷ்ணகுடியில் ஒரு ப்ரணய காலத்து,  பாலுமகேந்திராவின்,’ஓளங்கள்;’ஊமக்குயில்,பரதனின் ’காற்றத்தே கிளிக்கூடு, மற்றும் பாதேயம்’ப்ரியதர்ஷனின் ‘தாலவட்டம், பத்மராஜனின் ’ நமக்குப்பார்க்கான் முந்திரித்தோப்புகள், ஃபாஸில் ஒரு காதல் காற்றாய் களமிறங்கிய ‘மஞ்ஞில் விரிஞ்ச பூக்கள்,,சினிமா மாமேதை அடூரின் ’மதிலுகள் மற்றும் அனந்தரம்,,சிபிமலயிலின்,’தனியாவர்த்தனம், பரதம்,சத்யன் அந்திக்காடுவின் ‘மழவில் காவடி’ ஜெயராஜின் ‘குடும்பசமேதர், ஒரே உண்மையான சனங்களின் கலைஞன் ஜான் ஆபிரகாமின்’ அம்மா அறியன்’என்று என்னால் ஒரு நூறு படங்களின் பெயர்களைக்கூற முடியும்.


ரொம்ப பழைய பார்ட்டிகிட்ட மாட்டிக்கிட்டமோ என்று நீங்கள் திகைப்பது அறிந்து, இளமைக்காலங்களான ஹாஸ்டல் தினங்களுக்கே வருகிறேன்.

அந்த சமயத்தில் கவிதை,கட்டுரைகளில்,ஸ்கிட் எனப்படும் குட்டி நாடகங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து மகிழ,அடிக்கடி எங்களது மெஸ் சாப்பாட்டை மெயின் டிஷ் ஆக எடுத்துக்கொண்டோம்.அவ்வளவு அற்புதமான  எங்களது மெஸ் சாப்பாட்டை அப்புறம் நான் வாழ்நாளில் எங்கும் சாப்பிட்டதில்லை என்பது காலங்கடந்த ஞானம்..

புரோட்டாவுக்கு செமி ட்ரையாக ஒரு மட்டன் மசாலா, அன்லிமிடெட்குஷ்கா, எங்கள் ஹெட்குக் நாயரின் கைப்பக்குவத்தில் எங்களுக்கு நேயர் விருப்பமாக, மற்றவர்களுக்குத்தெரியாமல் ரகஸியமாக வந்துசேரும் முட்டைதோசைகள், மாதக்கடைசிகளில் நடத்தப்பட்ட ஃபீஸ்ட் [விருந்து] என்ற ஒரு அற்புதமான உணவை நோகாமல் தின்றுவிட்டு கிண்டல் அடித்திருக்கிறோம்.

மேற்படி கிண்டலின் ஒரு அம்சமாக,எங்கள் ஹாஸ்டல் விழா ஒன்றுக்காக,அந்த சமயம் ரிலீஸாகியிருந்த பாலுமகேந்திராவின் ‘லேகாயொட மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ கைத்தழுவி, ‘வெள்ளைச்சாமியோட மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ என்ற நாடகம் ஒன்றை எழுதி,ஹாஸ்டல் நண்பர்கள் சிலரைத் துன்புறுத்தி ரிகர்சல் தந்து மேடையேற்றினேன்.

நான் படித்த 82-85 சமயத்தில் போஸ்ட் கிராஜுவேட்டில் மட்டும் பெண்களும் இருந்தார்கள்.
எங்கள் கெஞ்சிக்கூத்தாடிய, வேண்டுகோளுக்கு இணங்கி அந்த ஹாஸ்டல் மாணவிகளும் நாடகத்துக்கு வந்திருந்தார்கள்.
நாடகம் துவங்கி பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது.
அன்றைய மெஸ்ஸின் அன்லிமிடட் குஷ்காவுக்காக,நல்ல பசி ஏற்படும் பொருட்டு, எக்ஸர்சைஸில் சில தடிமாடுகள் ஈடுபட்டிருப்பதுபோல் ஒரு காட்சி.
காட்சியில் பல மாணவர்கள் இருந்தாலும், ஒரு டைரக்‌ஷன் டச்சோடு, நன்கு திணவெடுத்த தோள்களையும், முரட்டு கால்களையும் கொண்ட ராஜகோபால் என்ற அண்ணனை நன்கு முன்னிலைப்படுத்தி நிறுத்தியிருந்தேன்.
நாம் நிற்பது மேடை, எதிரில் நம் கல்லூரியின் சீனியர் அக்காக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து, அவரது ஐம்புலன்களிலும் குஷ்காவே ஓடிக்கொண்டிருந்த்தாலோ என்னவோ, தனது லுங்கி அவிழ்ந்து,தரையை முத்தமிட்டது கூட தெரியாமல்,தனது எக்ஸர்சைஸை தொடர்ந்துகொண்டிருந்தார் ராஜகோபால்.
ராஜகோபால் என்கிற கடோத்கஜன் வெறும் ஜட்டியோடு மேடையில் நின்ற ,அந்த திடீர் விபரீதக்காட்சியை, நானே பார்த்து அதிர்ந்தேன் என்கிறபோது, மாணவிகள் எத்தகைய அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள்?வெடிகுண்டு புரளி வந்ததுபோல்,  உடனே அக்காக்கள் ஆடிட்டோரியத்தை விட்டு தெறித்து ஓட, நாடகம் பாதியில் நின்று போனது.
நடந்துமுடிந்துபோன அதிபயங்கர விபரீதத்துக்கு, மறுநாள், வார்டன் ஜான் சஹாயத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது என்று யோசித்த போது எனக்குஅப்போது  வாழவே பிடிக்கவில்லை.

Friday, April 20, 2012

விமர்சனம் ஊ...ல..ல...லா..ஒண்ணுமே நல்லால்ல...

ஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும். பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செமையா எழுதுவாங்க. அதுவே நம்ம படத்துக்கு நல்ல ஓபனிங் அமைய உதவும் என்ற எண்ணத்துடன் படம் ரிலீஸாவதற்கு ஒரு வாரம் முன்பே பிரிவியூ போட்டுவிடுவார்கள்.
 
அப்படி கடந்த வாரம் அ’மை’ந்த படம் தான்மை’. இலக்கணம், கிராமர் மிஸ்டேக் போன்ற ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தும் இன்னும் யாரோ போல் அலையும் விஷ்ணுப்ரியன் குட்டி மேடைப்பேச்சாளனாக நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடி ஸ்வேதா பாசு.இதுக்கு முந்தி இவர் நடித்திருந்த ஒரு மொக்கைப்படத்தை முக்கி முக்கி யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.

’’சுடுகாட்டுல எரியிற பொணம் கூட கடைசியா ஒருமுறை எந்திரிச்சி நிக்கப்பாக்குது. நீ உயிரோட தான இருக்க, போராடி ஜெயிக்க மாட்டியாஎன்று வெட்டியாய் அலையும் ஹீரோ விஷ்ணுவை, சுயகவுரவம் என்னும் ஜட்டியோடு அலையும்படி தூண்டி விடுகிறாள் ஹீரோயின் ஸ்வேதா.

காதலி கடைக்கண் காட்டினால், கடையனும் கல்வி அமைச்சர் ஆகிவிடும் சினிமா அல்லவா தமிழ்சினிமா?

எனவே அவ்வளவு நாளும் தனது ஏரியாவில் வீட்டுகேட்டு,பம்புசெட்டு,கேபிள் ஒயர் என்று கண்டதையும் திருடி தின்று வந்த ஹீரோ, சின்ன திருட்டுகளில் இருந்து திருந்த முடிவெடுத்து,பெரிய திருடனாகும் முடிவுடன் கவுன்சிலர் தேர்தலில் நிற்கிறார்.’

‘’ எனக்கு ஓட்டுப்போட்டு கவுன்சிலராக்கினால், இனி உங்கள் வீட்டுப்பொருள் திருட்டுப்போகாது’’ என்று மக்களிடம் அவர் உத்தரவாதம் அளித்தவுடன் அவரையே ஜெயிக்க வைக்கிறார்கள்.

கதை வேலூரில் நடக்கிறது. மொத்தம் 41 வார்டுகள் உள்ள வேலூரில் ஆளுங்கட்சி 20, எதிர்க்கட்சி20 என்று சம்மாய் ஜெயிக்க, இப்போது மேயர் பதவியில் அமர, நம்ம ஹீரோ சுயேச்சையின் தயவு தேவைப்படுகிறது.

சின்ன வயசிலேயே காதலியின் உம்மாவை பத்துப்பத்து ரூபாய்க்கு விக்கப்பாத்த தில்லாலங்கடியாச்சே நம்ம ஹீரோ, அந்த அரசியல் குயப்ப நிலையைப்பயன்படுத்தி தானே மேயர் ஆகிவிடுகிறார்.

