Friday, March 30, 2012

விமரிசனம் ‘3’- ’பேசாம ஆஸ்பத்திரியில சேர்ந்துருவோம் மச்சான்’



‘கொலவெறிப் பாடல் ரிலீஸான சமயத்திலேயே இந்த ‘3’ படத்தை பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் போய் பார்க்கக் கூடாதென்று முடிவெடுத்துவிட்டேன்.

தியேட்டரில் நல்ல கூட்டத்துடன் கியூவில் நின்று படம் பார்க்கும் அனுபவமே தனி.

இன்று காலை ஒரு ‘பி’ செண்டர் தியேட்டரில் நண்பகல் 12 மணி காட்சிக்காக 11 மணிக்கே போய் நின்றேன்.

பெரிய கூட்டம் இல்லையென்றாலும் நேரம் ஆக ஆக ஹவுஸ்ஃபுல் ஆகும் அறிகுறி தெரிந்தது. எல்லாம் +2, கல்லூரி மாணவ,மாணவிகள்.

25 ரூபாய் டிக்கட்டை கவுண்டரிலேயே 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். அந்தக்கொள்ளை போதாதென்று டூ வீலர் பார்க்கிங் 20 ரூபாய்.

இப்படிப்பட்ட எரிச்சலான மனநிலையில் உள்ளே போவதால்தான் சுமாரான படங்களைக் கூட மக்கள் ‘மொக்கைப்படம்டா போயிடாத’ என்று மெஸேஜ் அனுப்புகிறார்கள்.

குப்புற விழுந்துகிடக்கும் தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்த விரும்பும் புண்ணியவான்கள் தங்கள் பணியை இந்த மாதிரியான தியேட்டர்களிலிருந்து தொடங்கவேண்டும் என்பது அடியேனின் ஆசை.
                                                                                                                    *****************
ருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், காதலர்கள் எங்கே போய் தாலி கட்டிக்கொள்ளலாம் ?

‘3’ பட டிஸ்கசனில், அறிமுக இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கேள்வி.

’ரிஜிஸ்தர் ஆபீஸ் மேடம்’

’இது ரொம்ப பழைய ஸ்டைல்பா...’

’குலதெய்வம் கோயில்ல மேடம்..’

அப்பிடி பல தெய்வத்தைப் படங்கள்ல பாத்தாச்சி. வேற ஏதாவது இண்ட்ரஸ்டிங்கா... கல்ச்சர் ஷாக் குடுக்குற மாதிரி ?

’அப்ப நாம குடிகாரங்க கூத்தடிக்கிற டிஸ்கொத்தே பார்ல தான் மேடம் வைக்கணும்’

சூப்பர் .. நாம நம்ம கதையில தனுஷுக்கும்,ஸ்ருதிக்கும் நடக்கிற கல்யாணத்தை பார்ல தான் வக்கிறோம். தமிழனுக்கு ‘கல்ச்சர் ஷாக்’ குடுக்கிறோம்.

இதற்கு முன்பு செல்வராகவன் வகையறாக்கள் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்டிலேயே தமிழர்கள் தவித்து தண்ணி குடித்தது போதாதென்று, இப்போது அந்த குடும்பத்து மருமகளான ஐஸ்வர்யா மேற்படி திருமண காட்சியை ஒரு வடம் சைஸில் தாலி செய்து, டிஸ்கொத்தே பாரில்தான்  அரங்கேற்றியிருக்கிறார்.மாப்பிள்ளையும் பொண்ணும் பீர் கிளாஸை கையில் வைத்துக்கொண்டு ‘சியர்ஸ்’ சொன்னபடியே தாலிகட்டிக்கொள்கிறார்கள்.

சரி,’3’ கதைக்கு வருவோம்.

+2 படிக்கும்போது, ஒரு மழைநாளில்,சைக்கிள் செயினை மாட்டி உதவப்போகும் வேளையில், முதல் பார்வையிலேயே ஸ்ருதி மீது காதல்கொள்கிறார் தனுஷ்.

சரி,நம்மள மாதிரி பெரிய இடத்துப்பிள்ளையாச்சே என்று பெரும் எதிர்ப்பு காட்டாமல் ஸ்ருதி சம்மதிக்க, கொஞ்ச காலம் காதலித்து, அப்புறம் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்.

வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போதே, ஸ்ருதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறார் தனுஷ்.

அப்புறம் க்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில், நம்மை டைரக்டர் ஐஸ்வர்யா டார்ச்சர் பண்ணுவது போல், பச்சைக்கலரில் நாலைந்து உருவங்கள் தொடர்ந்து வந்து டார்ச்சர் கொடுக்கவே, தாங்க முடியாத வெறிகொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து’கொல்’கிறார் தனுஷ்.

நடுவில் நடந்தது என்ன வெண் திரையில் பாருங்கள்..

படத்தின் முதல் காட்சியிலேயே, தனுஷின் சடலத்துக்கு எல்லோரும் மாலை போட்டுக்கொண்டு போவது போல் காட்டியதாலோ என்னவோ, படத்துக்கு பாடை கட்டும் ஒருவித ஃபீலிங் அங்கிருந்தே துவங்கி விடுகிறது.

ஆனால் அதற்காக ஐஸ்வர்யாவை ஒரேயடியாக ‘மொக்கை’ டைரக்டர் என்று சொல்லிவிடமுடியவில்லை. படத்தின் முதல் பாதியில் வரும் சில காதல் காட்சிகள், அக்காவின் காதலுக்கு எப்போதுமே கட்டை விரலை ரெடியாக தூக்கி காத்திருக்கும் குட்டி  ஊமைத்தங்கச்சி, அதிலும் அவள் அக்காவின் காதலுக்கு ஓ.கே.சொல்லச்சொல்லி, அப்பாவிடம்  முதல் முறையாக பேச ஆரம்பிக்கும் காட்சி என்று சில இடங்களில் தேர்ந்த டைரக்டருக்கான முத்திரைகள் பதித்திருக்கிறார்.

ஆனால் இடைவேளைக்கு அப்புறம் தனுஷுக்கு யாருக்கும் தெரியாத ’ மூனாவது’ ஒன்று இருக்கிறது என்று ஆரம்பித்து தனுஷையும், நம்மையும் ஒரே சமயத்தில் அந்த ஷொபியோபொபிஅயுமேனியா’ நோய்க்கு உட்படுத்தி இம்சிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

நடிப்பு என்று வரும்போது தனுஷ் ஒவ்வொரு படத்திலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து போவதற்கு,பல காட்சிகள்  சாட்சிகளாகின்றன.ஸ்ருதியையும் சும்மா சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர் பேசும் தமிழ் சதா மப்பில்  இருப்பது போலவே ஒரு மனப்பிராந்தி.

இவர்கள் இருவரையும் ஜோடிகளாகப் பார்க்கும்போது, அவர்கள் காட்டும் நெருக்கத்தில்  கெமிஷ்ட்ரி,ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாமே நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகிறது.

தனுஷின் நண்பர்களாக வரும் சிவகார்த்திகேயனும்,சுந்தரும்  சரக்குக்கு ஏத்த சைடிஷ்கள்.

முதல் பாதியில் மட்டும் வந்து தனுஷை தொடர்ந்து லந்து தரும் சிவகார்த்திகேயன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.தனுஷின் இம்சைக்காக டுடேரியல் காலேஜில் போய் அமர்ந்து கொண்டு,’’டேய் மச்சான் அவன் படிக்கிறாண்டா’ என்று அதிச்சி அடைவதும்,... தனுஷ்,’ஸ்ருதி நேத்து எனக்கு திடீர்னு முத்தம் குடுத்துட்டு ஓடிபோயிட்டாடா’ என்றவுடன் ‘எவன் கூட? என்று கவுண்டர் அடிப்பதும் சிவகார்த்திகேய ஸ்பெஷல்கள்.

தனுசுக்காக படம் முழுக்க விவஸ்தையற்ற பல அவஸ்தைகளை சந்திக்கும் சுந்தர், போதையிலும் சரி, சும்மா இருக்கும்போதும் சரி, தனுஷைப்பார்த்து சுமார் 100 முறையாவது ‘ மச்சான் பேசாம ஆஸ்பத்திரில சேர்ந்துரலாம் மச்சான்’ என்கிறார். ஆனால் அதை ஏன் தனுஷ் அலட்சியம் செய்கிறார் ? ஒருவேளை அப்படி தனுஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால், கதைக்கு எங்கே போவது என்று கன்ஃபியூஸ் ஆகிவிட்டாரோ டைரக்டர் .

 ‘வொய் திஸ் கொலவெறி ‘ தவிர்த்த படத்தின் மற்ற பாடல்களும், பின்னணி இசையும்,’சத்தியமா நான் ஒன் சாங் ஒண்டர் தானுங்கண்ணா’  என்று  அனிருத்தை பக்காவாக பறை சாற்றுகின்றன.

ஸ்கூல் காட்சிகளில் ஒளிப்பதிவும் கூட கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமா இருக்கட்டும் என்று வேண்டுமென்றே செய்தாரோ என்னவோ, இடைவேளைக்குப்பிறகு படு மெச்சூரிட்டியான பதிவு வேல்ராஜுவுடையது.

நாட்டில் சைக்கோக்கள் அதிகமாகிவிட்டார்கள் என்பதற்காக எதற்கெடுத்தாலும் எங்களைப்பற்றியே  படமெடுப்பதை நாங்கள் விரும்புவதில்லை தனுஷ், ஐஸ்வர்யா அவர்களே!

                                                                           ******************************

‘3’ பின்குறிப்புகள் ; உங்களையும் என்னையும் விட தனுஷ் ரொம்பவே புத்திசாலி, மனைவி ஐஸ்வர்யாவின்   இயக்கத்தில் தான்  நடிப்பது  இதுவே கடைசி என்று அவர் அறிவித்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

2.மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று ரகஸியமாகப்பார்ப்பதற்காக இன்று அனிருத், ஒரு தியேட்டருக்கு தனியாகப் போனாராம். கான்வெண்ட் படிக்கிற பசங்கள்லாம் தனியா நாட் அல்லவுட் என்று தியேட்டர் நிர்வாகம் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டதாம்.

1.ஆளாளுக்கு ரொம்ப கிண்டல் பண்றாங்க என்பதால்,’’இனி சுண்டல் விக்கிறவனாக்கூட நடிக்கத்தயார் ஆனா அடுத்து ஒரு பத்து வருஷத்துக்கு மெண்டலா மட்டும் நடிக்க யாரும் என்னைக்கூப்புடாதீங்க’’ என்று மத்தியான வெயிலில் மரினா பீச்சிலிருந்து கத்த வேண்டும் போல இருக்கிறதாம் தனுஷுக்கு..

Thursday, March 29, 2012

அஜீத் படத்தை இயக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’- அடம் பிடிக்கும் 60 வயது கட்டை பிரம்மச்சாரி


 

நேற்றே ஆபிஸ் சுவரில், இந்த சோதனையும் வேதனையும் மிகுந்த 2012 ம் வருடத்தில், இன்னும் எத்தனை நாட்கள் மிச்சமிருக்கிறது என்று கணக்குப்பண்ணி, கரிக்கட்டையால், கழிகிற ஒவ்வொரு நாளையும் x. போட ஆரம்பித்துவிட்டேன்.

புத்தாண்டு தினத்தன்று ‘கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்’ என்ற படம் பார்த்தபோது பிடித்த பீடை இன்னும் போகவில்லை சோடை.

மார்ச் முடியவில்லை, இதற்குள் சுமார் மூன்று டஜனுக்கும் மேல் உப்புமா படங்கள் பார்த்து முடித்தாகி விட்டது.

இப்படியே போனால், இந்த வருஷக்கடைசியில், அநேகமாக ‘காதல்’ க்ளைமேக்ஸ் பரத் மாதிரி, திண்டுக்கல் ஏரியாவில்,நைட் எஃபெக்டில் ’ ஞ்நனாணநமனெ’ என்று உளறிக்கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள்  இப்போதே எனக்கு லேசாக தெரிய ஆரம்பித்துவிட்டது. அந்த சமயம்,  என் ப்ளாக் படிக்கிறவர்களில் ,சந்தியா மாதிரி யாராவது வந்து வீட்டுக்கு அழைத்துப்போய் கஞ்சி ஊத்துவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த சனியன்களை தொடர்ந்து பார்த்துத் தொலைக்கிறேன்.

நேற்று 4ஃப்ரேம்ஸ் தியேட்டரில்,’மீராவுடன் கிருஷ்ணா’ பார்த்தேன். இந்த கிருஷ்ணா என்பது டைரக்டரின் ஒரிஜினல் பெயரும் கூட. கதை, திரைக்கதை, வஜனம் எழுதி இயக்கி, ஹீரோவாக நடித்து பாட்டும் எழுதியிருக்கிறார். நான் யார் கிட்டயும் அசிஸ்டெண்டா வேலை பாத்ததில்ல பாஸ் என்று துவங்கி, படம் துவங்குமுன்பே எக்கச்சக்கமாக, பக்கம்பக்கமாகப் பேசுகிறார்.