இவ்வளவும் கண்ட அசதியில், சற்றே கண்ணயர்ந்து விழித்தபோது, நடுவில் என்ன ரணகளங்கள் நடந்ததோ தெரியவில்லை நம்ம ஹீரோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிக்கொண்டிருந்தார், இந்தக்கதையை ஏற்கனவே பலமுறை கேட்டதாலோ அல்லது கதைக்காகவோ மெண்டலாகியிருந்த கதாநாயகியின் நண்பர் மெண்டல் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிக்கொண்டிருந்தார்.

அவர் டிஸ்சார்ஜ் ஆனதுனால, இடம் வேகன்ஸி கண்டிப்பா இருக்கும் வாங்க போகலாம் என்றபடி நாங்கள் தியேட்டரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தோம்.

டுத்து பார்த்த படம் நம்மை ரொம்ப படுத்த வந்த  ‘அடுத்து

யாருக்கோ த்ரில் கொடுக்க கொஞ்ச  நாளாக காணாமல் போயிருந்த தக்காளி சீனிவாசனின்இயக்கம்.. நடுவில் காணாமல் போனவகையில் கொஞ்சம் அதிகம் பழுத்த பழமாகவே காணப்பட்டார் தக்காளி..
இவங்களத்தான் அடுத்தடுத்து கொல்றாங்க
ஒரு சானல் பத்துபேரை சாகஸ நிகழ்ச்சி ஒன்றுக்காக  தேர்ந்தெடுத்து, ஒரு தீவுக்கு அனுப்பிவைக்கிறது.அவர்கள் தங்கும் பங்களாவில் ஒரு பத்துத்தலை ராவணன் சிலையை வைத்துவிட்டுப்போகும் ஒரு மர்ம நபர், அதைத்தொடர்ந்து காணாமல் போகும் தலைகள், ஒவ்வொரு தலை காணாமல் போகும்போதும் ஒரு கொலை நடக்கிறது.

இறுதியில் எதற்காக இந்தக்கொலைகள் நடந்தது என்று அதே அந்நியன் கெட்டப்பில் நாசர் சொல்ல ஆரம்பிக்கும்போது சஸ்பென்ஸ் த்ரில்லர்  சப்பென்று ஆகி, பலமான கொட்டாவி ஒன்று நம்மை கட்டித்தழுவுகிறது.

பங்களாவிலிருந்த அனைவரும் கொன்று முடிக்கப்பட்ட உடன் அடுத்த டார்கெட்டாக நம்மை மனதில் வைத்து தான் தக்காளியார் ‘அடுத்தது’ எடுத்ததுவோ?

ழைகளெல்லாம், நாம் என்றாவது ஒருநாள் பணக்காரனாகிவிட மாட்டோமாஎன்று ஏங்குவது மாதிரி,நாம் என்றாவது ஏழையாகி விட மாட்டோமா என்று ஏங்கக்கூடிய ஒரு சில பணக்காரர்களாவது இருக்க மாட்டார்களா/? என்ற சந்தேகம் எனக்கு இதுவரை மூன்று முறை வந்து போயிருக்கிறது.

முதல்முறை உனக்கு 18 எனக்கு20படம் பார்த்தபோது, 2வது முறைகேடிபடம் பார்த்த போது, 3வது முறை நேற்று’ ’ஊ ல ல லாபடம் பார்த்தபோது.
இவரப்பாத்துதான் ரோட்டுல  போற பொண்ணுங்கள்லாம் வாவ்ன்னு வாயைப்பொழக்குதுங்க
இந்த முத்தான மூன்று சந்தேகங்களையும் தந்தவர் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் சத்தான புத்திரடு ஜோதிகிருஷ்ணா.

ஊ ல ல லாபடத்தின் தயாரிப்பாளர்கள் என்று, வேறு இருவர் பெயர்கள் திரையில் காட்டப்பட்டாலும்,’ கதையில் அழிச்சாட்டியும் செய்து பத்து வருடங்களாக மகனிடம் பேசாமல் இருக்கும் தலைவாசல் விஜயைப் பார்க்கும்போதெல்லாம் ரத்தினம் சாரின் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

கொடியில் தொங்கிக்கொண்டிருந்த புடலங்காயை பறித்து வந்த எஃபெக்டில் காணப்படும்,த்தின் நாயகி என்னமோ ஒரு பண்டாரி பார்க்க சுமாராக இருந்தாலும்நடிப்பு ....?   தோற்றத்தையும் விட சுமார்தான்.

இந்த சுமார் ஃபிகரை சோதிகிருஷ்ணா என்ற சூப்பர் பாய் விரட்டிவிரட்டி காதலிக்கிறார்.ஒரு கட்த்தில் லவ் ஓகே ஆனதும், அவரை மறந்துவிட்டு,ரோடெங்கும் இவரைப்பார்த்து வாவ்’ என வழியும் மற்ற ஃபிகர்களுடன் மஜா பண்ண கிளம்பி ஃபிகர்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார் கிருஷ்ணா,

படத்தில் வரும் சம்பவங்களும் பெயர்களும் மாதிரி,. ரோட்டில் போகிற பொண்ணுங்கள்லாம் ஜோதிகிருஷ்ணாவைப்பார்த்து ஜொள்ளு விடுவது போன்ற காட்சிகளும் கற்பனையே. அதைப்பார்த்து யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்று படம் முடியும் தறுவாயில் ஒரு கார்டு போடமாட்டார்களா என்று ஏங்கினேன்.

ஊ..ல..ல..லா... ஒண்ணுமே  நல்லால்ல...

Monday, April 16, 2012

தயவு செய்து உங்கள் அழுகையை நிறுத்துங்கள்.

 
 

 அற்புதங்கள்  எங்கும்  சூழ்ந்துள்ளன...  வாழ்வின்  மீளமுடியாத  துயரத்திலிருந்து  தொடங்குகிறது அற்புதத்திற்கான  முதல் கணம்...எனவே  துயரங்களைக் கொண்டாடுங்கள்....-நம்மாழ்வார்

‘குமுதம்’ கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல், லயோலா கல்லூரியின் ஒரு அரங்கினுள், நேற்று மாலை 6 மணி துவங்கி 9 மணி வரை நிகழ்ந்தது.அவரது தகனத்துக்கு சுமார் 30 பேர் வரை மட்டுமே வந்திருந்த்து கண்டு பெரும் துயரடைந்திருந்தேன்.அதற்கு ஆறுதலாகவோ என்னவோ நேற்றைய கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களும் கிருஷ்ணாவின் ஏனைய நண்பர்களுமாய் 200 பேர்களுக்கும் மேல்  கூடிவிட்டார்கள்.


அரங்கினுள் நுழையும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணாவின் சில புகைப்படங்களைப்பார்த்த போதே கண்ணில் நீர்கோர்க்க ஆரம்பித்து,கிருஷ்ணா கிடாரில் கார்டு பிடித்துக்கொண்டே பாடிய விஷுவல்களைப்பார்த்தபோது வந்த அழுகையை அடக்க பெரும்பாடு பட்டேன்.

பேட்டி எடுத்தது,செய்தி எழுதியது,கதை விவாதத்தில் கலந்துகொண்டு உடன்பணியாற்றியது என்கிற வகையில் கிருஷ்ணாவுக்கு சினிமாக்காரர்கள், எனக்குத்தெரிந்தே, ஒரு 500 பேரையாவது தெரியும்.ஆனால் நேற்று வந்திருந்த சினிமாக்கார்கள் இயக்குனர் லிங்குசாமி,இயக்குனர் எஸ்.எம்.ராஜூ,தோழர் நடிகை ரோகிணி மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த இயக்குனர் ராம் ஆகிய நால்வரே. [ வேறு யாராவது வந்திருந்து நான் குறிப்பிடத்தவறியிருந்தால், என் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்து என்னைப்பழி வாங்குங்கள்.]

பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர் போன்ற இனிய நண்பர்களை என்றுமே சினிமாக்காரர்களாக பாவிக்க விரும்பவில்லை என்பதால் அந்த பட்டியலில் அவர்கள் இல்லை.[எப்பவுமே என் மேல பாசக்கார பாஸ்கர்சக்தி, கோவமா இருக்கார்னு எவண்டா சொன்னது?]

கிருஷ்ணாவைப்பற்றிய நினைவுகளை அவரது அக்கா உஷா துவக்கி வைக்க, அடுத்து பேச வந்த அவரது அப்பா, பேசியதை விட அதிகம் அழுது உயிரை உருக்கினார்.

இன்னொரு நண்பர், கிருஷ்ணாவின் மேதமையைப்பற்றி குறிப்பிடும்போது,’’ இன்றைய காலகட்டத்தில் சினிமா, இசை,இலக்கியம், பத்திரிகைத்துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அரை வேக்காடுகள் மலிந்து விட்ட சூழலில், கிருஷ்ணா போன்ற மேதமைகள் வெளிப்படாமலே மறைந்து போகிற துர்பாக்கிய நிலை குறித்து வேதனைப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு பேச்சுக்களும் கிருஷ்ணாவைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுத்துக்கொண்டிருக்க, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி.யின் மகள் கிருஷ்ணா நிகழ்த்திய உரை,நினைவேந்தல் நிகழ்வின் ஆகச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

நான் குமுதத்தில் சுமார் 45 மாதங்கள் வேலை பார்த்திருந்தாலும்,எஸ்.ஏ.பி.யின் மகள் இந்த கிருஷ்ணா ஆச்சியை அலுவலகத்தில் ஒரு வாரமும், அவர்களது வீட்டுக்குச் சென்ற இருமுறையும் மட்டுமே சந்தித்திருக்கிறேன். 