தனக்கு தெரிந்த அண்ணன் ஒருவரின் பொண்டாட்டி அவரை ஏமாற்றிவிட்டு ஓடியதை சின்ன வயதில்,பார்க்க நேரும் அவர், இளைஞனானவுடன்,அவர் பொண்டாட்டி மட்டுமின்றி, நண்பர்களின் பொண்டாட்டி உட்பட எல்லாப்பெண்களையும் சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் கதை.

 அதை எப்படியெல்லாம் எடுக்கக்கூடாதோ அப்படியெல்லாம் எடுத்து நம்மை செய்கிறார் வதை.

மனைவி கர்ப்பமானவுடன்,இந்தக்குழந்தைக்கு உண்மையான அப்பன் யாரு? என்று கேட்டு ஒரு கையில் காண்டம் பாக்கெட், இன்னொரு கையில் அவர் சந்தேகப்படும் நபரின் போன்கால் மனைவிக்கு, மூன்றாவதாக ஒரு குழந்தை படத்துக்கு மாறி மாறி ஜூம் போட்டு இடைவேளை விட்டார்.

இந்தப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டான விசயமே அண்ணன் கிருஷ்ணாவின் அடாவடியான நடிப்பு. அதை நடிப்பு என்று சொல்வதை விட வெறிகொண்ட ஒரு மனிதனின் கடிப்பு என்றே சொல்லிவிடலாம்.
பத்து டி.ராஜேந்தர், இருபது பவர்ஸ்டார், இணைந்து வந்தாலும் கிருஷ்ணாவின் நடிப்புக்கு முன்னால் நிற்க முடியாது.

அதிலும் கண்ணாடி, முன்னாடி நின்று சுமார் ஒரு நூறு தடவையாவது கிருஷ்ணா நடிப்புக்கதகளி ஆடுவது காணக்கண் கோடி வேண்டும்.

இந்தப்படத்திலேயே நான் மிகவும் அதிகம் ரசித்த காட்சி,க்ளைமேக்ஸில், மனைவி மீராவை கிருஷ்ணா ‘அபார்ஷன்’ பண்ணச்சொல்லி கட்டாயப்படுத்தும்போது,அவர் வலுவாக கிருஷ்ணாவை நோக்கி  விட்ட மூன்று அறைகள்...

1. இனிமே படம் டைரக்ட் பண்ணுவியா?

2. இனிமே ஹீரோவா நடிச்சி சினிமாவை நாற அடிப்பியா?

3. கூட நடிக்க என்னைக் கூப்பிடுவியா?

என்று கேட்டு அறைந்த மாதிரியே இருந்தது.

ஒரு பயங்கரமான பின்குறிப்பு :
படம் ரிலீஸாவதற்கு முந்தின தினம் ‘குமுதம்’ இதழில் டைரக்டர் கிருஷ்ணாவின் பேட்டி ஒன்று வந்திருக்கிறது.அதில் அதீத நம்பிக்கையுடன், அண்ணன் தன் மீரா யார்  என்று பேசும்போது,அஜீத்தை வைத்து படம் இயக்காமல் தான் திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை’ என்று பேட்டி அளித்திருக்கிறார்.

‘குமுதம்’ காரர்கள் எவ்வளவு குசும்பர்கள் என்று இந்த கிருஷ்ணா போன்றவர்களுக்கு தெரியாது.

பேட்டி எடுத்த அதே நிருபர்,இன்னும் 25 வருடங்கள் கழித்து வரவிருக்கிற, 27- 4-2037 தேதியிட்ட இதழுக்கு நேற்றே ஒரு ஒரு பக்க மேட்டர் எழுதிக்கொடுத்துவிட்டாராம்.

அந்தச் செய்தி இப்படி தொடங்கியதாக தகவல்

....கிருஷ்ணாவுக்கு வயது இப்போது 60. இன்னும் திருமணமாகாத கன்னிப்பையன். இவர் 2012 மார்ச் மாதத்தில் ‘மீராவுடன் கிருஷ்ணா’ என்ற படத்தை இயக்கி நடித்து வெளியிட்டிருந்தார். அப்போது நமது ‘குமுதம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது போல், அஜீத்தின் கால்ஷீட்டுக்காக ....

Tuesday, March 27, 2012

காந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிசனம்’ முதல்வர் மகா ஏமாத்மா’

    ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள்
இருக்கும்காமக்குரோதஉணர்ச்சிகளை வென்றுவிடுவது அதிகக்கஷ்டமாக எனக்குத்தோன்றுகிறது
                                       - தனது சத்திய சோதனையில் ’வெறும்’ காந்தி

இந்த அருமையான் ஸ்டில் நடிகர் கபீர்பேடியின் ட்விட்டரில் சுட்டது

நாங்கல்லாம் துப்பாக்கிய தூக்க ஆரம்பிச்சா’-காந்தி

மீதிப்பரிச்சையை நான் பிட் அடிச்சாவது எழுதாம மேலோகம் போக மாட்டேன்

  சற்றுமுன்னர்தான் ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில்,’முதல்வர்  மகாத்மா’ படம் பார்த்துவிட்டு வந்தேன். ஏற்கனவே ‘காமராஜ்’ படம்  எடுத்து,பெருந்தலைவர்  காமராஜர் மேலிருந்த மதிப்பை கணிசமான அளவில் காலி  செய்திருந்த அதே பாலகிருஷ்ணன் தான், இப்ப காந்தியையும் கையில் எடுத்து,  எழுதி, இயக்கி தயாரித்து வியாபாரித்தும் இருக்கிறார்.

ஸ்கூல் பசங்களின் நாடகம் போல என்று இப்போதெல்லாம் எழுத பயமாக இருக்கிறது.ஏனென்றால், ஸ்கூல் பசங்க பல விதங்களிலும் நம்ம கோடம்பாக்க ஆசாமிகளை விட ஷார்ப்பாகவே இருக்கிறார்கள். ஸ்கூல், காலேஜ் நாடகங்கள், இங்கே வருஷத்துக்கு ரிலீஸாகும் 90 சதவீத பிணாத்தல் படங்களை விட நன்றாகவே இருக்கின்றன.

நாம பாலகிருஷ்ணனின் ‘முதல்வர் மகாத்மா’வுக்கு வருவோம்.

கோட் ஷேவால் சுடப்பட்டு மேலோகம் போய்க்கொண்டிருக்கும் காந்தி, நடுவழியிலேயே முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார். நான் இந்தியாவுக்காக பாதிப்பரிட்சை தான் எழுதியிருக்கேன்.இன்னும் கொஞ்சம் மக்களை டார்ச்சர் பண்ண வேண்டியிருக்கு, அதனால பூலோகத்துக்கு உடனே ஒரு ‘ரிடர்ன்’ டிக்கட் போடுங்க’ என்று எமனிடம் அடம்பிடித்து, வழக்கம் போல் அவனிடமும் உண்ணாவிரத டார்ச்சரைக் கையாண்டு பழையபடி பூமிக்கே வந்துவிடுகிறார்.

அப்படி வந்தவர், கரம் சந்த் காந்தி என்பதை மறைத்து, தனது பெயரில் மோகன் தாஸ் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, பழையபடி மக்களுக்காக போராட ஆரம்பிக்கிறார்.

இறுதியில், வெள்ளைக்காரர்களைவிட, இப்போதிருக்கிற அரசியல் கொள்ளைக்காரர்கள் அதி பயங்கரமானவர்கள் என்பதைப்புரிந்து கொண்டு ‘ரிடர்ன் டிக்கட்டை கேன்சல் செய்து கொண்டு அவசர அவசரமாக மேலோகம் பறக்கிறார்.

என்ன கதையில் இன்னும் முதல்வர் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா?

மேற்படி கதையை, அவரிடம் பயின்று ஒரு மாநிலத்தின் நல்ல முதல்வராக இருக்கும் அனுபம் கேர் ,அனுபவம் கேராக மாறி சொல்லி வருகிறார்.மகாத்மா காந்தியிடம் பயின்று முதல்வரானதால் ‘முதல்வர் மகாத்மா’.

படம் முடிந்து வெளியே வந்தவுடன், வாசலில் வழிமறித்து நின்று கொண்டிருந்த இயக்குனர் பாலகிருஷ்ணனிடம்,’’ பொதுவா எடிட்டருக்கு அனுப்பி, படத்தை எடிட் பண்ணினதுக்கு அப்புறம் தான் பிரஸ் ஷோ வே போடுவாங்க. நீங்க ஷூட்டிங் முடிஞ்சி டெவலப் பண்ணுன உடனே அப்பிடியே எங்களுக்கு போட்டு காட்டீட்டிங்களே சார்? என்று கேட்க தொண்டை வரை வார்த்தைகள் வந்துவிட்டன.

இன்னைக்கி காலைல ஷேவ் பண்றப்பவே ரத்தக்காயம் பாத்தாச்சி, மறுபடியும் எதுக்கு ரிஸ்க் என்று அதை மென்று தின்றுவிட்டேன்.

எடிட்டிங் மட்டுமின்றி படத்தின் அத்தனை அம்சங்களுமே, தொழில் நுட்பமா அப்பிடின்னா என்னாங்க என்று நம்மை பகடி பண்ணி கபடி ஆடுகின்றன.

இந்த விநோத கற்பனையின் உச்சக்கட்டமாக , விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனும், காந்தியும் ஒரு கடற்கரையில் அவசர அவசரமாக சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபாகரனுக்கு காந்தி அஹிம்சையின் அவசியத்தைப்பற்றி வண்டி வண்டியாக அட்வைஸ்களை அள்ளி வழங்குகிறார்.

யாராவது ரொம்ப அறுக்கும்போது, நமக்கு நாமே மிஸ்டு கால் கொடுத்து  எதிரில் இல்லாத ஒரு ஆளிடம், ‘ஹலோ ஸாரிம்மா லேட்டாயிடுச்சி.அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன்’ என்று சொல்லாமல்கொள்ளாமல் எஸ்கேப் ஆவோமே, அதே போலவே ஒயர்லெஸ்ஸில் ஒரு கால் வர காந்தியிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடுகிறார் பிரபாகரன்.

எல்லோருக்குமே, சில பிடித்த தலைவர்கள் இருப்பது மாதிரி, சில பிடிக்காத தலைவர்களும் இருப்பார்கள்.

அப்படி உங்களுக்கு  மட்டும் பிடிக்காத ஒரு  தலைவரை, எல்லாருக்கும் பிடிக்காத தலைவர் ஆக்க விரும்பினால், கொஞ்சமும் யோசிக்காமல் உங்க காடுகரையை வித்தாவது, பாலகிருஷ்ணர டைரக்டரா வச்சி படம் எடுங்க.அப்ப பாப்பீங்க கைமேல் பலனை.

Monday, March 26, 2012

’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய ’500 முத்தங்கள்’


இன்னொரு 500 வாங்கியிருக்க வேண்டிய அந்தணன்

கி.க.சா’ வில் வடக்கம்பட்டி ராமசாமி ,பாவணாவுடன்

கடந்த வெள்ளிக்கிழமை நான் வழக்கத்தைவிட சற்று அதிக டென்சனாகவே இருந்தேன். என்னை அறியாமலே என் அலுவலகத்தில் நாலைந்துமுறை குறுக்கும்நெடுக்குமாக ,புட்டி போட்ட பூனை மாதிரி நடக்கவும் செய்திருந்தேன்.

மதிய வேளையில், ட்விட்டரில் ஒரு நண்பர் ’ஆயிரம் சத்தங்களுடன் வான்கோழியாமே? என்று ஒரு கமெண்ட் போட்டவுடன் ஒரு அல்ப சந்தோஷத்துடன் டென்சனும் குறைந்தது.

அந்த டென்சனுக்கும், அல்ப சந்தோஷத்துக்கும் காரணம் அறிய நாம் ஒரு ஆறு வருடம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

அந்த பின்னோக்கிய பயணத்துக்கான போக்குவரத்துச் செலவு, அதன் போது ஏற்படும் மற்ற உதிரிச்செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்பதால் என்னோடு  பயணம் செய்வதில் உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்காது என்று நினைக்கிறேன்.

2005-ம் வருட இறுதியில் நம்ம ‘டமில் சினிமா’ புகழ் ஆர்.எஸ். அந்தணன் என்னை ஒரு நாள் அழைத்து,’ நாம ஒரு படம் எடுக்கலாமா?’ என்றார்.

 என்கிட்ட நாலணாவும், உங்க கிட்ட எட்டணாவும் தான் இருக்கு எப்படிங்க படம் எடுக்கிறது?  என்று நான் அந்தணனிடம் கேட்ட இரண்டாவது மாதத்தில்,எஸ்.எஸ். ஸ்டான்லி டைரக்‌ஷனில், ஸ்ரீகாந்த்-பாவணா காம்பினேஷனில் ‘கிழக்குக்கடற்கரைச் சாலை’ என்ற பாடாவதி படத்தை நாங்கஆரம்பித்த  கதையெல்லாம் பின்னால் பேசிக்கொள்ளலாம்.[ அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்.இந்த ஆள் இந்த மாதிரி நிறைய கதைகளை பெண்டிங் வச்சிட்டுப்போறார்’ ]

‘கி.க.சாலை’ படம் ஒரு ஷெட்யூல் மட்டுமே நடந்து முடிந்திருந்த வேளையில்,படத்தின் ‘தயாரிப்பாளர் நம்ம அந்தணனுக்கு வேண்டியவரான வேலு, தனக்கு வேண்டியவரான சண்முகராஜா என்பவரை அழைத்து வந்திருந்தார்.

இப்ப ஆயிரம் சத்தங்களுடன் ஒரு வான்கோழியை இறக்கியிருக்காரே  அந்த சண்முகராஜா தான் அப்ப வந்த சண்முகராஜா. அவரை அறிமுகப்படுத்தி வச்ச வேலு,’’சார் நம்ம கம்பெனிக்கு அடுத்த டைரக்டர் இவர்தான். ‘ல்தாக’ன்னு [அதாவது காதல்-ஐ திருப்பிப்போட்டுருக்காராம்] ஒரு கதை வச்சிருக்கார். அதைக்கேட்டுட்டு உடனே ஆரம்பிச்சிரலாம்’’

மச்சான் நீ கேளு’ங்கிற மாதிரி  வேலு அதே தகவலை அந்தணன் கிட்டயும் சொல்லிட்டு தன் வேலையைப்பாக்கக்கிளம்பிட்டார்.

அவர் எவ்வளவோ சொல்லியும் கேளாம, ஸ்டான்லியை தலையில கட்டிவிட்டதனால, ஒரு முழு நேர நொந்தணனா மாறியிருந்த அந்தணன், ‘’ஏங்க சண்முகராஜா கதையையும் நீங்களே கேட்டு சூயிசைடா, மர்டரா எந்த முடிவா இருந்தாலும் நீங்களே எடுத்துக்கங்கன்னுட்டுப்போயிட்டார்.

இப்ப ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியா ரிலீஸாயிருக்க, ‘ல்தாக’ கதைய  சண்முகராஜா கிட்ட மறுநாளே கேட்டேன்.

வாளமீன் இருக்குன்றான்,வஞ்சிரமீன் இருக்குன்றான்..நெய்மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம் மாதிரி, அவர் சொன்ன கதையில் காதலுக்கான கெமிஸ்ட்ரி இருந்தது, பயாலஜி இருந்தது ஜுவாலஜி இருந்தது, ஜவ்வாலஜி இருந்தது,அவ்வளவு ஏன்  நடுவில் சாப்பிட ஒரு பஜ்ஜி கூட வந்தது, ஆனால் கடைசிவரை கதை மட்டும் வரவே இல்லை.

ஆனால் அதை என்னால் சண்முகராஜாவிடம் சொல்லமுடியவில்லை. உதவி இயக்குனராக இருக்கும்போது தன்னம்பிக்கை தேவைதான். ஆனால் சிலருக்கு அது ரொம்ப ஓவராக இருக்கிறது.

’நான் படம் ஷூட்டிங் கிளம்புறது தெரிஞ்சா அன்னக்கே சேரன் பொட்டியக்கட்டிட்டு, ஊருக்குக் கிளம்பிருவாருன்னு நினைக்கிறேன் ’  என்கிற ரகம் சண்முக ராஜா என்பதை, அவரை சந்தித்த பத்தாவது நிமிடத்தில் புரிந்துகொண்டேன்.

அதை வேலுவுக்கு நாசூக்காக தெரிவித்தபோது,’சார் அதெல்லாம் எனக்குத்தெரியாது. அந்தக்கதையில உங்களுக்குப் புடிக்காத ஏரியாவுல கரெக்‌ஷன் சொல்லி ’பட்டி பாத்து டிங்கரிங் பண்ணியாவது அவருக்கு நாம ஒரு படம் குடுக்கணும் சார் என்கிறார்.

சண்முகராஜாவோ கரெக்‌ஷன் சொல்ல பக்கத்துல வந்தா கடிச்சி வச்சிருவேன்’ என்பது மாதிரியே பார்க்கிறார்.

அந்தணனோ, ‘மவனே நீ என்ன ஸ்டான்லிகிட்ட மாட்டிவிட்டல்ல, உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என்று மைண்ட் வாய்ஸில் சவுண்ட் விடுகிறார்.

‘கிழக்குக்கடற்கரைச் சாலையே நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கும்போது, இன்னொரு வடக்கம்பட்டி ராமசாமி வந்து சேர்ந்திருப்பதை நினைத்து,அவ்வ்வ்வ் என்று ஒரு வாரம் அழுது திரிந்தேன்.

சரி இவருக்கு படம் இல்லையென்று சொன்னால்தானே பிரச்சனை.கி.க.சா’ முடிஞ்ச உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று நானும் அந்தணனும் பேசி வைத்து, சண்முகராஜா படத்தை சவ்வாக இழுக்க ஆரம்பித்தோம்.

ஒரு ரெண்டு வாரம் போயிருக்கும், ‘சார் உங்கள உடனே பாக்கனும்’ வேலுவிடமிருந்து ஒரு பதட்டமான குரலில் போன்.

ஆபீஸுக்கு வாங்க வேலு’ என்றபடி போனால்,சண்முகராஜா இல்லாமல் வேலு மட்டும் தனியே வந்திருந்தார். ‘சார் சண்முகராஜா இப்ப என் வீட்லதான் இருக்கார். உங்களப்பாத்தா, அவர் படத்த எடுப்பீங்கங்கிற நம்பிக்கையே வர மாட்டேங்குதாம்.அதனால ...

அதனால..?

’’இன்னும் ஒரு பத்து நாள்ல விளம்பரம் குடுத்துட்டு ஷூட்டிங் கிளம்பலைன்னா உங்க பேரையும் அந்தணன் பேரையும் எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்குவாராம்.’’

எனக்கு அதைக்கேட்டவுடன் , எங்க நல்லமநாயக்கன்பட்டியில் சாராயத்துக்காக தினமும் எங்க ஊர் ஜனங்களோடு ‘செத்துச்செத்து விளையாண்ட ஒரு மாமாதான் திடீரென ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு சரக்கு அடிக்க காசு இல்லாத போது, ஏதாவது ஒரு கரண்ட் கம்பத்துக்கு கீழே நின்றுகொண்டு,’ இப்ப எவனாவது நான் சாராயம் குடிக்க காசு தரலைன்னா, நான் ஊர்க்காரங்க பேரெல்லாம் எழுதி வச்சிட்டு, கம்பத்துமேல ஏறி கரண்ட புடிச்சிருவேன்’ என்று மிரட்டியே பல பேரல்கள் குடித்து வந்தார்.

எங்க மாமா மிரட்டிக்கேட்டது பட்டைக்காக, இந்த சண்முகராஜா அண்ணன் மிரட்டுறது படத்துக்காக. ஆக ரெண்டுமே ‘போதை’ சமாச்சாரம்தானே?

அதிலும் வேலு, சண்முகராஜாவின் தற்கொலை முடிவை, ஏதோ சரவணபவன்ல சாம்பார்ச்சாதம் சாப்பிடப்போறாராம்... மாதிரியே  சொல்ல, நானும் பதிலுக்கு,’’ வேலு இதுவரைக்கும் நான் யார் தற்கொலை பண்றதையும் நேர்ல பாத்ததில்ல, அதனால அத கொஞ்சம் லைவ்வா பாக்க ஏற்பாடு பண்ணுனா நல்லாருக்கும்’’என்றேன்.

அவ்வளவு ஒரு கொடூரமான பதிலை வேலு என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

அன்று தற்கொலை மிரட்டல் விடுத்தபோது நான் செவி மடுத்திருந்தால், தற்போது திரைக்கு வந்து பலபேரை தற்கொலை முயற்சிக்கு தூண்டிக்கொண்டிருக்கிறாளே தேன்மொழி, அவளது ஆயிரம் முத்தங்களை தலா ஆளுக்கு ஐநூறாக நானும் அந்தணனும் வாங்கி, கன்னம் வீங்க வேண்டியதிருந்திருக்கும்.

ஒரு மண் குறிப்பு: திராபையான படம் என்றால் என்ன மூன்றே வார்த்தைகளில் விளக்குக ? என்று கேட்டால் எங்கள் பதில் ‘கிழக்கு கடற்கரை சாலை’ என்றே வரும்.
அதையும் மீறி இந்தக் கட்டுரை படித்த தோஷத்துக்காக இணையத்தில் நீங்கள்’கி.க.ச. பார்க்க முயன்றால் அதனால் ஏற்படும் உடல் உபாதை, மன உபதை போன்றவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது.
வேண்டுமானால் கீழே உள்ள லிங்கில் க்ளிக் பண்ணி  40 வது ஸெகண்டில் வரும் முத்துராமலிங்கன்’ என்ற என்  பெயரை மட்டும் பார்த்துவிட்டு முன்னப்பின்ன பாத்துராம, உங்கள மாதிரியே மத்தவங்களும் பாத்துராம ‘பத்திரமா பாத்துக்கங்க.

Y

Friday, March 23, 2012

பழையபடி படிச்சிட்டு...உங்க கதைய முடிச்சிட்டுப் போங்க சார்...


         முன்குறிப்பு: நான் இதை எழுத ஆரம்பிக்கும்போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாகவே உள்ளேன். தயவு என்னை எதாவது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்.

கடந்த செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களும் தொடர்ச்சியாக, முறையே ‘காதல் பிசாசே’, நந்தா நந்திதா’ ‘காதலிச்சிப்பார்’ ஆகிய படங்களை, இடைவேளையோடு கூட ஓடிவிடாமல் முழுதும் பார்த்தேன்.[ இதை டைப் அடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘அண்ணா, இன்னைக்கு லேப் தியேட்டர்ல, கரண் நடிச்ச ‘கந்தா’ இருக்கு. வந்தா நல்லாருக்கும்னு லந்தா ஒரு மெஸேஜ் வருது]

அந்தப்படங்களுக்கு தனித்தனியாக விமர்சனம் எழுதினால், ஏதாவது கூலிப்படையுடன் கூட்டணி வைத்து என்னைக் குமுறி விடுவீர்கள் என்பதால் மொத்தத்தையும் கலந்துகட்டி தரலாமே என்று முடிவு செய்தேன்.

ட்ரீம் ஆர்ட் கொலையேஷன்ஸ் சார்பாக வதை, திரைவதை,வஜனம் எழுதி, இயக்கி தயாரித்து, கதாநாயகனாக நடித்து நம் கழுத்தை அறுப்பவர் இலங்கைத்தமிழரான அரவிந்த ரத்தின சிவலிங்கம்.

லட்சியவாதியான மாணவியை, இன்னொரு லட்சியவாதியான மாணவன் காதலிக்கிறான். பிறகு காதலினால் லட்சியம் அலட்சியமாகிறதே என்று மும்பை போகிறான்.

அங்கே நீங்க,  நானு,  மற்றும் அவனே எதிர்பாராமல் மும்பையின் நம்பர் ஒன் டாண் ஆகிறான்.

அவனைப்பிடிக்க முடியாமல் மும்பைப்போலீஸ் முக்க ,அவர்கள் சென்னை போலீஸின் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.சென்னையில் ஐ.பி.எஸ். முடித்திருக்கும் அவன் காதலியே துப்பாக்கியோடு காதலனைத் துரத்துகிறாள்.

மொத்தப்படமுமே, மவுண்ட்ரோட்டில் மொட்டை வெயிலில் நின்று பிச்சை எடுக்கும் உணர்வைத்தருவதால், படத்துக்கு ’காதல் பிசாசு’ என்று வைத்ததற்குப்பதில் பேசாமல்   ‘காதல் பிச்சைக்காசு’ என்று டைட்டில் வைத்திருக்கலாமோ என்ற உணர்வையும் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் ஹீரோயினாக ‘கருத்தம்மா’ ராஜ்யஸ்ரீயின் தங்கை மிதுனா நடித்திருக்கிறார். இதைத்தவிர வேற எதுனா’ லும் பொறுத்துக்கலாம் என்கிற அளவில் நடிக்கிறார் மிதுனா.

டுத்த ‘அருவாமனை, ‘நந்தா நந்திதா’ . பேப்பர் விளம்பரங்களில் பேரைப்பார்க்கும்போதே,’ வந்தியா என்னப்பாத்து நொந்தியா?’ என்று மனதில் தோன்றிக்கொண்டே இருந்த படம் இது.

 ஆனால் அதெல்லாம் ரொம்பக்கம்மி என்று நினைக்கும் அளவுக்கு என்னைக்கும்மி எடுத்துவிட்டார்கள்.