நல்ல பண்பாளர். நமக்கு முதலாளி என்ற உணர்வை ஒருபோதும் ஏற்படுத்தாதவர்.

எடிட்டோரியல் பொறுப்பு ஏற்பதற்காக அலுவலகம் வந்த அந்த ஒரு வாரத்தில் தினமும் கைநிறைய 10 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொண்டு வருவார்.மீட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே, எளிமையான சில கேள்விகளோடு மினி க்விஸ் நடத்துவார். பதில் சொல்பவர்களுக்கு பத்து ரூபாய்.

எங்கள் எடிட்டோரியல் ஆசாமிகளின் அந்த வார அபிராமி தியேட்டர் கேண்டீன் செலவுகள் எல்லாவற்றையுமே ஆச்சியின் அந்த பத்து ரூபாய்கள் பார்த்துக்கொண்டன.

அந்த இனிமையான ஒரு வாரத்துக்குப்பிறகு, அவரது அலுவலகத்தை விட்டே அவர் விரட்டப்பட்ட கதை பழைய கதை. இப்போது அது ஊரெல்லாம் அறிந்த பெருங்கதை.

கிருஷ்ணா குமுதத்துக்குள் எப்படி வந்தார் என்பதை விவரித்த ஆச்சி, ‘இத்தனை ஆண்டுகள் பணி புரிந்த கிருஷ்ணாவுக்கு குமுதத்தில் எங்களால் ஏன் நினைவஞ்சலி  செலுத்த முடியவில்லை என்பதை இங்கே உள்ள பலரும் அறிவீர்கள். ஆனால் அடுத்த ஆண்டு நாங்கள் குமுதத்தில் எப்படி நினைவஞ்சலி செலுத்துகிறோம் என்பதைப்பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதை சூசகமாகக்குறிப்பிட்டார்.

ஆச்சி குறிப்பிட்டது பற்றி நான் விளக்கம் எதுவும் கொடுக்கப்போவதில்லை. குமுதத்தின் உள்நாட்டு அரசியல் தெரிந்தவர்களுக்கு சுலபமாக இது விளங்கும்.மற்றவர்களுக்கு விளக்க,இது சரியான இடமும், தருணமுமல்ல.

’ஒரு அற்புதமான வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டுபோன கிருஷ்ணாவை நினைத்து பரவசம் மட்டுமே அடையவேண்டுமே ஒழிய, இனியும் யாரும் அவருக்காக அழக்கூடாது’ என்ற கிருஷ்ணா ஆச்சி ஒரு நெகிழ்வான குட்டிக்கதையும் சொன்னார்.

தம் ஒரே குழந்தையின் மேல் பேரன்பு கொண்டிருந்த பெற்றோர்கள் அவர்கள். ஒரு நாள் எதிர்பாராதவிதமாக அந்தக்குழந்தை இறந்து விடுகிறாள்.பெற்றோருக்கோ உலகமே இருண்டு  போனதுபோல் ஆகிறது.வந்த உறவினர்கள் ஆறுதல் சொல்லி திரும்பிப்போய்விட்டார்கள். நாட்கள் நகர்கின்றன.ஆனால் அந்தப்பெற்றோரின் அழுகை கொஞ்சமும் குறைந்த பாடில்லை.

ஒரு நாள் அந்த தந்தையின் நினைவு தப்பி, வேறு ஒரு வெளிதனில் பிரவேசிக்க, அங்கே நூற்றுக்கணக்கில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன, இன்னும் சற்று உற்று நோக்குகையில் தங்கள் குழந்தையும் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதை அந்த தந்தை கண்டார்.

சற்று நேரத்தில் இருள் சூழத்துவங்க, அந்தக்குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி நகரத்துவங்கினர்.

அதன்படியே இவர்களது குழந்தையும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயல அது தொடர்ந்து அணைந்துகொண்டே இருந்தது.

தந்தைக்கோ ஆற்றமாட்டாத ஆதங்கம்.  மகளிடம் கேட்கிறார்,’மகளே மற்ற பிள்ளைகளெல்லாம்  மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு, தங்கள் இருப்பிடம் நோக்கி சென்று விட்டார்கள்.உனக்கு மட்டும் ஏன் அது அணைந்து அணைந்து போகிறது?

அதற்கு அந்த மகள் சொன்னாள்,’’ அப்பா மற்றவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக போதுமான அளவுக்கு அழுதுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்க போய்விட்டார்கள்.ஆனால் நீங்களும் அம்மாவும் பலநாட்களாகியும் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறீர்கள்.

 தயவு செய்து உங்கள் அழுகையை நிறுத்துங்கள்.

உங்கள் கண்ணீர்தான் தொடர்ந்து என் மெழுகுவர்த்தியை அணைத்துக்கொண்டே இருக்கிறது.


 கிருஷ்ணாவின் மறைவு குறித்த இதற்கு முந்தின பதிவைப் படிக்க...http://ohoproduction.blogspot.com/2012/04/blog-post_05.html
 

விமர்சனம்,’பச்சை என்கிற காத்து’ பாத்து திகைத்தேன் நேத்து



சுமார் 5 வருடங்களுக்கு முன்பே,  ஒரு பத்து நிமிட குறும்படமாக, ஒரு டி.விடி.யில், கோடம்பாக்கத்தின் அத்தனை ஆபீஸ்களுக்கும்  படமாகும்  வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தது இந்த காத்து.

மிரட்டலான சில வசனங்களும்,திகைக்க வைத்த சில காட்சிகளுடன்,
’என்னிடம் கொஞ்சம் வித்தியாசமான சரக்கு இருக்கு’ என்பதை அந்த டி.வி.டி. சற்று உரக்கவே தெரிவித்தது.

5 ஆண்டுகால அவஸ்தைக்குப்பின் ரிலீஸான இநத ‘காத்தை’ வெகுஜனம் எப்படி சுவாசிக்கிறது என்று பார்ப்பதற்காக, நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு போயிருந்தேன்.நான் போகும்போது மணி 11.30 .என்னையும் சேர்த்து தியேட்டர் வாசலில் காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 4. சரி இன்னும் ஒரு அரைமணி நேரம் இருக்கிறதே, சின்னதாய் ஒரு வாக் போய்விட்டு வந்து டிக்கட் எடுத்துக்கொள்ளலாம் என்று போய்விட்டு 11.55 அளவில் திரும்பினால் அதில், காத்து கருப்பு அடித்தது போல் 2 பேர்  காணாமல் போயிருந்தார்கள்.ஒரே ஒருவர் மட்டுமே காத்தை நான் என்ன ஆனாலும் பாத்தே தீருவேன் என்பது மாதிரி முரட்டுப் பிடிவாதத்துடன் நின்று கொண்டிருந்தார்.

இந்தப்படம் குறித்து ஏற்கனவே  எனக்கு ஒர் அனுமானம் இருந்ததால், முன்னப்பின்ன அறிமுகம் இல்லாத ஒரே ஒருவருடன் அமர்ந்து படம் பார்க்கும் ரிஸ்க் என்னும் ரஸ்க் சாப்பிடும் மனமின்றி  தியேட்டரை விட்டு விடைபெற்றேன்.

தியேட்டரை விட்டு ஒரு காலை எடுத்து வைத்து,அடுத்த அடி எடுக்கப்போனபோது செல்போன் ரிங்கியது,’’அண்ணே,’காத்து’ படம் 4ப்ரேம்ஸ் தியேட்டர்ல போட்டுருக்கு. பாத்து வந்து சேருங்க’’ என்று படத்தின் மக்கள் தொடர்பாளர் வீ.கே.சுந்தரிடமிருந்து போன். இந்த மாதிரி நிகழ்வுகள் தனுஷ் ஐஸ்வர்யா,செல்வராகவன் வகையறாக்களுக்கு ஒரு முழு நீள படம் பண்ணும் அளவுக்கு சப்ஜெக்ட். நமக்கோ கன் டைம்ல சுந்தர் கூப்பிட்டதால டிக்கட் செலவு மிச்சம்,அவ்வளவுதான்.

சீமானையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் பச்சைத்தமிழில்  தலைப்பு அட்டைகள்,திரைமொழி,குரல்,வண்ணக்கலவை,நளபாகம்,களப்பணி,என்று ஆரம்பிக்க,.. பச்சை என்கிறவனின் மரணச்செய்தியோடு படம் துவங்குகிறது.

ஒரு கிராமம். பச்சை என்கிற குட்டி அரசியல்வாதி இறந்து கிடக்கிறான். அவன் உடலருகே யாரையோ எதிர்பார்த்தபடி அழுதுகொண்டிருக்கும் அவனது மனைவி, தனது அப்பா வந்தவுடன் அவரை நோக்கி, கூட்டத்தை விலக்கியபடி, வீட்டுக்குள் ஓடுகிறாள்.’’ஏம்பா ஒரு பிரியாணி வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?’ என்றபடி லெக் பீஸை கையில் எடுத்தபடி, கணவனின் மரணத்தை ரசித்தபடி,  ருசித்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

புருஷன் செத்துக்கிடக்குறப்ப, லெக்பீஸைக் கடிக்கிற அளவுக்கு குரூரமா என்னத்தைப் பண்ணிட்டான்?என்ற ஆர்வத்துடன் ரசிகன் படம் பார்க்க அமர்வான் என்று இயக்குனர் நினைத்திருக்கக்கூடும்.

படத்தின் ஆகப்பெரிய பலமும், பலவீனமும் முழுக்க வியாபித்திருக்கும் புதுமுக நடிகர்களே.பச்சையாக நடித்திருக்கும் வாசகர், இதுவரை தமிழ்சினிமா கண்டிராத ஈடு இணையற்ற குடிகாரராகவே வாழ்ந்திருக்கிறார்.

’எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். நான் இப்போது அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்?.

 ’’நான் மட்டும் கொஞ்சம் முந்தி பிறந்திருந்தா, வரலாறுங்கிற பேரை மாத்தி பச்சைன்னு வச்சிருப்பாங்க’ 

என்பது போன்ற அதிமேதாவித்தனமான வசனங்கள் படம் முழுக்க பரவிக்கிடக்கின்றன.

நாயகி தேவதையும் அபாரமாக நடித்திருக்கிறார்.ஆனால் தனது நெஞ்சில் பச்சையின் பெயரை ‘பச்சை’ குத்திக்கொண்டபிறகும் அவரிடம் தன் காதலை சொல்லாமல் இருந்த திரைக்கதையின் ரகஸியம் நமக்கு புரியவில்லை?.
பச்சையின் அம்மாவாக வரும் சத்தியபாமாவின் பத்திரப்படைப்பு இதுவரை தமிழ்சினிமா கண்டிராத அற்புதப் படைப்பு. அந்த அம்மா உண்மையில் நடிப்பில் அசாத்திய பாமா.
படைப்பாளிகள் மிகவும் எளிமையானவர்கள், ஏழைப்பட்டவர்கள் என்பது கையாண்டிருக்கும் கதையிலும், தொழில் நுட்பத்திலும் அப்பட்டமாகத்தெரிவதால்,அதுகுறித்து விமரிசிப்பது நியாயமாகப்படவில்லை.

ஆனால் இவ்வளவு இருந்தும், இது ஒரு நல்ல படமாக எந்த இடத்திலுமே மாறாமல் போனதன் காரணம் படம் முழுக்க வியாபித்திருந்த உச்சக்கட்ட குரூரத்தனம்.காதலிக்கிற பெண்ணை ஐ லவ் யூ சொல்லச்சொல்லி தண்ணித்தொட்டியில் முக்கிக்கொல்லுவது,அதன்பின் அடித்துக்கொண்டு அழுவது போன்ற காட்சிகள்தான் மொத்தப்படமும்.

அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில், நாயகி பச்சையைக்கொல்கிற விதம் சொல்லவே அச்சமாக இருக்கிறது.
‘பச்சை என்கிற காத்து’ இப்படியெல்லாம் படம் எடுக்கனுமா? என்று பார்த்து திகைத்தேன் நேத்து.

[விமர்சனம்,பச்சை என்கிற காத்து, கீரா, வாசகர்,செல்வி, pachai enkira kaththu,kira, vasakar,]


Friday, April 13, 2012

விமரிசனம் ’ஓ.கே. ஓ.கே’- படம் ஓ.கே. பட் உதயநிதி கொஞ்சம் வீக்கே, வீக்கே...

படம் முழுக்க ஒன்லி ரிச் கேர்ள்ஸ்தான்

ப்ளீஸ் சொல் நீயெல்லாம் ஒரு பொண்ணாடி?

ஒரு முன்[னாடி] குறிப்பு:இந்தப்படம் 2மணிநேரம் மற்றும் 53 நிமிடங்கள் ஓடுகிறது. டூ வீலர் பார்க்கிங்கின் போது ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியில் மாட்டி விட்டுப்போவது போல் மூளையையும் கழட்டி படம் முடியும் வரை  எங்காவது மாட்டி வைத்துவிட்டுப்போகமுடிந்தால் கொஞ்சம் சிரித்து மகிழலாம்.

பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என்ற அறிவுப்புடன் ஒரு ‘பயங்கரமான பின்குறிப்பு  விமர்சனத்தின் முடிவில் இருக்கிறது. அதை அவசரமாகப்போய் படிக்க வேண்டாம்.

சிவா மனசுல சக்தி’ பாஸ் [எ] பாஸ்கரன்’ படங்களை இயக்கிய அதே ராஜேஷ் , ஒரே கதையை மூன்றாவது முறையாக, நடிகர்களை ஜீவாவுக்கு பதில் ஆர்யா, ஆர்யாவுக்கு பதில் உதயநிதி என்று ஆள் மாறாட்டம் செய்து  இயக்கியிருக்கும் படம்.

ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு ஈகோ. முதல் பத்து சீன்களுக்கு லவ் சேஸிங். ஒரு பாட்டு, நடு நடுவே ’தேனே மானே’  போட்டுக்கிற மாதிரி சந்தானத்தை வைத்து காமெடி, பிறகு காதல், டூயட், அப்புறம் ஊடல், காதலைப்பற்றி சில சாடல், ரசிகர்கள் கதை எங்கேடா என்று தேடல் இப்படி ராஜேஷின் முந்தைய இரு படங்களிலிருந்து சற்றும் விலகிவிடாமல் பயணிக்கிறது ’ஒரு கல் ஒரு கண்ணாடி.

கூடவே சந்தானம் என்கிற சத்தான ‘பானத்தை வைத்துக்கொண்டு, கோ-கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்களை பல கோடி செலவில் லான்ச் பண்ணுவதுபோலவே, கதாநாயகன் உதயநிதியை களமிறக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நடிக்க வேண்டிய வேலை என்று ஒன்று இல்லவே இல்லை என்றாலும், முதல் நாள் எல்.கே.ஜி. செல்லும் பள்ளிக்குழந்தையின் பதட்டம் படம் முழுக்க உதயநிதியிடம் தெரிகிறது.பேஸ்மெண்ட் என்னவோ ஸ்ட்ராங் என்றாலும் இவருக்கு நடிப்பு என்கிற பாடி கொஞ்சம் வீக்தான்.

அதே போல பாடல்காட்சிகளில் பல இடங்களில் சாக்பீஸில் கோடு கிழித்துக்கொண்டு ஆடிய்து அப்பட்டமாகத்தெரிகிறது.

இந்த மாதிரி பணக்கார ஹீரோக்கள் அதிகமாக ‘லாஞ்ச்’ ஆவதை முன்னிட்டு அவர்களுக்கென்றே டான்ஸ் மாஸ்டர்கள் சட்டையை  ஆட்டுவது, லுங்கியை தூக்கி காட்டுவது, ஆய் போகப்போவதுபோல் பிருஷ்டத்தை ஆட்டுவது சமீபகால டான்ஸ் மூவ்மெண்ட்களில் அதிகரித்து வருவதை, எந்த மூவ்மெண்ட்டாவது கொஞ்சம் கண்டித்து வைத்தால் எதிர்கால தமிழ்சந்ததி தப்பிப்பிழைக்கும்.

நன்கு பூரித்த சோளாபூரியாகவே காட்சியளிக்கும் ஹன்ஷிகா மோத்துவாணி என்கிற குந்தாணி,  படத்தில் சிரிக்கிற காட்சிகளில் எல்லாம் அழுவது போலவும், அழுகிற காட்சிகளில் எல்லாம் சிரிப்பது போலவும் தெரிவதுதான் பாரதியார் சொன்ன காட்சிப்பிழை போலும்.

பாலசுப்பிரமணியெத்தின் பணக்காரத்தனமான  ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்துக்கு பக்கா பலம். அதிலும் ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு’ பாடல் கொஞ்ச நாளைக்கு தேவதாஸ்களின் தேசிய கீதமாக ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. [ சந்தானம் வசனமா எழுதிக்கொடுத்ததைத்தான் நா.மு. பாடலாக்கி நாமம் போட்டதா ஒரு ’ரூமர்’ ரூம் போட்டு  அலையிதே உண்மையா? ]

காமெடிப் படத்தில் ஒரு சீரியஸ் மேட்டராவது இருக்கட்டுமே என்ற நினைப்பில் டைரக்டர் ராஜேஷால் வைக்கப்பட்ட சரண்யா டிகிரி வாங்காததால் கணவன் 20 வருஷமாக பேசாம இருப்பது உச்சக்கட்ட காமெடி.