முக்கியமாக இந்தப்படத்தின் ஹீரோ ஹேமச்சந்திரனைப்பற்றி கூறியாக வேண்டும்.

இவருதான் மும்பையில நம்பர் ஒன் டாண்ண்
நான் எடுத்து போட்டிருக்கும் ஸ்டில்லை தொடர்ந்து பத்து நிமிஷம் பார்க்கச்சொன்னாலே உதைக்க வருவீர்கள். இவரை நான் இரண்டேகால் மணிநேரம் பார்த்தேன்.

 லாங் ஷாட்டில் பார்த்தேன். மிட் ஷாட்டில் பார்த்தேன். க்ளோஸ்-அப்பில் பார்த்தேன்.ஏன் டைட் க்ளோஸ்-அப்பில் கூட பார்த்தேன்.

அவர் ஆடுவதைப்பார்த்தேன். பாவத்தோடு பாடுவதைப்பார்த்தேன். அவ்வளவு ஏன் இருந்த ஒரு சிலரும் தியேட்டரை விட்டு ஓடுவதையும் கூட பார்த்தேன்.

ஆனால் நான் ஓடினேனா இல்லை அண்ணனை அடுத்தடுத்த காட்சிகளில் தேடினேன்.

இந்தப்படத்தைப்பார்த்து, நான் அடித்திருக்க வேண்டிய சரக்கை எனக்குத்தராமல் படம் முழுக்க அவரே அடிக்கிறார். சரக்கு அடிக்காத கேப்களில், பெரியபெரிய சைஸ்களில் இருக்கும் ஸ்டண்ட் யூனியன் அண்ணன்களை சர்வசாதாரணமாகப் பந்தாடுகிறார். இவர்களை அடித்தது போக மீதி நேரங்களில் அக்கா மேக்னா ராஜை லவ்வுகிறார்.

குரூப்  டான்ஸர்களெல்லாம் முகத்தைக்காட்டாமல் தலைவிரித்து ஆடும் ஒரு பாட்டு தமிழ்சினிமா இதுவரை கண்டறியாதது. தமிழனுக்கு நேரம் நன்றாகஇருக்கும் பட்சம் இனி ஒரு முறை  கூட காணக்கூடாதது.

வரவர நாசரை வில்லனாகப்பார்த்தால் அடக்கமாட்டாமல் சிரிப்பு தான் வருகிறது. பேசாமல் வடிவேலு இடத்தை நிரப்ப அவர் ட்ரை பண்ணலாம்.

டுத்து பார்த்து, வெந்து,நொந்து,அந்து, நான் சந்துசந்தாய் அலைந்தபடம், ‘காதலிச்சிப்பார்’.

டிசைன்களை பார்க்கும்போதே,’ முடிஞ்சா  வந்து பார்’ என்பதுபோல்தான் இருந்தது.

64 லட்சணங்களும் பொருந்தியவன் அரவான்’ என்று தந்ததுபோல், கூட ஒரு பத்து பட்சணங்கள் சேர்த்து, 74 லட்சணங்கள் பொருந்தியவர் நம்ம ‘காதலிச்சிப்பார்’ ஹீரோ  விகாஸ் என்றே விளம்பரம் தந்திருக்கலாம் என்பது என் ஏழ்மையான யோசனை. பிகாஸ் படத்தோட தயாரிப்பாளரே அண்ணன் விகாஸோட அப்பாருதான்.

இந்தப்படத்தோட கதைய ஒரு ரெண்டு வரியாவது சொல்லலைன்னா... எனக்கு பைத்தியமே புடிச்சிடும். சொன்னா...

அண்ணன் விகாஸ் சங்கீதமே எல்லாமுன்னு ஒரு இங்கிதத்தோட வாழுறவரு. அண்ணி மேக்னா நாயர் அவரோட டியூன்ல மயங்க, அண்ணனோ அது மியூசிக் மேல வந்த மயக்கம்னு எடுத்துக்காம, தன் மேல வந்த லவ்வுன்னு நினைச்சி அண்ணியை கவ்வ பாக்குறாரு. அதைத்தெரிஞ்சிக்கிட்ட அண்ணி பதறி அண்ணனை உதறி விடுறாங்க....

சார்..சார்.. கம்ப்யூட்டரை அவசரமா ஷட் டவுண் பண்ணிட்டு எங்க ஓடுறீங்க..?



அண்ணனை நீங்க இன்னைக்குப் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்




பழையபடி முதல்ல இருந்து  படிச்சிட்டு... உங்க கதைய முடிச்சிட்டுப் போங்க சார்







Thursday, March 22, 2012

’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்கமே தான்’


ஓராயிரம் உயிர்களை
பதற வைத்தபடியே

 காலந்தோறும்
கடந்து செல்லும்
ஆம்புலன்ஸ் ...
ஒரு உயிரைச் சுமந்தபடி...

[இன்று காலை]

னி பதிவு எழுதும்போது,அதைப்பாதியில் முடித்து தொடரும் போடக்கூடாது என்று உறுதியான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.

காரணம் 1. மிகச்சிலபேர், அது ஒரு பில்ட்-அப் என்று தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீளமாக ஆகிவிட்டதே என்பதற்காக மட்டுமே தொடரும் போட்டேன்.

 கா 2.விஷயம் கொஞ்சம் சீரியசானதாக இருந்தால், அதை எழுதி முடிக்கும் வரை நம்மை நாமே ஒரு மனநெருக்கடிக்கு ஆளாக்கிக்கொள்கிறோம்.
பாதியில் நிறுத்தப்பட்ட ‘என் பெயர் முத்துராமலிங்கம்’ அப்படித்தான் ஆகிப்போனது. இதோ தொடருகிறேன்.

‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார் அந்த கான்ஸ்டபிள்.

உள்ளே போனவர் டாக்டரிடம் ஒரு நீண்ட விவாதம் நடத்தி, ‘எனக்கும் இந்த புள்ள பொழைக்கிறதுக்கு வாய்ப்பில்லங்கிறது தெரியுது. ஆனா  இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிரும் ,பத்து நிமிஷத்துல போயிரும்னு வச்சி அடக்கம் பண்றதுக்கு இது வாழ்ந்து முடிச்ச உசுரா?.முடிஞ்ச வரைக்கும் பாருங்க.உயிரோட தூக்கிட்டுப்போக வேண்டாம்’ என்று சொல்ல, கான்ஸ்டபிளை ஒருமாதிரியாகப் பார்த்த லைஸாண்டர், ‘நர்ஸ் யாரையாவது உடனே போய் ஒரு குலை வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லு’ என்று அவசரப்படுத்தியிருக்கிறார்.

நான் எட்டாம் வகுப்பு படித்த சமயத்தில்,தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தேன்.என் அண்ணன்மார்களின் பலசரக்குக் கடையை, படிப்பு நேரம் போக கவனிக்க வேண்டி, நல்லமநாயக்கன்பட்டியிலிருந்து விருதுநகருக்கு ஷிப்ட் பண்ணப்பட்டிருந்தேன். எல்லோரும், கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்கப்போய்க்கொண்டிருக்க, நான் மட்டும் விருதுநகரிலிருந்து சத்திரரெட்டியபட்டி என்னும் கிராமத்துக்கு படிக்கபோய்க்கொண்டிருந்தேன்.பெ
ரிய பையனான பிறகு வயித்துவலியால் அதிகம் அவதிப்பட்டபோதெல்லாம் லைஸாண்டரை நோக்கி தான் என் சைக்கிள் விரையும்.

அம்மா சொன்ன கதையின் ஒரு பகுதியை அவரும் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். ,’’ அப்பல்லாம் போலீஸ் யூனிஃபார்முக்கு பயங்கர மரியாதை. போலிஸ்காரர் வந்து சொன்னாரேன்னு சொல்லி, நான் வாழைப்பழ ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சேனே ஒழிய எனக்கு நீ பொழைப்பேன்னு ஒரு துளி நம்பிக்கை கூட கிடையாது.
பழம் வாங்கிட்டு வர்றதுக்குள்ளயே உன் கதை முடிஞ்சிரும்னு கூட  நினைச்சேன். நடக்கலை.

 தினமும், முகம் தவிர உன் உடம்பெல்லாம் பழச்சதையை வச்சி மூடிட்டு,சில மணி நேரங்கழிச்சி எடுப்போம். ஒரு மூனு மணி நேரம் நீ தாக்குப்பிடிச்ச உடனே எனக்கு லேசா ஒரு நம்பிக்கை வந்துச்சி.தினமும் ஆஸ்பத்திரியில உன்ன கிராஸ் பண்றப்பல்லாம்,மனசுக்குள்ள ‘நீ செத்துப்பொழைச்சவண்டா’ தான் பாடிட்டுப்போவேன்.

இப்பப்பாரு வவுத்து வலின்னு வாரத்துக்கு ரெண்டுதடவையாவது என்னை டார்ச்சர் பண்ண வந்துர்ற’’ என்ற டாக்டர் எனக்கு வவுத்து வலி முத்துராமலிங்கம்’ என்று பட்டப்பெயர் வைக்கும் அளவுக்கு அவருக்கு ரெகுலர் ’கஷ்ட’மர் ஆகியிருந்தேன்.போகும்போதெல்லாம் கலர்கலராக மாத்திரைகள் அடுத்த தடவ சரியாகலைன்னா ஆபரேசன் தான் என்று மிரட்டி அனுப்புவார்.

வாழைப்பழத்தின் தயவில் என் உயிர் நீடிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள்தான்,இனி இவன் பிழைத்துவிடுவான்’ என்ற நம்பிக்கை வந்து, வாடிப்பட்டி, சோழவந்தான், கட்டக்குளம், சுக்கிலநத்தம் போன்ற கிராமங்களிலிருந்து வந்த என் சொந்தங்கள் ஊருக்கே திரும்பியிருக்கிறார்கள்.

சுமார் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்த என் உடலில் தீக்காயத்துக்கான தழும்பு என்று இருப்பது, இடது கையின் ஒரு பகுதியில் மட்டுமே. அதுவும் தினமும் கவனமாய் வாழைப்பழத்தை நீக்கி, புதிய பழங்களை வைக்கும் வேலையை அம்மா செய்துவர,அது அத்தை கைக்குப்போன ஒரு நாள், அந்தக்கையில் வாழைப்பழத்தை எடுக்கும்போது, எனது சதையும் சேர்ந்துவருவதை அவர் கவனிக்காமல் செய்தததால் நிகழ்ந்தது.

இந்தக்கதையை உடைந்த குரலிலேயே பெரும்பாலும் சொல்லும் அம்மா, முத்துராமலிங்கத்தேவர், அந்த கான்ஸ்டபிள், டாக்டர் லைஸாண்டர் ஆகிய மூன்று பேரைப்பற்றிச்சொல்லும்போதெல்லாம் கையெடுத்துக்கும்பிட்டபடியேதான் சொல்லுவார்.

’எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே..அத்தனையும் ஒரு தாயாகுமா? அம்மா..அம்மா...அம்மா.. எனக்கது  நீயாகுமா?
தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை. தாயின் வடிவில் தெயவத்தைக்கண்டால் வேறொரு தெய்வமில்லை’

- இது அடிக்கடி நான் கேட்கும் பாடல் எனும்போது என்னை வாழவைத்த ‘முத்துராமலிங்கம்’ எனும் இந்தப் பெயரை நான் கல்லறைக்குப்போகும் வரை மாற்ற முடியுமா?

ப்புறம் எனக்கு விபரம் தெரிந்தபிறகு ‘தேவர்’ பச்சை குத்தியிருந்த அந்த கான்ஸ்டபிளை நான் பார்த்ததில்லை.

          ஆனால் டாக்டர் லைஸாண்டரோ  வாழ்நாள் முழுக்க பல சமயங்களில் என் கனவுகளில் வந்து நலம் விசாரித்துவிட்டுபோயிருக்கிறார்.

90ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள், நான் என் சொந்த வேலை காரணமாக ரயிலில் மும்பை பயணித்துக்கொண்டிருக்கிறேன். வழக்கத்தை விட ஒரு நீண்ட கனவு, ‘என்னய்யா ராசா இப்பல்லாம் என்னப்பாக்க வர்றதேயில்லை. ஊரை விட்டுக் கிளம்பின உடனே வவுத்து வலியெல்லாம் சரியாப்போச்சா?’’ என்றெல்லாம் பேசுகிறார் டாக்டர்.

இறங்கின உடனே முதல் வேலையாக என் விருதுநகர் நண்பனுக்கு போன் அடித்து விஷயத்தைச்சொல்கிறேன்.

‘’டேய் இன்னைக்கி காலைல தான்  நான்குநேரி பக்கத்துல ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல லைஸாண்டர் டாக்டர் இறந்துட்டார்டா’’

அதன்பிறகு ஒருமுறை கூட டாக்டர் என் கனவில் வரவேயில்லை.

Sunday, March 18, 2012

என் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேரை வச்சே?