’அடுத்த படத்துல நான் இருக்கனா மச்சான்? என்று கேட்க வந்ததைப்போல், ஆர்யா,ஸ்நேகா,ஆண்ட்ரியா ஆகியோர் தலா ஆளுக்கு அரை காட்சிகளில் த’ யைக்காட்டுகிறார்கள்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ சந்தானம் தான். முழுப்படத்தையும் தனது தோளில் தூக்கிக்கொண்டு, உதயநிதியையும் பல காட்சிகளில் காப்பாற்றுகிறார்.

‘’நீயெல்லாம் நல்லா வருவேடா’ என்று நண்பனை வயிற்றெரிச்சலுடன் வாழ்த்துவதில் துவங்கி,’கேக்குறவன் கேணயனா இருந்தா கேரம் போர்டைக் கண்டு பிடிச்சவர் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவீங்கடா’ போல் சுமார் நூறு பஞ்ச்களாவது தியேட்டரை அதிர வைக்கிறது.

நேற்று நடந்த ‘கண்டுபுடி கண்டுபுடி’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் மாரிமுத்து படங்களை நான்கு வகைகளாகப் பிரித்தார். 1. ஓடும் நல்ல படம். 2.ஓடாத நல்ல படம்.3. ஓடும் கெட்ட படம்.4. ஓடாத கெட்ட படம்.

மேற்படி வகையறாவில் ‘ஓகே. ஓகே’ சந்தேகமின்றி மூன்றாவது வகையைச்சேர்ந்தது.

இதை மட்டும்  சந்தானம் குரலில் படித்துக்கொள்ளுங்கள்.’டைரக்டர் ராஜேஷ் நீங்கள்லாம் நல்லா வருவீங்க பாஸ்’

ஒரு பயங்கரமான பின் குறிப்பு: ‘குமுதம்’ கிருஷ்ணா டாவின்சியின் இழப்பை நினைத்து பத்திரிகையாளர்கள்  நொந்துகொண்டிருந்த வேளையில் , ஒரு வாரம் கூட பூர்த்தியாகாத நிலையில், சரியாய் மறுபடியும் நேற்று வியாழனன்று, சினிக்கூத்து’ பொறுப்பாசிரியர் மா.முருகன் எதிர்பாராத விதமாக காலமானார்.

இன்று ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பிரஸ் ஷோ அமரர் மா.முருகனுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பிறகே துவக்கப்பட்டது.

அப்போது ஒரு பத்திரிகையாளர் ,இந்த ’வியாழக்கிழமை விபரீதம் ’ இன்னும் ஒரு அஞ்சு வாரத்துக்கு கண்டினியூ ஆகும்னு ஒரு பிரபல ஜோசியர் சொல்லிக்கிட்டு இருக்காரு. வர்ற  வியாழக்கிழமை யாரோ,எவரோ? என்று மரண காமெடி பண்ண ஆரம்பித்தார்.

நல்லவேளை நானெல்லாம் ‘பத்திரிகையாளர் வேலையை விட்டு பத்து வருஷமாச்சி.

Monday, April 9, 2012

’இயக்குனர் சசிக்குமார்தான் கொலையாளி என்று மலையாளிகள் கண்டுபிடித்து விட்டதால்...

 அண்ணன் தான் ‘ஒத்தவீடு’ பட ஹீரோ. ஆழ்கடல் நீச்சல் வீரராம். எவ்வளவு ஆழத்துல ஸ்விம் பண்றாரு பாருங்க...


மொக்கைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுறதே அயோக்கியத்தனம்,காவாலித்தனம்,மொள்ளமாரித்தனம்,முடிச்சவிக்கித்தனம். அதுலயும் ஒரு பொண்ணு, அதுவும்  ஒரே ஒரு சீனு நிர்வாணமா நடிச்சாங்குறதுக்காக ‘மழைக்காலம்’ படத்துக்கு தனி விமர்சனம் தேவையா ?

நேற்று செல்போனில் நேந்திரங்காய் சிப்ஸாய் பொரிந்தார் ஒரு  நண்பர்.

சரண்யா நாஃக் அருகே அமர்ந்து படம் பார்த்ததால் கொஞ்சம் ஓவராய் உணர்ச்சி வசப்பட்டது அறிந்து, வருந்தி, இனி திருந்த முயல்கிறேன்.

‘ஒத்த வீடு’ என்றொரு ஜடம் ஸாரி படம். அதை இயக்கியவர் பத்திரிகையாளர் பாலன். வாரத்துக்கு மூன்று நாட்களாவது அவரை நேரில் சந்திக்கவேண்டி இருப்பதை முன்னிட்டும், ஆள் கொஞ்சம் தாட்டீகமான பாடிக்காரர் என்பதை எண்ணிட்டும் ஒத்த வீடு பத்தி ஒத்த வரி கூட எழுதாகாமல்,அதனாலேயே பழுதாகாமல் தப்புகிறேன்.

படத்தில் பாலன் பல காட்சிகளில் நடிக்கவும் செய்திருந்தார்.அந்த நடிப்பைப் பத்தியாவது நாலு வார்த்தை எழுதலாமா என்று கை நமநம என்கிறது.ஆனால் பிரஸ் ஷோவுக்கு பாலன் டிபனாகத் தந்த போண்டா, ஏண்டா உனக்கு இந்த வேண்டா வேலை என்கிறது.
 மொத்தத்தில் பாலன், தயாரிப்பாளருக்கு வாய்த்த காலன், என்பதை எதுகை மோனையோடு   பதிவு செய்து,’ஒத்த வீட்டிலிருந்து உடனே பொதிகை எக்ஸ்பிரஸ் வழியாக விடை பெறுகிறேன்.

டிவேல் தனக்குத்தானே சொல்லிக்கொண்டுரவுடியாய்  ஃபார்ம் ஆனமாதிரி, சில டைரக்டர்கள் தங்கள் மொக்கைப்படங்களே ஹிட் படம் போல் ஆக்கிக்கொண்டு, அடுத்த படம் பண்ணும்போது, திஸ் இஸ் எ ஃபிலிம் பை தேட் ஃப்லிம் டைரக்டர்’ என்று கொஞ்சமும் கூச்சமின்றி பெருமை பீத்திக்கொள்கிறார்கள்.

அப்படி ஒரு அரைவேக்காட்டு ‘போர்க்களம்’ தந்த பண்டி சரோஜ் குமார் , இந்த வாரம் புதிதாக ’அஸ்த்த்தமனம்’ என்ற அருவாமனையோடு வந்திறங்கினார்.

பாவம் தெலுங்குக்காரர், தமிழ் சரியாகத்தெரியாததால். தலைப்பில் ஒரு ‘த்’ அதிகமாகப்போட்டுவிட்டாரோ என்று ஒரு உதவி இயக்குனரிடம் கேட்டால், ‘இல்லை சார், கதை ரொம்ப அழுத்தமானதுன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக ஒரு ‘த்’ அதிகமாப்போட்டோம்’ என்றார்.
’உங்களை அப்பாலிக்கா சந்திக்கிறேன்’ என்றபடி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

கரடுமுரடான ரெண்டு குட்டிகளுடன்,மூன்று முரடுகரடான குட்டன்கள் ஒரு த்ரில் அனுபவத்துக்காக காட்டுக்குள் பயணிக்கிறார்கள்.நாம் தியேட்டருக்குள் பண்டி சரோஜ் குமாரிடம் மாட்டிக்கொண்டது போலவே அவர்கள் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.அதில் ஒரு மூன்று பேர் கொல்லப்பட்டுவிட, மீதி மூன்று பேர் நாம் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது வந்தது போலவே குற்றுயிரும் கொலையுயிருமாய் தப்பி வருகிறார்கள்.

வித்தியாசமான ஆங்கிள்கள் வைக்கிறேன் பேர்வழி என்று படத்தின் தொண்ணூறு சதவிகித ஷாட்களை செடிகொடிகளுக்கு வைத்துவிட்டு நடிகர்களை அவுட் ஆஃப் போகஸில் காட்டுகிறார்.

படத்தின் ஒரே ஆறுதலான அம்சம்  அது வெறும் 77 நிமிடங்கள் மட்டுமே ஓடியது என்பதே.
பண்டி சீக்கிரமே மீ ஊருக்கு ஜருகண்டி.




ஸ்தமனத்துக்கு அடுத்தபடியாக நம் மனத்தை அவஸ்தைப்படுத்துவதற்கென்றே வந்து சேர்ந்தார்கள், நம்ம  சசிக்குமாரை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி கையோடு ரிடர்ன் டிக்கெட்டும்  எடுத்துத்தந்த ‘மாஸ்டர்ஸ்’

க்ரைம் த்ரில்லரின் லட்சணமே,கொலையாளியையோ, குற்றவாளியையோ பார்வையாளன் யூகிக்க முடியாமல் இருப்பது.இதில் சசிக்குமார் கதையில் கொஞ்ச நேரம் காணாமல் போனதுமே, கொலையாளி அவர்தான் என்பதை மலையாளிகள் கண்டுபிடித்துவிட்டதால் படம் படு ஃப்ளாப் என்று கேள்விப்பட்டேன்.