இந்தப்பதிவை எழுதலாமா, வேண்டாமா என்று ஓராயிரம் முறை யோசித்திருப்பேன்.எனக்கு சாதியத்தில் எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை.ஆனால்....?

‘தெரியுமா.., அந்த முத்துராமலிங்கம் நம்ம சாதி கிடையாதுடா., இவ்வளவு காலமா நல்லா நாம  ஏமாந்துக்கிட்டு இருந்திருக்கோம்.'

-இப்படிப்பொருள்படும் வார்த்தைகளை, நான் எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்தே ,தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில், நான் மதிக்கும் பெரியபெரிய மனிதர்களிடமிருந்து  கூட கேட்டிருக்கிறேன். 

நாம் அவர்களிடம் நான் முத்துராமலிங்கம் என்று மட்டும் தானே அறிமுகமானோம். நடுவில் எங்கிருந்து சாதி வந்தது? என்று யாரையும் நான் கோவித்துக்கொள்ள முடியாது ? ஏனெனில் எனது இந்தப்பெயரை தேவர் சமூகத்தினர் தவிர யாரும் வைத்ததாக நானும் கேள்விப்பட்டதில்லை.

எனது கிராமத்தில் 5வது படிக்கும் வரை இந்தப்பெயர் குறித்து எந்தப்பிரச்சினையையும் நான் சந்தித்ததாக நினைவில்லை.

ஆனால் 6 வது படிக்க அண்டை கிராமமான சத்திரரெட்டியபட்டிக்கு போன உடனே,அந்த பள்ளியில் நூற்றுக்கு பத்து முத்துராமலிங்கங்கள் இருந்தார்கள். நான் படித்த ‘பி’ செக்‌ஷனில் மட்டுமே என்னையும் சேர்த்து நாலு முத்துராமலிங்கங்கள்.எங்கள் ஒவ்வொருவரையும், இனிஷியலோடு சேர்த்த  பட்டப்பெயர் வைத்தே மற்ற மாணவர்கள் அழைத்தார்கள்.

இங்கே தான் எனது பெயர்ப்பிரச்சினை ஆரம்பமானது. எதற்கான சண்டையாக அது துவங்கியிருந்தாலும், வேற சாதிப்பய நீ எப்பிடிடா,எங்க தேவரையா பேர வச்சிக்கலாம்? என்றே அந்த சண்டைகள் பெரும்பாலும் முடியும். என்ன இருந்தாலும் நாங்க அப்ப சின்னப்பசங்கதான?.

நான் வீட்டுக்குப்போனவுடன் அம்மாவின் புடவை முந்தானையைப்பிடித்தபடி’எனக்கு ஏம்மா முத்துராமலிங்கம்னு பேரு வச்சே? என ஓங்கி  அழ ஆரம்பித்துவிடுவேன்.

உடனே அம்மா நடுங்கும் குரலில்,’ தம்பி உனக்கு அந்தப்பேர வக்காமப்போயிருந்தா ஒரு வயசுலேயே உன்ன குழி தோண்டிப்புதைச்சிருப்பமப்பா’ என்ற அழுதபடி ஒரு கதை சொல்லத்துவங்குவார்.
என் தாய்க்கு நான் எட்டாவது கடைக்குட்டி.

அப்பா விருதுநகருக்கு அதிகாலை பால் சப்ளை செய்கிற ஒரு சிறு வேலையோடு முடித்துக்கொண்டு,அப்புறம் முழுநேர சீட்டுவிளையாட்டுக்கு போய்விடுவாராதலால், குடும்பத்தைதாங்கும் பெரும்பாரம் அம்மாவிடமே இருந்தது. இதனால், விவசாயம் போக வீட்டுவாசலிலேயே எங்களுக்கு ஒரு சிறு பெட்டிக்கடையும் இருந்தது.

அப்போது நான் ஒரு வயசுத்தொட்டில் குழந்தை.என்னைத்தொட்டிலில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தபோது, வெளியே கடைக்கு சாமான் வாங்க வந்த யாரோ சத்தம் போட்டு அழைக்க என் அம்மா தொட்டிலை சற்று இழுத்து ஆட்டிவிட்டுவிட்டு, கடைக்கு வியாபாரம் பார்க்க போய்விட்டார்கள்.

இழுத்து ஆட்டப்பட்ட தொட்டிலானது, சுவரிலிருந்த மாடக்குழியின் விளக்கை நலம் விசாரிக்க, நான் படுத்திருந்த காட்டன் சேலையில் தீப்பிடித்துக்கொண்டது.
என் அழுகுரல் அதிகரித்ததை நெருப்பு பற்றிக்கொண்டதோடு தொடர்பு படுத்தி அறிந்துகொள்ளமுடியாத அம்மா ,சற்று தாமதமாகவே வீட்டுக்குள் வர நான் கழுத்துக்கு கீழே வெந்து முடிந்திருந்தேன்.

விஷயம் ஊர்முழுக்கப்பரவி, வீட்டுமுன் திரண்டுவிட்டார்கள்.’புள்ள பொழக்கிறது கஷ்டம்’ என்று நினைத்து ஏறத்தாழ எல்லோரிடமிருந்தும் சாவுக்கான அழுகையே வந்திருக்கிறது.இருந்தாலும் மனசு கேட்காமல் மாட்டுவண்டி பூட்டிக்கொண்டு விருதுநகர் லைஸாண்டர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்கிறார்கள்.

நான் ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் டாக்டர் லைஸாண்டரைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.கைராசியான டாக்டர் என்பார்களே அந்த வகையில் முக ராசியான டாக்டர் அவர். அவரைப்பார்த்த உடனேயே பல பேருக்கு நோய் போய்விடும். ஏழை விவசாயிகள் சிகிச்சைக்குபோனால், கையில எவ்வளவு வச்சிருக்க? என்று விசாரித்து, அதை நீயே வச்சிக்கோ’ என்றபடி சிலசமயங்களில் வழிச்செலவுக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

இதோ மருத்துமனைக்கு வந்துவிட்டேன். என்னைப்பார்த்த லைஸாண்டருக்கு நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை துளியும் வரவில்லை.என் அப்பாவையும் சகோதரர்களையும் பார்த்து சொந்தக்காரவங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பிடுங்க. முகம் தவிர எல்லாப்பாகமும் நல்லா வெந்துரிச்சி. ட்ரீட்மெண்ட் குடுக்கிறதால எந்த பிரயோசனமும் இல்லை என்று கையைவிரித்துவிட்டார்.

இப்போது இழுத்துக்கோ,பறிச்சிக்கோ’என்று கிடக்கும் எனது வெந்த உடலை வெளியே எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வருகிறார்கள்.
என் கூடப்பிறந்தவர்களே ஏழுபேர் எனும்போது அழுகுரல்களுக்கு கேட்கவா வேண்டும்.அதுவும் என் நாலு அக்காமர்களும் ஆளுக்கு கொஞ்ச நேரம் என்று தம்பியை சண்டை போட்டு வளர்த்தவர்கள்.

‘அதில் ஒரு அழுகை இப்படி இருந்தது. ‘’ஐயயோ முத்துராமலிங்கத்தேவர் இறந்த அன்னைக்கி பிறந்தன்னுதானடா ராசா உனக்கு அந்தப்பேரு வச்சோம்.பிறந்த ஒரு வருஷத்துல கொண்டுட்டுபோறதுக்கா அவரு பேர உனக்கு வச்சோம்.’’

கைராசியான டாக்டருன்னு நம்பி வந்தா பிள்ளைய உசுரோட கொண்டுட்டுப்போகச்சொல்றாரே... அய்யோ முத்துராமலிங்கம்.’’

அப்போது ஒரு கான்ஸ்டபிள் முத்துராமலிங்கம் ரூபத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வருகிறார். அவர் கையில் தேவரின் பச்சை குத்தியிருக்கிறது. நான் அன்று சாகப்பிறந்தவனில்லை என்று அந்த சாதாரண கான்ஸ்டபிளுக்கு தெரிந்திருக்கிறது. ‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார்.
     [ தொடர்வேன்]

எம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...

உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களில் நீங்கள் பழிவாங்கவேண்டிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா?

அப்படியானால் அவர்களுக்கு ‘மாசி’ படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து, பிரியாணி பொட்டலமும், குவார்ட்டரும் வாங்கிக்கொடுத்து,  முழுப்படத்தையும் பார்க்கிறார்களா என்று தியேட்டர் வாசலில் காத்திருந்து கன்ஃபர்ம் பண்ணுங்கள்.

அவர்கள் மீது உங்களுக்கு இருந்த ஆத்திரம் அப்படியே பரிதாபமாக மாறிவிடும். அவர்களுக்கு, நான் சொல்லமலேயே,வீடு வரை போக ஆட்டோவுக்கும் காசு கொடுத்து அனுப்பி விடுவீர்கள்.

சரி, விமர்சனம் என்று வந்த பிறகு கதை என்ன என்று எழுதாவிட்டால் ,இவர் படம் பாக்காம தூங்கிட்டாரோ என்று நீங்கள் பழி சொல்லக்கூடும் என்பதால்,விதிப்படி, கதைக்கு வருவோம்.

அர்ஜுன் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்.அவர் நேர்மையாக இருக்கவிடாமல் அரசியல்வாதியாக இருக்கும் ரவுடிகளும், ரவுடிகளாக இருக்கும் அரசியல்வாதிகளும், மேற்படி ரெண்டுமாகவே இருக்கிற டைரக்டர் கிச்சாவும் தொந்தரவு செய்கிறார்கள்.

அவர்களை முதல் பாதியில் போலீஸாக இருந்து, இரண்டாவது பாதியில் பொறுக்கியாக இருந்து, பாட்டி வடை சுட்ட மாதிரி அர்ஜூன் சுட்ட கதைதான் ‘மாசி’ எனப்படும் படத்தின் பாசி படர்ந்த கதையாகும்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிச்சைக்காரன் போல் ஒருவனால் சுடப்படும் அர்ஜுனின் நினைவலைகளுக்கு போகும் டைரக்டர், அடுத்த ஷாட்டிலேயே ஹீரோயின் அர்ச்சனாவின் தொப்புளுக்கு க்ளோஸ் அப் போட்டு படுக்கையறை காட்சியில் பயணிப்பதிலிருந்து, அம்மாவுக்கு எல்லோரும் சேலை எடுத்துக்கொடுத்துதான் மகிழ்விக்கிறார்கள் அதை மாற்றி சட்டை எடுத்துக்கொடுத்து மகிழ்விப்பது என்று ஏகப்பட்ட அதிர்ச்சிகளை படம் நெடுக வைத்திருக்கிறார்.

அதிலும் கலாராணி என்கிற 25 பெண் சிவாஜிக்கு, மம்மி மாண்டேஜ் பாடல் வைக்கிற கல் நெஞ்சமெல்லாம் டைரக்டர் கிச்சாவுக்கு எப்படி வந்தது என்று புரியவில்லை. தற்போது செக் மோசடி வழக்கில் புழல் சிறையில் உள்ள கிச்சாவை அடுத்து படம் எதுவும் இயக்க மாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு ரிலீஸ் பண்ணுவது தமிழ் சமூகத்துக்கு பாதுகாப்பானது என்பது என் தாழ்மையற்ற கருத்து.

இதற்கு மேலும் இந்தப்படத்தைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.  மாசி’யின் பாடி ரெண்டு மூனு நாளுக்கு மேல் தாங்காது என்பதால். முதல் பாராவில் சொன்னபடி எதிரிகளின் பட்டியலைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே செயலில் இறங்குங்கள்.
$$$$$$$$$$$$$$$

என் குறிப்பு 2: தமிழ்மணத்தின் சிறப்பு விருந்தினர் ஆசனம் எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இதன் முதல் கட்டுரையில் நான் வாக்களித்திருந்தபடி சமையல் குறிப்பு எழுத மட்டும் சமயம் அமையவில்லை. ஆனால் ஒரு புதிர் போடுவதாக சொன்னேன்.
அந்த புதிரைப்படிப்பதற்கு முன் ஒரு சின்ன நிபந்தனை.

இந்தப்புதிரை விடுவிப்பவர்களுக்கு என் சொத்து மொத்தமும் எழுதி வைக்கிறேன் என்று நான் ஹெவி ரிஸ்க்’ எடுத்திருப்பதால், ஐசிஐசிஐ கார்டுகளில் படிக்க முடியாத சைஸுகளில் பல நிபந்தனைகள் வருமே அது மாதிரி இரு நிபந்தனை மட்டும் வைக்கிறேன்.

1. இந்தப்போட்டியில் என் சொந்த ஊரான நல்லமநாயக்கன்பட்டி, மற்றும் அருகாமையில் இருக்கிற என் உறவு கிராமங்களான உசிலம்பட்டி, புல்லலக்கோட்டை ஊர்களைச்சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளக்கூடாது.

2. மேற்படி மூன்று ஊர்களிலும் அடுத்த பதினைந்து நாட்களுக்கு  புதிய மனிதர்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது.

இது உங்களுக்கும் எனக்குமான கே. டி. குஞ்சுமேன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.

சரி இப்ப புதிருக்கு வருவோம்.


ஒரு அழகிய இளம்பெண் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப்பகுதி வழியாக சைக்கிளில் வரும் ஒருவர் அந்தப்பெண்ணைப்பார்த்து கீழ்க்கண்டவாறு சொல்லி விட்டுப்போகிறார்....

‘எம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே... உங்க அப்பன் வந்து கேட்டா... உன் புருஷன் வந்துட்டுப் போனான்னு சொல்லு’


மேட்டர் இவ்வளவு தான்.  இந்த இருவருக்குமான உறவுமுறை என்ன என்பதை நீங்கள் விடுவிக்க வேண்டும்.

இவர்களுக்குள் கள்ள உறவு எதுவும் இருக்குமோ என்று நினைத்து கன்ஃபியூஸ் ஆகிக்கொள்ளாதீர்கள். இருவருமே சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் தான்.

புதிர் போடும்போது ஒரு சின்ன க்ளுவாவது கொடுக்க வேண்டும் என்பது காலகாலமாக நிலவி வரும் நியதி. அந்த வகையில் நானும் ஒரு க்ளு தருகிறேன்.

எனது உள்ளம் கவர்ந்த இசைஞாநியைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு எனது ப்ளாக்கில்,’ ராஜா பைத்தியங்களிலேயே ராஜ பைத்தியம் நான் தான்’ தலைப்பில் எனது ப்ளாக்கில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இதற்கான நல்ல க்ளூ ஒன்று இருக்கிறது.

Friday, March 16, 2012

என்ன அழ வைத்த ‘தல’ அஜீத்

முன் குறிப்பு: இந்த இடுகை கொஞ்சம் நீளம் அதிகமாயிடுச்சி. அதனால நீங்களே ஏதாவது ஒரு இடத்துல இண்டர்வெல் விட்டுட்டு,மீதியை அப்புறமா வந்து படிச்சிக்கங்க.

’சேது’ ஹிட்டாகி மொத்த இண்டஸ்ட்ரியுமே பாலாவை வைத்து படம் தயாரிக்க ஆளாய்ப் பறந்தபோது, அவர் ஒரு வித்தியாசமான தயாரிப்பாளரைத் தேர்ந்தெடுத்தார்.அவர் பெயர் பூர்ணசந்திரராவ். இவர்தான் நமது அடுத்த புரடியூசர் என்று பாலா முடிவு செய்த காரணத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.  இது தல ஏரியா .மத்த மேட்டருங்க தலயிடக்கூடாத ஏரியா.

அப்போது இருந்த நிலவரப்படி பாலா-பூர்ணசந்திரராவ் கூட்டணியில்  ‘நந்தா’ படத்துக்கு ஹீரோ என்று முதலில் முடிவு பண்ணப்பட்டவர் அஜீத்தான்.

ஜெயா ஃபிலிம் சிடி காட்டேஜில் ஏகப்பட்ட பாம்புகள், மனிதர்களை விட தைரியமாக நடமாடிக்கொண்டிருந்த பகுதியில், டிஸ்கசனுக்கு தயாரிப்பாளர் தரப்பில் ரூம் போட்டிருந்தார்கள்.

‘பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பாலாக்கள் நடுவினிலே நான் அமர்ந்திருக்க,’நந்தா’ கதையைக் கேட்க அஜீத் வந்தார்.
இவ்வளவு பெரிய ஹிட் குடுத்திருக்கோம். அதுக்கப்புறமும் கதை சொல்லனுமா? என்ற கேள்வி ஒருபுறமும், வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க’ என்கிற நிதர்சனம் ஒரு புறமுமாக அன்று அஜீத்துக்கு, சும்மா ஒரு பத்து வரிகளில்தான்  பாலா கதையே சொன்னார்.

இந்த பத்து வரியைக்கேக்கத்தானா இவ்வளவு தூரம் வந்தேன் என்பது போல் அஜீத் பார்க்க, ’’வெயிட் பண்ணுங்க .ஒரு அஞ்சி நிமிஷத்துல, அடுத்து முழுக்கதையை எப்ப சொல்றேன்னு முத்துகிட்ட சொல்லி அனுப்புறேன்’ என்றார் பாலா.
(அவர் தல, நான் தறுதல)
அஜீத் ரூமுக்கு வெளியே காத்திருக்க,’’முழுக்கதையும் சொல்ல இன்னொரு பத்து நாளாவது ஆகும்னு சொல்லி அனுப்பிச்சிட்டு வாங்க’ என்று என்னை அனுப்பி வைத்தார் பாலா.

’எங்கே செல்லும் நந்தா’ கதை என்ற ரீ-ரெகார்டிங் மட்டும் பின்னணியில் ஒலிக்க, அடுத்த பத்து நாட்களும் டிஸ்கசன் என்ற பெயரில் ஒரு எழவும் நடக்கவில்லை.

ஆனால் கம்பெனியிலிருந்து கரெக்டாக நாள் குறித்து மறுபடியும் அஜீத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். என்னிடம் சொல்லவில்லையென்றாலும்,நந்தா’ வுக்கு அஜீத் தோதுப்பட மாட்டார் என்று பாலா முடிவு செய்து வைத்திருப்பதை நான் முன்பே யூகித்துவிட்டேன்.

தயாரிப்பாளர் தரப்பைப்பொறுத்தவரை  அந்த முடிவை தான் எடுத்ததாகக்காட்டிக் கொள்ளாமல், அஜீத்தே எடுத்ததாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் பாலா  வீரியமாக ஒரு காரியம் செய்தார்.

அஜீத் ஒரு நீண்ட கதை கேட்கபோகும் ஆவலில், காட்டேஜ் அறைக்குள் அமர, மேலும் பத்து நாட்கள் ’பட்டை’ தீட்டப்பட்ட ‘நந்தா’ கதையை பாலா சொல்ல ஆரம்பித்தார்.அது முதலில் சொன்ன பத்து வரியில் எட்டு வரி காணாமல் போய் வெறும் ரெண்டே வரியில் முடிந்து விட்டது.

பாலாவின் உள்குத்து’ புரியாமல் அஜீத் கொஞ்ச நேரம் முழித்தார். பிறகு சுதாரித்து, தர்மசங்கடமான ரியாக்‌ஷன் எதுவும் கொடுக்காமல் கிளம்பிப்போனார்.

அஜீத் இல்லை என்று ஆகிப்போன சில தினங்களிலேயே, தயாரிப்பாளர் பூர்ணசந்திரராவும் இல்லாமல் போய், அமெரிக்காவில் இருந்து   தயாரிப்பாளர்களாக நான்கு புன்னகை மன்னன்கள் வந்தனர். அடுத்த நந்தாவாக பாரதிராஜாவின் பிள்ளை  மனோஜ் முடிவு பண்ணப்பட்டு,அது கடைசியில் சூர்யாவாக மாறிய பெருங்கதை எல்லாம் பிறகு. இது ‘தல’ ஏரியா. மத்த மேட்டருங்க தலயிடக்கூடாத ஏரியா.

சினிமாவுல மட்டும்தான் ஃப்ளாஷ்பேக் போடுவாங்களா?  இப்ப நான் போடுறதுக்குப் பேரு ப்ளாக்பேக்’.

அப்பிடியே ஒரு ரெண்டு வருஷம் பின்னாடி வாங்க.

‘அதர்மம்’ரிலீஸாகி வெற்றிப்படம்னு ஆன உடனே, ரமேஷ்கிருஷ்ணன் தன்னோட பாண்டி பஜார் ரூமை எனக்குத்தாரை வார்த்துட்டு, முழுநீள உதவி இயக்குனரா வச்சிக்கிட்டான்.

படம் ஹிட்டே ஒழிய ரமேஷுக்கு அடுத்த படம் அவ்வளவு சீக்கிரமே வரலை. பாக்குறதுக்கு ஸ்டண்ட் யூனியன் ஆளு மாதிரியே இருப்பான். இந்தி ஆர்டிஸ்ட் மாதிரியே ட்ரெஸ் பண்ணியிருப்பான். பேச்சுல ஒரு தெனாவெட்டு. சதா ரே-பான் கூலிங் கிளாஸ். பென்சன் -ஹெட்ஜஸ் சிகரட். மொத்தத்துல ஒரு மார்க்கமான மதுரைக்காரன்.

’அதர்மம்’ ரிலீஸாகி பதினைஞ்சி மாசமாச்சி. காலையில ஒரு டிஸ்கசன்ல இருப்போம். அது மத்தியான லஞ்ச்சோட கேன்சல் ஆயிருக்கும். மறுநாள் வேற ஹீரோ வேற புரடியூசருக்கு டிஸ்கசனுக்கு உட்கார்ந்திருப்போம். அது காலை டிபனோடவே கதை முடிஞ்சிருக்கும்.  

(பகைவன் கிளாப் போர்டுடன் நான்)

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வந்தாகனுமே, ரமேஷ் தன்னோட நிலை உணர்ந்து சகஜ நிலைக்கு வந்த ஒரே நாள்ல அவனுக்கு ரெண்டு படங்கள் கமிட்’ஆனது. ஒண்ணு விஜயசாந்தி-ராம்கி நடிச்ச ‘தடயம்’ ரெண்டாவது சத்யராஜ் சாரும், நம்ம தல அஜீத்தும் நடிச்ச ‘பகைவன்’.

‘பகைவன்’ படத்தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தர் சார் ஆபிஸ்ல தான் அஜீத்தை முதமுதல்ல மீட் பண்றேன். அப்ப ‘காதல் கோட்டை’ படத்துல நடிச்சி முடிச்சிருந்தார்,ஆனா ரிலீஸாகலைன்னு நினைக்கிறேன்.
‘நேசம்’ உல்லாசம்’ன்னு அவர் மார்க்கட் ’பல மாசமா ரொம்ப  மோசமா’தான் இருந்தது. ரமேஷ் ஒரு சுமாரான கதை சொல்ல, 4லட்ச ரூபாய் சம்பளம் பேசி ஒரு இருபத்தையாயிரத்துக்கு செக் வாங்கிட்டு கிளம்பிப்போனார் அஜீத். படத்தோட ஹீரோயின் அஞ்சலா ஜவேரி,கோவேறிக் குதிரை மாதிரி இருக்குன்னு சொல்லி புரடியூசர் எங்க தலையில கட்டிவிட்டார்.

இந்த ‘பகைவன்’ கதையும் இன்னொரு சந்தர்ப்பத்துலதான் சொல்லனும்.

நான் வேலை பாத்த ரெண்டு படங்களுமே,ஊத்தி மூடிக்கிட்டதுனால, கழுதை கெட்டா குட்டிச்சுவரு மாதிரி’ குமுதத்துல’ சினிமா நிருபரா வேலைக்குச்சேர்ந்தேன்.அங்க நடந்ததை அப்புறமா தான் எழுதுவேன்னு குமுதம் அண்ணன்களுக்கு சத்தியம் பண்ணிக்குடுத்த மாதிரியே,ஆபீஸுக்குள்ள கூட நுழையாம நேரா அவுட்டோருக்கே போறேன்.

இடம்: ஹைதராபாத் ‘ரெட்’ பட ஷூட்டிங். அஜீத் சாரை ஒரு பேட்டி எடுக்கலாமுன்னு போயி, பழைய கதையெல்லாம் பேச ஆரம்பிச்சி ரொம்ப நெருக்கமாயிட்டோம். அன்னிக்கே கிளம்பலாமுன்னு முடிவு பண்ணினப்ப அஜீத் சார் என்னப்போக விடலை.

அஜீத்துக்கு ‘குமுதம்’ ஆபீஸ் பத்தி சில விஷயங்கள் சொல்லி புரிய வச்சப்ப, ‘’நீங்க ஒரு மூனு நாள் தங்குறதுக்கு ஆபீஸ்ல என்ன காரணம் சொன்னாதான் அனுமதிப்பாங்கன்னு கேட்டார். நான் உடனே ஒரு சின்ன தொடர் எழுதுறதா ஒத்துக்கிட்டீங்கன்னா, அதை எழுதிக்குடுத்துட்டு வேலையை விட்டுட்டு ஓடிப்போனா கூட கவலைப்பட மாட்டாங்க. அவிங்க அவ்வளவு நல்லவிங்க ‘’ என்றேன்.
 
பாலாவின் அந்த ‘நந்தா’ மேட்டர் உட்பட யாரைப்பத்தியும் காண்ட்ரவர்ஸி பண்ணாம எழுதுறதா இருந்தா பண்ணலாம் என்றவர், நான் கூடத்தங்கியிருந்த மூன்று நாட்களுமே ‘முத்துஜி’என்று தாங்கு தாங்கென்று தாங்கினார்.
சாப்பிடும்போது குறைவாகச்சாப்பிட்டால் சொந்த சகோதரர் போலவே சண்டை போடுவார்.
அப்போது தான் அவருக்கு புதிதாக போட்டோகிராபியின் மீது ஆசை வந்திருந்தது. எனக்கு கேமரா மீது இருந்த தீராத ஆர்வத்தைப் பற்றியும்  கேட்டுக்கொண்டார்.