படத்தின் ஹீரோ பிரித்விராஜ், சசியை ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரியே ஆக்கிவிட்டார். படத்தில் நம்ம ஆஞ்சநேயாவின் முன்னாள் காதலி அனன்யா, கோ’ கோவா’ பியா, காதல் சந்தியா என்று மூன்று ஹீரோயின்கள் இருந்தும் யாரும் யாருக்கும் ஜோடியில்லை.[ஃபிகருங்க மேட்டர்ல டைரக்டர் ரொம்ப பொஸசிவ்வான ஆளு போல ]

சந்தியா நடுவில் ஏதோ ஒரு போலி டாக்டரிடம் மூக்கு ஆபரேசன் செய்திருப்பார் போல. மூக்கின் மேல் ஒரு நாலைந்து லாரிகள் ஏழெட்டுவாட்டி ஏறி இறங்கியது போல ஒரு எஃபெக்ட்.

நடிப்பு என்று வந்துவிட்டால் கண்கள் பேசவேண்டும். மாஸ்டர்ஸில் மொழி தெரியாமல் முழி பிதுங்கியதாலோ என்னவோ சசிக்குமாரின் கண்கள் உயிரற்ற சடலங்கள் போலவே இருக்கின்றன.

 இந்த லட்சணத்தில் இவருக்கு ‘புலிக்குட்டி’ என்ற படத்திற்கு சம்பளம் 2 கோடியாம்.

 ஒரு தாடிக்கு ஏன் ரெண்டு கோடி.?

எண்டே குருவாயூரப்பா.. ஈ  ந்யூஸூ  கேட்டோ?

சசிக்குமார் சேட்டனோட க்ரூர க்ரித்தியங்கள் ஸ்டார்ட் ஆவ்நோ?



Friday, April 6, 2012

விமர்சனம் ‘மழைக்காலம்’- தயவு செஞ்சி மழைக்காகக் கூட தியேட்டர் பக்கம் ஒதுங்கிடாதீங்க

அடுத்த இளைய தளபதிய நல்லா பாத்துக்கங்க
நிர்வாணமா நடிச்சி இப்பிடி கொலைப்பழிக்கு ஆளாயிட்டியே சரண்யா?

நடிகை சரண்யா நிர்வாண மாடலாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்தக்காட்சியில் நடித்தபோது ஸ்கின் ட்ரெஸ் போட்டுக்கொண்டு நடித்தார். இல்லையில்லை உண்மையிலேயே நிர்வாணமாக நடித்தார். ஸ்கின் ட்ரெஸ் போட்டதாகச் சொல்வதுதான் நடிப்பு.

இப்படி சில வாரங்களாக, வாலிப வயோதிக அன்பர்களை அல்லல்பட வைத்த ‘மழைக்காலம்’ படத்தை நேற்று 4 ப்ரேம்ஸ் தியேட்டரில், அதுவும் நடிகை சரண்யாவின் அடுத்த ரோவில் அமர்ந்து பார்த்தேன். ப்ளவுஸுக்குப் பின்னால முந்தில்லாம் ஜன்னல் வச்சீங்க. அப்புறமா பெருந்தன்மையா கதவு வச்சீங்க. இப்ப என்னடான்னா, சரி படிக்கிறவங்க வயித்தெரிச்சல் நமக்கெதுக்கு?

அவர் உண்மையிலேயே நிர்வாணமாக நடித்தாரா, ஸ்கின் ட்ரெஸ் போட்டு நடித்தாரா என்று தெரிந்துகொள்ளுமுன், படத்தோட கதையைப்பார்ப்போம்.

கமலா தியேட்டர் ஓனரின் தம்பி ஹீரோ. பேரு விஜய். பைக்கை எடுத்து எங்காவது சுத்திக்கொண்டிருப்பதுதான் அவர் பார்க்கும் வேலை. அப்படி சுத்திக்கொண்டிருக்கும் ஒரு நாளில், ‘புதிய கீதை’ விஜய் மாதிரியே, நம்ம விதியே பேதை விஜயும், பைக்கின் சைடு ஸ்டேண்டை எடுத்துவிட மறந்து ஓட்டிக்கொண்டிருப்பதை  ஹீரோயின் சரண்யா பார்த்து ஹீரோவுக்கு சொல்ல, சும்மா சுத்திக்கிட்டிருக்கும் பிள்ளைக்கு காதல் வர இதைவிட வலுவான காரணம் வேறு வேண்டும்?

 காதல் வந்ததும் ஒரு ஏழெட்டு சீன்களுக்கு ஊர்சுற்றிவிட்டு,’ கர்த்தருக்கு அடுத்த படியா உன்னத்தான் நேசிக்கிறேன். ஆனா என்ன விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் கட்டிக்கோ’ என்கிறார்  சரண்யா.

கமலா தியேட்டரின் குட்டி ஓனரோ, அதை ஒப்புக்கொள்ள மறுத்து, சரண்யாவுக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார்.

மவனே பொழைச்சிப்போன்னு நல்லபடியா சொன்ன கேக்கமாட்டியில்ல’ என்று மனசுக்குள் நினைத்த படி.  நம்ம ஹீரோவை  ஓவியக்கல்லூரி ஒன்றுக்கு அழைத்துப்போய், தான் ஒரு நிர்வாண மாடல் என்று அப்படியே  வந்து காட்டி நொந்து போகவைக்கிறார்.

உடனே டைரக்டர், ஹீரோவின் இதயத்துக்கு கிராபிக்ஸ் உத்தியின் உதவியுடன் ஒரு ஜூம் ‘போட ஹீரோவின் இதயம் உடைந்து நொறுங்குவதைக்காட்டி, நம்மை வாட்டி வதைக்கிறார்கள்.

இதில் பதினைந்து நிமிடம் வசனமே இல்லாத க்ளைமேக்ஸ் என்ற விளம்பரம் வேறு.

தீபன் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார்.காதல் காட்சிகளில் காதல் இல்லை. காமெடி காட்சிகளில் காமெடி இல்லை.மொத்தத்தில் படத்தில் அப்படி என்று சொல்லப்படுகிற  எதுவுமே உருப்படியாக இல்லை.

ஸ்ரீராம் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். சீக்கிரமே இளையதளபதியின் இடத்தைப்பிடித்து அவரைப் பழைய தளபதி ஆக்கும் எண்ணத்துடன் தான் படத்தில் இவரது கேரக்டருக்கு விஜய் என்று பெயர் வைத்தார்களாம்.இவரைப்பார்த்தவுடன் பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நடிப்பு ஆசை வந்துவிடும். அப்படி ஒரு நடிப்பு.

சரண்யா நாக் க்ளைமேக்ஸில் நிர்வாணமாக நடிக்கப்போகிற ஒரே காரணத்துக்காக ஆரம்ப காட்சிகளில் அவ்வளவு இழுத்துப்போர்த்தி நடித்திருக்க வேண்டாம். கொஞ்சம் தாராளமாக இருந்திருந்தால், முதல் முறை பார்த்ததுமே ஹீரோவுக்கு  ஏற்பட்ட இதய வெடிவிபத்தை தவிர்த்திருக்கலாம்.

மற்ற படி படத்தில் இடம்பெற்ற நாலைந்து பாட்டுக்கள், யார் யாரை அடிக்கிறார்கள் என்றே தெரியாத குரூப் ஃபைட், தம்பி எதுகேட்டாலும் வாங்கித்தரத்தயாராக இருக்கும் அண்ணன் தம்பி செண்டிமெண்ட் என்று தான் கைவைத்த எல்லாவற்றையுமே பார்க்காதவர்கள் மட்டுமே ‘பொழைக்கலாம்’ என்கிறார் மழைக்கலாம்’ டைரக்டர்.

உங்க ஊர்ல ‘மழைக்காலம்’ ஸ்டார்ட் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்.

அப்புறம் தலைப்பை இன்னொரு தடவ படிச்சிப்பாத்துட்டு, மழையா, தற்கொலையாங்கிற முடிவை நீங்களே சொந்தமா எடுங்க.

Thursday, April 5, 2012

‘கேட்டபோதெல்லாம் கொடுத்தவனே கிருஷ்ணா கிருஷ்ணா’



 


  
                                                                                                                                                            ’நெஞ்சு வெடித்துச்சிதறின வேளையெல்லாம் பொறுக்கியெடுத்து செய்துகொண்டோம் இன்னொன்றை’- எபன் என்கிற மலைச்சாமி

நேற்று மாலை ஒரு நண்பர் போன் செய்து , ’’ சார் ஒரு ரூமர் மாதிரிதான் கேள்விப்பட்டேன். ஆனா கொஞ்ச நாளாவே உடம்பு முடியாமதான் இருந்தார்’’ என்று பேச ஆரம்பித்தபோதே இன் பாக்ஸில் ‘கிருஷ்ணா இறந்துவிட்டார்’ என்ற குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

அந்தச்செய்தியைப் படித்ததும் பாலுமகேந்திராவின் ‘.சந்தியாராகம்’.படக்காட்சி ஒன்று ஞாபகம் வந்துவிட்டுப்போனது. சொக்கலிங்க பாகவதர் வயசை ஒத்த ராமசாமி என்பவர் இறந்திருப்பார். அதைப்பற்றி அவர்கள் பேசும்போதே அடுத்து நாமதான் என்ற மரண பயம் அவர்களைக் கவ்வ ஆரம்பித்திருக்கும்.அப்படியான ஒரு மரண பயத்தோடுதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் கிருஷ்ணா.