கடைசி நாளில் அவரிடம் சொல்லிவிட்டு ரயில்வே ஷ்டேசன் கிளம்பிய போது பின்னாலேயே துரத்தி வந்த காரில் ‘கன்வேயன்ஸ்’ என்ற பெயரில் ஒரு பெரிய கவர்’ வந்தது. அதைக்கொண்டு வந்த மேனேஜரிடம் வலுக்கட்டாயமாகத் திருப்பிக்கொடுத்துவிட்டு வந்த போது, மறுநாள் போனில் என்னை அழைத்து ரொம்பவும் வருத்தப்பட்டார்.

அடுத்து அவர் சென்னை வந்தவுடன் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, ‘நீங்கள் எனக்கு எதாவது பரிசளிப்பதாக இருந்தால், குமுதத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்த பிறகு அளியுங்கள் என்று மட்டும் அவரை சமாதானப்படுத்திவிட்டு வந்தேன்.

இது நடந்து பல மாதங்கள்  இருக்கும். ஒரு நாள் ‘குமுதம்’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு,எல்லோருக்கும், தகவல் தெரிவிப்பது போல்  அஜீத்துக்கும் தெரிவித்து விடுவோமே என்று நினைத்து படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று விசாரித்தால், அது எனது வீட்டுக்கும் குமுதம் ஆபிசுக்கும் நடுவில் உள்ள குஷால்தாஸ் கார்டனாக அமைந்தது.

கேரவனுக்குள் இருந்த அஜீத் உள்ளே வரச்சொன்னார். வேலையை ஏன் விட்டீர்கள்? என்று பதறினார். பதற வேண்டியதில்லை. சினிமாவில்தான்  நான் செல்லுபடியாகவில்லையே ஒழிய ,பத்திரிகைகளில் எப்போதுமே என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்கள், அதனால் பதறத்தேவையில்லை. விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன்.

அங்கிருந்து கிளம்பி நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் வேளையில் அஜீத் ஒரு சாகஸம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் எனபதை அறியாத என் பயணம் அது.

 நான் காலிங் பெல் அடித்து வீட்டுக்குள் நுழையும்போது என் குட்டிப்பையன் நந்து தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஒரு புத்தம் புதிய கேமரா பேக்குடன் நிற்கிறான்.

திறந்து பார்த்தால் ஒரு நிகான் எஃப்.எம் 2 கேமரா, உடன் ஒரு 70 டு 210 ஜூம் லென்ஸ். குமுதத்தில் இல்லாத முத்துராமலிங்கத்துக்கு அன்புடன் அஜீத்’ என்ற அந்தக்குறிப்பு, சற்று நேரத்திலேயே என் கண்ணீரால் நனைந்தது.

Thursday, March 15, 2012

விமர்சனம் ’கழுகு’- இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு

நேற்று ஃபோர் ப்ரேம்ஸ் தியேட்டரில் இந்தப்படத்தைப்போட்டார்கள்.மவுனம் ரவிதான் படத்தின் பி.ஆர்.ஓ. அவர் பெயருக்கு ஏற்றாற்போல் மவுனமாக இருக்க, தலைவர் விஜயமுரளிதான் படம் துவங்குவதற்கு முன்பு, இயக்குனருக்கு, ஹீரோவுக்கு, தயாரிப்பாளருக்கு சால்வை அணிவித்தார்.

இப்படி முதல் பட டைரக்டருக்கு மாலை மரியாதை செய்வது இனி தொடர்ந்து நடக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் பத்திரிகையாளர் முன்னிலையில் முதிர்ச்சியின்றி அறிவித்தார்.
படம் பாத்த பிறகு அது நல்லா இருந்தா, மாலைமரியாதை மட்டுமில்லாம, கற்பூரம் கொளுத்தி கூட ஆரத்தி எடுக்கலாம்.நூத்துக்கு தொண்ணுத்தி எட்டு அறிமுக டைரக்டருங்க, மொக்கையா படம் எடுத்து, புரடியூசர்களுக்கும்,தமிழ்சினிமாவுக்கும் மாலையை சாத்திட்டுப் போறப்ப, அவங்களுக்கு ஏன் நாம மாலை போடனும்ங்கிற கேள்வியை, துணிவாகவும் அதே சமயம் கொஞ்சம்   பணிவாகவும் கேட்டுக்கொண்டு, பிரஸ் ஷோவுக்கு இன்றைய டிபனாகக்கொடுத்த வடையுடன் விடை பெறுகிறேன்.

இப்ப நாம ‘கழுகு’ விமர்சனத்துல குதிக்கலாம்.

பத்திரிகை செய்திகளில் இந்தப்படத்தின் ஒன்லைன் பற்றிப் படித்த போதே, என் குலதெய்வம் அக்கம்மா அழகம்மா மீது சத்தியமாக, படத்தின் மொத்தக்கதை என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடத்தில் யூகித்துவிட்டேன்.

பொதுவாக சினிமா ஏரியாக்களில் கதை எழுதுகிறவர்களை விட கதை ‘செய்கிறவர்களே’ அதிகம்.
கதை செய்வது எப்போதுமே மிக சாதாரணமான வேலை. ஆனால் அதற்கு பலபேர், ஒரு பிரபல பத்திரிகையின் இணையாசிரியர் டாய்லெட்டில் முரசொலியை வைத்துக்கொண்டு முக்குவதைப்போல்,  முக்குவதைப்ப்பார்த்திருக்கிறே
ன்.
தறுதலையாகத்திரிந்த ஒருவன் தொபேல் என  தபால் தலையில் இடம் பிடிக்கிறான்’

ஒரு பண்ணையார் வீடு, முன் வீட்டுல கல்யாணம், கொல்லைப்புறத்துல கருமாதி .என்ன நடந்துச்சி?
பொணங்கள சந்தோஷமா அடக்கம் பண்ணிக்கிட்டிருந்த வெட்டியான், முதமுதல்ல தன் குழந்தை செத்தப்ப அழுதான்.

தற்கொலைப்பாறையிலருந்து குதிச்சி சாவுறவங்க பாடிகளை மீட்டுத்தர்ற ஒருத்தன், அதே பாறையிலருந்து குதிச்சி தற்கொலை பண்ணிக்கிறான்.
 இதில் கடைசியாக நான் எழுதிய ஒன்லைன் தான் ‘கழுகு’ படத்தின் கதை.

ஒரு பத்து நிமிடம் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி நீங்கள் யோசித்தாலும் உதித்து விடுகிற ஒரு சாதாரண கதைதான்.

கதாநாயகன் கிருஷ்ணாவும் அவனது நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா, மற்றும் பேச முடியாத அதனால் நமக்குப் பெயர் தெரியாமல் போனவருமாகச் சேர்ந்து, கொடைக்கானல் தற்கொலைப்பாறையிலிருந்து குதிப்பவர்களின்  பாடிகளைத் தேடி எடுத்து வரும் காசில், பீடி’குடித்து ‘ வாழ்கிறார்கள்.

இந்த வரிசையில் கதாநாயகி பிந்து மாதவியின் தங்கை தன் காதலனுடன் குதித்து விட , அவரது பாடியை மீட்டுத்தரும் கிருஷ்ணாவிடம் தனது உயிரோடு உள்ள பாடியை காதல் என்ற பெயரில் ஒப்படைக்கிறார்  பிந்து.

ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்து,’’இங்க பாரு பொண்ணு பாக்க லட்டு மாதிரி இருக்க உன்னை எவனாவது லவ் பண்ணி ஏமாத்திட்டுப்போயிடுவான். அதுல அப்செட் ஆகி நீ பாறையிலருந்து குதிச்சயின்னா, உன் பாடிய ஃப்ரியா தூக்கிட்டு வந்து உங்க அப்பா அம்மா கிட்ட ஒப்படைக்கிறேன்’’
என்று டயலாக்கெல்லாம் விடும் கிருஷ்ணா, ‘ அட ராமா ‘என்ற படி ஒரு கட்டத்தில் பிந்துவுக்கு நெருக்கமான ஜந்து ஆகிவிடுகிறார்.

தாடியைச்சொறிவது, வேஷ்டியைத்தொடை தெரியக் கட்டுவது ஆகிய இரண்டு வேலைகளை மட்டுமே படத்தில் செய்து வந்த வில்லன் ஜெயப்பிரகாஷின் கோரிக்கை ஒன்றை கிருஷ்ணா நிராகரித்து விட, கதைப்படி எப்படியும் கிருஷ்ணா க்ளைமேக்ஸில் பாறையிலிருந்துதான் குதிப்பார் என்று புரிந்துகொள்ளாமல், தனது அடியாட்களை வைத்து கிருஷ்ணாவையும் அவனது நண்பர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார்.

நண்பர்கள் மூவரும் கொல்லப்பட்டுவிட, கிருஷ்ணா மட்டும் பாறையிலிருந்து தனது பாடியுடன், தனது காதலி பாடியையும் கட்டிக்கொண்டு குதிக்கிறார்.கிருஷ்ணா ஏன் குதித்தார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தால், நீங்களும் ஏதாவது ஒரு தியேட்டரில் குதியுங்கள்.

சத்யசிவா என்ற புதிய இயக்குனர் இப்படி ஒரு தற்கொலைக்கதையுடன், கோடம்பாக்கத்தில் குதித்திருக்கிறார்.

கதை நடக்கிற களமும், இந்த பாத்திரங்களும் புதுசே ஒழிய, அவர்களுக்கு நடக்கிற எதுவும் நம்மை எதுவும் செய்யவில்லை.

ஹீரோ கிருஷ்ணாவும், அவரது நண்பர்களும், பாடியைத்தூக்குவதை சாக்காக சொல்லி படம் முழுக்க பீடி குடிக்கிறார்கள்.இதை ஒட்டி போடப்படும்’ புகை குடிப்பது புற்று நோயை உண்டாக்கும்’ என்ற குறிப்பு படத்தில் மொத்தம் 8234 முறை வந்து எரிச்சலூட்டுகிறது.சென்சார் வரவர பெரும் இம்சையார்.

கிருஷ்ணாவுக்கு இது மூனாவது படமாம். அண்ணன் விஷ்ணுவர்த்தன் சம்பாதிக்கிற காசை சினிமாவில் செலவழிக்கிற இந்த தம்பி தங்கத்தும்பி.நீங்க இன்னும் ஒரு முன்னூறு படமாவது நடிக்கனும் கிருஷ்ணமவராசா.

இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், ஒரு சிலரால், சின்ன சிலுக்கு’ என்று அழைத்து மகிழப்பட்ட,நாயகி பிந்து மாதவி, படம் முழுக்க மூக்குசிந்துமாதவியாக அழுதுகொண்டே இருப்பதால், அவர் சின்ன சிலுக்கா,அல்லது அந்தப்பெயரில் ஒரு இழுக்கா என்று முடிவு செய்யமுடியவில்லை.

இசை யுவன் ஷங்கர் ராஜா. 'ஆத்தாடி மனசுதான்’ பாடலில் மட்டும் லேசாக காத்தாடி பறக்க விடுகிறார். ரீரெகார்டிங் டொட்டடொய்ங் ‘தான்.நா.முத்துக்குமார் இப்போதெல்லாம் லிரிக் என்ற பெயரில் சும்மா கிறுக்’ கித்தள்ளுகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் பட்டியல் சேகர்  ஹீரோவின் தந்தையே என்பதால், அவர் கொடைக்கானல் மலை உச்சிக்குப்போகும் கொடூரமான முடிவையெல்லாம் எடுக்க வேண்டியதில்லை.
இந்த மாதிரி டைரக்டர்களின் சகவாசத்தை மலை அடிவாரத்தோடு நிறுத்திக்கொண்டால் போதும்.

மொத்தத்தில் கழுகு’ .இந்த மாதிரி டைரக்டர்கிட்ட பாத்துப் பழகு. இல்லைன்னா மலையிலருந்து நம்மள தற்கொலை பண்ண வச்சிருவாங்க.

Wednesday, March 14, 2012

டிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா?


1964  ஜனவரி 14 அன்று பி. ராமகிருஷ்ணையா பந்துலு  இயக்கத்தில் வெளிவந்த ‘ கர்ணன்’ படத்தின், புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு படத்தை,  கடந்த திங்களன்று பிரசாத் லேப் தியேட்டரில் பார்த்தேன்.

கொஞ்சம் ஓவராக ’சவுண்டு ‘ விடுகிறார்கள் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பம் என்னவென்று படம் பார்த்து புரிந்துகொள்ள முடியாமல், விக்கிபீடியாவில் போய்ப்பார்த்தால் ஆங்கிலத்தில் இப்படி ஒரு விளக்கம் இருக்கிறது.