குமுதத்தை விட்டு வெளியே வந்த இந்த எட்டு ஆண்டுகளில், கிருஷ்ணா உட்பட யாருடனும் நான்  பெரிய தொடர்பில் இருக்கவில்லை. ‘இப்பதான் கிருஷ்ணா வந்துட்டுப்போனார். உங்களை ரொம்ப விசாரிச்சார்’ என்று ‘ரேணிகுண்டா’ டைரக்டர் பன்னீர்ச்செல்வம் மாதிரி யாராவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் கிருஷ்ணாவையும் என்னையும் சந்திக்கவிடாமல் காலம் ஏதோ ஒருவிதமான கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தது.

சுமார் பத்து தினங்கள் முன்புதான் போனில் வந்து ‘யார்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்’ என்று சவால் விட்டபடி பேச்சை ஆரம்பித்தார் கிருஷ்ணா.அந்த  நெடிய பேச்சின் முடிவில், மிக விரைவில் இருவரும் சந்திப்பது என்று பரஸ்பரம் உறுதி எடுத்துக்கொண்டோம். அந்த சந்திப்பு நிகழப்போகும்  இடம் ஒரு  மின்சார சுடுகாடு என்று யாரே அறிவார்?

குமுதத்தில் நான் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, எனக்கு மிகவும் நெருக்கமானவராக ஆகியிருந்தவர் கிருஷ்ணா. நம்மிடம் வேலை வாங்கும்போது அதில் எப்போதும் நட்புமணம் வீசும். நான் உதவி இயக்குனராக வேலை செய்து நொந்த கதையெல்லாம் அவரிடம் மட்டுமே ஒரு வரி விடாமல் சொல்லியிருக்கிறேன்.’ தங்குற இடம் ஃபிரீ, 15 ரூபாயில மூனு வேலை சாப்பிடுற டெக்னிக்கெல்லாம் நான்  சொல்லும்போது, ‘இத ஒரு சிறு கதையா எழுதிக்குடுங்க. என்னோட இஷ்யூல போடுறேன்’ என்பார்.

மாதக்கடைசிகளில் என்னைப்போன்ற பலருக்கு கேட்டபோதெல்லாம் கொடுக்கிற ஏ.டி.எம் கிருஷ்ணா.

கிருஷ்ணாவுக்கு சினிமாமேல் இருந்த காதலைப்போல் வேறு எவரிடமும் சத்தியமாக நான் பார்த்ததில்லை.ஆனால் அது அவருக்கு கைகூடாமல் போனது ஒரு பெரும் துரதிர்ஷ்டமே.சினிமாவுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணாவின் சிலாகிப்புக்கு அதிகம் ஆளாவது எழுத்தாளர் சுஜாதா. எனக்கெல்லாம் கிருஷ்ணாவே ஒரு குட்டி சுஜாதாவாகத்தான் தெரிந்தார்.

’குமுதம்’ மாதவருவாய் தந்த நம்பிக்கையில் அங்கு வேலையில் இருக்கும்போதுதான் நான் திருமணம் செய்துகொண்டேன். ஒரு ஏ4 சைஸ் பேப்பரை 4 பீஸ்களாக கட் பண்ணி,’ எனக்கு விருதுநகர்ல கல்யாணம். வந்தா உங்களுக்கும் செலவு எனக்கும் செலவு . இங்கருந்தே வாழ்த்துங்க’ என்றுதான் கையால் எழுதப்பட்ட  என் கல்யாண அழைப்பிதழே இருந்தது. கிருஷ்ணா உட்பட அனைவருமே அதை ரசித்தார்கள்.

82- ம் ஆண்டே வீட்டை விட்டு வெளியேறி,மிக நீண்ட பேச்சிலர் வாழ்க்கையில் எனக்கு சமையல் கைவந்த கலை ஆகியிருந்ததால், என் மனைவியை உற்சாகப்படுத்தும்பொருட்டு எப்போதுமே சனி ஞாயிறுகளின் மதியச்சமையல் என்னுடையதாகவே இருக்கும்.

இந்த தகவலை நான் சொன்னவுடன் ஒரு சனியன்று கிண்டல் செய்தபடியே என் சமையலை சாப்பிட வந்த, கிருஷ்ணா, ‘’அட  முத்து, நீங்க எழுதுற நியூஸ விட உங்க சமையல் பிரமாதம் ‘என்றபடி பெரும்பாலான சனி ஞாயிறுகளை என் சமையலோடு  கழித்த நாட்கள் இப்போது கண்ணீர்கலந்த ஞாபகங்களாய் வழிகின்றன.

அடுத்து, பத்திரிகை வேலையை விட்டவுடன் ஏனோ சமைக்கிற பழக்கத்தையும் விட்டுவிட்டிருந்தேன்.

கடந்தவாரம், கிருஷ்ணா போன் பண்ணார்.சீக்கிரமே மீட் பண்ணலாம்னு சொல்லியிருக்கார்’ என்று என் மனைவியிடம் சொன்னதுமே, ‘அப்பல்லாம் நீங்க சனி ஞாயிறு லஞ்ச் எவ்வளவு ஆர்வமா பண்ணுவீங்க.இப்ப சுத்தமா விட்டுட்டீங்க. அவர் வர்ற அன்னிக்காவது சமைங்கப்பா . உங்க சமையல் அவருக்கு ரொம்ப புடிக்கும்’ என்றாள் என் மனைவி.

’’வர்ற சனி ஞாயிறு சத்தியமா நான் தான் சமைக்கப்போறேன். ப்ளீஸ் சாப்பிட வாங்க கிருஷ்ணா’’

**********************************************************************
கிருஷ்ணா...

இப்படி ஒரு நள்ளிரவில் இச்செய்தி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அரைமணிக்கு முன் பாரதி என்னை தொலைபேசியில் எழுப்பி ‘கிருஷ்ணா செத்துட்டாராம்ப்பா’ என்று சொன்னபோது ஒருகணம் நினைவு தப்பி மீண்டேன். ‘போதும் கிருஷ்ணா... பத்திரிகை போதும்... நீங்களும் சீக்கிரம் வாங்க...’ என்று குமுதம் வாசலில் அப்போதைய அபிராமி தியேட்டரின் மரநிழலில் உங்களிடம் விடைபெற்று வந்தபிறகு... இப்போது பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதற்குப் பிறகு ஒரு நாள் ஒரு பொழுதுகூட உங்களை சந்திக்கவில்லை. ஆனால் குமுதத்தில் நாம் இணைந்து பணியாற்றிய அந்த நாட்கள்... ஒரு சந்தர்ப்பவாத சூழலுக்கு அப்பால் நம்முள் இழையோடிய நட்பு, முக்கியமாக ரேவதியும் நீங்களும் மீண்டும் இணைந்த அந்தக் காலம்... (பின்னர் உங்களுக்குள் நேர்ந்த பிரிவு நான் அறியாதது) குமுதம் மில்லெனியம் இதழும் குமுதம்.காமின் தோற்றமும் நம் இரவுகளை சூறையாடிய தருணம்... ஒவ்வொருநாள் காலையும் என்னை எதிர்கொள்ளும் முதல் விநாடியில் உங்கள் பார்வையில் தொற்றிக்கொள்ளும் பரவசம்... எத்தனை இறுக்கமான சூழலிலும் புன்னகை மாறாத உங்கள் முகம்...

இனி உங்களைப் பார்க்கவே முடியாதா கிருஷ்ணா...?
அந்த மில்லெனியம் ஆண்டுக்கு இனி ஒருமுறை நாம் திரும்பவே முடியாதா...?
பன்னிரெண்டு ஆண்டுகள் போனதே தெரியவில்லையே கிருஷ்ணா...?
அழுகிறேன் கிருஷ்ணா... ரொம்ப...!
 நண்பர் பாபு யோகேஷ்வரன் கிருஷ்ணாவின் நினைவாக.....



Monday, April 2, 2012

நயன் தாராவ லவ் பண்ணப்போறேன். ஹெல்ப் பண்ணுங்க பாஸ்






டந்த நாலைந்து ஆண்டுகளில், ஆசியாக்கண்டத்திலேயே அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் நயன் தாராவாகத்தான் இருக்கும். ஆனால் ஒருபோதும் மீடியா மீது எரிந்து விழுந்ததில்லை.எல்லாச் செய்திகளுக்கும் மவுனமே அவரது ஒரே பதிலாக இருந்து வந்தது.மவுனத்தில் விளயாடிய மனசாட்சிக்கு விடைகொடுத்துவிட்டு ஒரு வழியாக முதன்முறையாக பேச ஆரம்பித்திருக்கிறார் நயன். அந்தப் பேச்சில் தெரியும் பக்குவமும், தன்னை ஏமாற்றிய பிரபுதேவாவைப் பற்றி பழி ஏதும் சொல்லாமையும், ‘பேசாம அடுத்து நாமளே நயன் தாராவை லவ் பண்ணலாமா என்று பலரையும் யோசிக்க வைக்கும்.

எனது இணையதளத்துக்காக, ஒரு ஆங்கில தினசரியில் வந்த நயன் தாராவின் பேட்டியை ‘சுட்டு’க்கொண்டிருக்கும்போது, காதலைப் பற்றியும், தன்னை ஏமாற்றியவர் என்பதையும் மறந்து மன்னித்து பிரபுதேவாவைப் பற்றியும் நயன் தாரா பேசியிருந்ததைப் பார்த்ததும் எனக்கு அவர் மீது தீராக் காதல் ஊற்றெடுத்து விட்டது.

இப்போது நான் சிங்கிளாகத்தான் சிங்கிஅடிக்கிறேன்’ என்று அவர் ஒத்துக்கொண்டிருப்பது எனக்கு ’சிங்க’ எனர்ஜியைக்கொடுத்திருக்கிறது.

அதே சமயம் எங்கள் காதலுக்கு, இன்னும் கூட நயன் அழிக்க விரும்பாத பிரபுதேவாவின் ‘பச்சை’ சற்றே இடையூறாக இருக்கும்போல் தெரிகிறது.

அதை மெல்ல அழிப்பதற்கு என்னிடம் கைவசம் ஒரு ஐடியா இருக்கிறது. அதை வெளியே சொல்லி இப்போதைக்கு வில்லனாக விரும்பவில்லை.

சரி, கைவசம் ‘போட்டி’ இருந்தா அதைச்சாப்பிட்டுக்கிட்டே பேட்டியைப் படிங்க... ஆனா  தயவு பண்ணி என் கூட  போட்டிக்கு  வந்துடாதீங்க...

இதோ அந்த ‘லவ்’கீகமான பேட்டி:

கே: ஒரு கட்டத்தில் திருமணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த உங்களுக்கும் பிரபுதேவாவுக்குமான காதல் முறிந்தது எப்படி?
எப்படி என்று சொல்ல? அது அப்படித்தான் நிகழ்ந்தது. என்னுடைய காதலில் மட்டுமல்ல , இது பொதுவாக எல்லோருடைய காதலிலும் நிகழ்வதுதான்.காதல் வயப்பட்டிருக்கும்போது அன்றாடம் சில பிரச்சினைகளை சந்திக்கிறோம். அதில் சிலவற்றை சமாளிக்க முடிகிறது. சிலவற்றை முடிவதில்லை.அப்படி சமாளிக்க முடியாத பிரச்சினைகள் , நாளடைவில் பெரிதாகமுற்றி,  காதலை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகின்றன.அப்படித்
தான் எனக்கும் நடந்தது. அது என்ன விஷயம் என்பது முழுக்க முழுக்க எனது பெர்சனல்.அதை இந்த உலகுக்கு பகிர்ந்து கொள்ள நான் விரும்பவும் இல்லை,அவசியமும் இல்லை. நாளுக்கு நாள் மனிதர்கள் மாறுகிறார்கள், பிரச்சினைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.அதே  போல் எனது இன்றைய பிரச்சினை நான் பிரபு தேவாவுடன் இருந்த காதலிலில் இருந்து விடுபட்டு நிற்பது.அந்தக் காதல் ஒத்துவரவில்லை என்றால் அது அதனளவில் அவ்வளவுதான்.

ஆனால் இப்போதும்  ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். நான் அவரிடம் காதல் வயப்பட்டிருந்தபோது அதில்  நூறு சதவிகிதம் உறுதியாக உண்மையாக இருந்தேன். அது நமக்கு இல்லை என்று ஆகும்போது, அந்த கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு, அதைவிட்டு வெளியே வரத்தான் வேண்டும்.

கே: பிரபுதேவாவை காதலிக்கத்துவங்கும்போது, இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கொஞ்சமாவது எதிர்பார்த்தீர்களா?
நான் மட்டுமில்லை, யாருமே காதலிக்கத்துவங்கும்போது ஒரு பாஸிடிவான எண்ணத்தொடே காதலிக்கத்தொடங்குகிறோம் என்பது தானே நிதர்சனம்.அப்புறம் இப்படி துரதிர்ஷ்டவசமாக முடிவது விதியாலா அல்லது என்னவால் என்று எனக்கு சொல்லத்தோன்றவில்லை.


கே: உங்களுக்கும் அவருக்குமிடையிலான பிரச்சினைகளுக்கு மீடியாவோ அவரது மனைவியோ காரணமென்று கருதுகிறீர்களா?

நடந்த விஷயம் குறித்து நான் மீடியா மீதோ அவர் மனைவி மீதோ பழிபோட விரும்பவில்லை. அவரிடம் அவர் குடும்பம் தொடர்பான சில முடிவுகளை நான் எடுக்கச்சொன்னது உண்மைதான்.அது என்னவென்று இப்போது கூட நான் வெளியில் சொல்ல விரும்புவதில்லை.

மீடியாவைப்பொருத்தவரை நாங்கள் சினிமா நட்சத்திரம் என்பதற்காகவே, எழுதக்கூடாததை எல்லாம் எழுதி எங்களை தர்மசங்கடப்படுத்தினீர்கள். ஆனால் அந்தச்செய்திகள் எனக்கும் பிரபுவுக்குமான உறவைக் கெடுக்கவில்லை. மாறாக நாங்கள் இருவரும் சேர்ந்து வருத்தப்பட்டிருக்கிறோம்.

கே: உண்மையைச்சொல்லுங்கள் பிரபுதேவா நம் வாழ்க்கையில் இல்லை என்று தெரிந்த அந்த கணத்தில் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

காதல் வயப்பட்டு தோற்ற அனைவருக்கும் இருந்த அதே உணர்வுதான் எனக்கும் இருந்தது என்றே நினைக்கிறேன்.அந்த கணத்தில் நான் வேறோடு பிடுங்கி எறியப்பட்டதுபோல் உணர்ந்தேன்.அது கொஞ்ச நேரம் தான். பிறகு சுய நினைவுக்கு வந்த போது, சகஜமாகிவிட்டேன். பிரபுதேவா இல்லாவிட்டாலும் என் வாழ்க்கையை தொடர்ந்து நான் வாழத்தான் வேண்டும் என்ற நிதர்சனம் உறைக்க சகஜமாகிவிட்டேன்.

கே: இப்போது நீங்கள் தனித்து விடப்பட்ட உணர்விலிருக்கிறீர்களா?

மூன்றரை வருடங்கள் உடன் இருந்தவர் விட்டுப்பிரியும்போது அந்த உணர்வு இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன்.அந்த உணர்விலிருந்து முற்றிலும்  நான் வெளியே வர சில காலமாகலாம்.கண்டிப்பாக வருவேன்.

கே: இதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக்கொண்டீர்களா?

கொண்டேன். ஆனால் உங்களுக்கு அதைச்சொல்ல மாட்டேன். [ மவனே நீயும் லவ் பண்ணி சாவு ?]

கே:இதன் பிறகு காதல்’ என்பது பற்றிய உங்கள் மதிப்பீடு மாறிவிட்டதா?

அது ஏன் மாற வேண்டும். காதல் அதனளவில் எப்போதும் புனிதமானது.இப்போதும் சொல்கிறேன். காதலுக்காக நான் எதையும் செய்ய துணிவேன்.

கே: பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்திக்கொண்டீர்களே அதை அழித்துவிட்டீர்களா?

இல்லை. அதுபற்றி நான் இப்போது சிந்திக்கவேயில்லை. இதோ அந்தப் பச்சை இருந்த இடத்தில் அப்படியேதான் இருக்கிறது.

அவர் காட்டிய போது, பேசாம உங்க பேரை நயன் தாராளம்னு மாத்தீக்கங்க என்று சொல்லலாம் போலிருந்தது.

மேடம் ஒரு கேள்வி கேட்க மறந்து போச்சி, தொடர்ந்து நடிகர்களையே காதலிச்சி ஏமாறுறீங்களே , ஏன் எதாவது ஒரு நல்ல பத்திரிகையாளரை, அதுவும் அவருக்கு புள்ளகுட்டிங்க இருந்தாக்கூட நீங்க ஏன் லவ் பண்ணி லைஃப்ல செட்டிலாகக்கூடாது?

அடுத்த முறை நயன் தாராவப்பாக்குறப்போ இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டு என் வாழ்க்கையில யாராவது விளக்கு ஏத்தி வப்பீங்களா, பிரஸ்  பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் ?