A digitally restored version of Karnan (with digital enhancements and restored audio to enable its screening in digital cinemas). இதைப்படித்து நான் மேலும் குழம்பியதுபோல் நீங்களும் குழம்பியிருந்தால் மன்னியுங்கள்.

தி.மு. க.பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் பாஷையில் சொல்வதானால்,’புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ, புரியாதவன் போயிக்கோ’ என்று அடுத்த விஷயத்தை நோக்கிப்போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

சுமார் 47 வருடங்களுக்கு அப்புறம் வெளியாகும் இப்படத்திற்கு நம் அண்ணன்மார்கள் எப்படியும் விமர்சனம் எழுதி நடிகர்திலகத்தின் நடிப்பை,அசோகன்,முத்துராமன், சாவித்திரி ஆகியவர்களின் நடிப்பை வியப்பார்கள் என்பதால், நான் அந்த விமர்சன ஏரியா பக்கம் தலை காட்ட விரும்பவில்லை.அதனால்  இது கர்ணன்’படவிமர்சனம் இல்லை. நீங்கள் கர்ணகொடூரத்துக்கும் ஆளாக வேண்டியதில்லை.

 ‘உயர்ந்த மனிதன்’  மாதிரி படத்தோடு ஒப்பிடும்போதெல்லாம், இதில் சிவாஜி, அசோகன் நடிப்பெல்லாம் வெறும்  மொக்கை தான். படத்தில் கத்துக்குட்டித்தனமான காட்சிகளும் ஏராளம்.

அதுவும் அசோகனாகிய துரியோதனின் மனைவி பானுமதியின் மடிக்கச்சையைப் பிடித்து சிவாஜியாகிய கர்ணன் இழுத்தையெல்லாம் என்னால் அசோகனைப்போல் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, ‘எடுக்கட்டுமா, கோர்க்கட்டுமா? என்று கேட்கத்தோன்றவில்லை. அவர்கள் இருவரும் முழிக்கிற திருட்டு முழி, துரியோதனனுக்கு தெரியாமல் ,கர்ணனும் பானுமதியும் ,  எதோ ‘கள்ளாட்டம்’ ஆடியிருப்பார்கள் என்பதாகவே படம் முழுக்க  எனக்குத்தோணுகிறது.

ஒரிஜினலில் இருந்ததை விட இப்போது பத்து நிமிடங்கள் ட்ரிம் பண்ணி மூன்று மணி நேரமாகப் படம்  ஓடுகிறது.

ஒரு முனிவரின் இச்சைப்படி, சூர்யபகவானுக்கு குழந்தை கர்ணனைப்பெற்றெடுக்கும் கேடி லேடி குந்தி தேவி, அந்தக்குழந்தையை ஆற்றில் விடுவதில் தொடங்கி, முதல் பாதி,அர்ஜுனன் அன் கோஷ்டி, துரியோதனன் அன் கோஷ்டி, பீஷ்மர்,சகுனி மாமா, கண்ணன் மாமா, திருதிராஷ்டிரர், தலைவிரிகோலமாக அலையும் பாஞ்சாலி,  நம்ம தமிழ்சினிமா அந்தணனுக்கு மட்டுமே வித்தை கத்துத்தருவேன்’ என அழிச்சாட்டியம் பிடிக்கும் முனிவர் ,என்று சுமார் நூறு கேரக்டர் வகையறாக்களை அறிமுகம் செய்ய தொகையறா பாடியதிலேயே முடிந்து போவதால்,லேசாகக் கொட்டாவி  மாதிரி ஒரு கெட்ட ஆவி வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இலக்கியங்களில் பாஞ்சாலிக்கு கொடுத்த முக்கியத்துவம் ஏன் இந்தப்படத்தில் தரப்படவில்லை என்பது புரியவில்லை. அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் கணக்காக, எங்க கிட்டரெண்டு பாக்கெட் ஷாம்பு வாங்குனா அஞ்சு கிராம் சோம்பு இலவசம் என்பது மாதிரியே பல இடங்களில் வசனம் எதுவுமின்றி விசனத்தோடே நிற்கிறார்.

ஆனால், ‘’என்னவோய் சவுக்கியமா? ‘என்று கண்ணனைப்பார்த்து சகுனி கேட்டவுடன், ’இந்த லோகத்துல நம்ம ரெண்டு பேர் சவுக்கியத்துக்கு என்ன குறை வந்துடப்போகுது? என்று கண்ணன் கண்ணடிப்பதில் சூடு பிடிக்கும் இரண்டாவது பாதியை லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு கதை பண்ணி  மாற்றினால் பத்து மங்காத்தா வசூலைப்பார்க்கலாம்.ஒரு நூத்தியோரு ரூபாய் அட்வான்ஸ் எடுத்து வையுங்கள் .அதுக்கு நான் கியாரண்டி.

கதையை சொன்னால் கண்டிப்பாக சுட்டுவிடுவீர்கள் என்பதால், மாற்றப்போகும் கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில கேரக்டர்களை என் மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தேன்.

கர்ணனாக கர்னல் லெப்டினண்ட். டி.ராஜேந்தர் [ அந்த கவச குண்டலங்களோடு இவரைக் கற்பனை ’பன்னி’ப் பாருங்கள். இவரது குண்டலங்கள் மட்டுமே எட்டு மண்டலங்களுக்கு பேசும்.. அர்ஜுனனாக முத்துராமனுக்குப் பதில் ஜே.கே.ரித்தீஸ். துரியோதனனாக அசோகனுக்குப்பதில், பவர்ஸ்டார் சீனுவாசன்,அசோகன் மனைவி பானுமதி பாத்திரத்தில்’ இந்த உடை போதுமா என்று கேட்கிற காஷ்ட்யூமில் த்ரிஷா,கர்ணன் டி.ஆருக்கு ஜோடியாக ‘மீண்டும் நயன் தாரா,குந்தி வேடத்தில் குஷ்பூ, பாண்டவர்களின் கடைக்குட்டி சகாதேவனாக நம்ம குறளரசன், கலகம் விளைவித்து பல கேம் நடத்தும் கண்ணனாக அண்ணன் ராமராசன்.

இது சும்மா சாம்பிள்தான்.அட்வான்ஸுக்கு அடுத்த அமவுண்ட்,அதாவது சைடிஷ்’ வாங்குவதற்கு நீங்க இன்வெஸ்ட் பண்ணத்தயாராகும்போது, பட்டய கிளப்பும் பல விஷயங்கள் கிளம்பும்.

ஃப்ளாஷ்பேக் 1:

1983 என்று நினைக்கிறேன். சாத்தான்கள் நடமாட்டம் எதுவுமின்றி, நியூஸ் பேப்பர்களில் நல்ல  விஷயத்துக்காக மட்டுமே அப்போது பெயர் அடிபட்டுக்கொண்டிருந்த  எங்கள் அமெரிக்கன் கல்லூரிக்கு, எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்திருந்தார். எங்கள் கல்லூரி பாடத்திட்டத்தில் அவரது,’ பாரிஸுக்கு போ’ உள்ளிட்ட சில நாவல்கள் எப்போதும்  இருந்தன. அதனால் மாணவர்களுக்கும் அவருக்குமிடையில் ஒரு சந்திப்பு நடத்தினால்அவர்களுக்கு பயனுள்ளதாக  இருக்குமே என்று திட்டமிடப்பட்டே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.முதல் இரு தினங்கள் அவரது ‘யாருக்காக அழுதான்’ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற ஒரு சில படங்கள் எங்களுக்காக திரையிடப்பட்டு, பின்னர் கடைசி நாளில் அவரது ஒரு பேச்சு. இறுதியாக மாணவர்கள் அவரிடம் கேள்விகள் ஏதாவது இருந்தால் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.[ இந்த ஏற்பாடுகளையெல்லாம் தமிழாசிரியர் சுதானந்தா செய்திருந்ததாகவே எனக்கு ஞாபகம்.]

ஜெயகாந்தன் எழுத்தின் சுவாரஸ்யம் அவரது பேச்சிலும் நூறுசதவிகிதம் இருக்கும் என்பது அவரைப்பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு கூட தெரிந்திருக்கும்.அது தெரியாமல், எங்கள் மாணவர்களில் ஒருவர் அவரை மடக்கும் நோக்கில், ‘’ஐயா ஐந்து ஆண்மகன்களைத் திருமணம் செய்து கொண்டாளே  பாஞ்சாலி, அவள் பத்தினியா, பரத்தையா ? என்று யாரும் எதிர்பாராமல் ஒரு போடுபோட்டார்.

பதில் சொல்ல ஜே.கே. நொடியும் யோசிக்கவில்லை.

‘பத்தினியின் மகனுக்கு அவள் பத்தினி. பரத்தையின் மகளுக்கு அவள் பரத்தை’
.
ஜெயகாந்தனிடமிருந்து இந்த பதில் வந்ததும் கேள்வி கேட்ட மாணவரைத்தேடிய போது, அவர் ஆவியாகி அந்த இடத்தில் இல்லாமல் இருந்தார்.

Tuesday, March 13, 2012

ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்

ட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும் அப்படியே அழையுங்கள்.
2003-ன் இறுதியில் ‘பிதாமகன்’ ரிலீஸாகி சில தினங்களே ஆன நிலையில், நானும் பாலாவும், காரில் அமர்ந்து பீர் குடித்த படியே, ஏற்காடு மலையேறிக்கொண்டிருந்த போதுதான், முதன்முதலாக, ‘விருமாண்டி சண்டியரை நோக்கி ,சங்கீதத்தின் ஒரே சண்டியர்  ராஜா சொன்ன  ’உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ பாடலைக்கேட்டு கிறங்கினேன்., மலையிலிருந்து இறங்கின உடனே என் செல்போனின் ரிங்டோனாக அன்று  அரியனை ஏறிய பாட்டு இன்று வரை இறங்கவில்லை.

சலங்கை ஒலி’ இது மவுனமான நேரம்...,‘நாயகன்’ நீ ஒரு காதல் சங்கீதம்...,’  புன்னகை மன்னன்’ ‘என்ன சத்தம் இந்த நேரம்?..., மவுனராகம்’ நிலாவே வா...,காத்திருக்க நேரமில்லை’ வா காத்திருக்க நேரமில்லை..., நாடோடித்தென்றல்’ ஒரு கணம் ஒரு யுகமாக..., சிப்பிக்குள் முத்து’ மனசுமயங்கும்..., சத்யா’ வளையோசை கலகலவென..... வரிசையில் நான் அந்தப்பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். பாடலில் கமலுடன் நாட்டுப்புறத்தமிழில் கொஞ்சியிருந்த ஷ்ரேயா கோஷலுக்கு எனது இதயத்தின் இடது ஓரத்தில் சின்னதாக ஒரு கோயில் கூட கட்டியிருந்தேன்.’என்னவிட உன்ன சரிவரப்புரிஞ்சிக்க யாருமில்ல ...’ என்று ஷ்ரேயா எனக்காகப்பாடுவதாக நினைத்துக்கொள்வது சொல்லவொண்ணா சுகமாக இருக்கிறது.

தமிழ் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்களைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சின்ன வயசிலிருந்தே ராஜாவின் மீது வெறிகொண்ட ரசிகன் நான். அவருக்கு என்னைபோல் லட்சக்கணக்கில் பைத்தியங்கள் உண்டென்றாலும், ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான் என்ற தலைமைப்பொறுப்பை என்னிடம் தயவு செய்து விட்டு விடுங்கள் . அப்படி விட்டுக்கொடுக்க நீங்கள் முன்வரும் பட்சத்தில் என் வாழ்நாள் முழுக்க,எம்.எல்.ஏ, மந்திரி, முதல் அமைச்சர், பிரதமர், அமெரிக்க பிரதமர் போன்ற எந்தப்பதவிகளுக்கும் நான் உங்களொடு போட்டியிட மாட்டேன் என்று எத்தனை ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வேண்டுமானாலும் எழுதி கையெழுத்திடுகிறேன்.

வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும் அவர்  இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை* எனக்குப் பிடிக்கும் அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படம்  ,ஏ.ஆர். ரகுமான்,மற்றும் ஹாரிஸ்ஜெயராஜிடமிருந்து  எங்கள் ராஜா கைக்கு மாறும்போது, ‘படம் பிரமாதமா வந்துருக்காம்’ என்று சல்லி பைசா அட்வான்ஸ் வாங்காமல் மிஸ்டர் திகில் முருகன் பார்க்க வேண்டிய பி.ஆர்.ஓ. வேலையை நான் பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன்.
 
என்னைப்பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான்.இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.

மிகவும் வறுமையான பின்னணியில் எட்டுப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க, நாள்தோறும் நள்ளிரவில் தோட்டம் போய் தண்ணீர்பாய்ச்சிய என் தாய் லச்சம்மாளின் நினைவு வரும்போதெல்லாம் ‘பொன்னப்போல ஆத்தா என்னப்பெத்துப்போட்டா’ [என்னை விட்டுப்போகாதே ]பாட்டு கேட்டு அழுதிருக்கிறேன்.மனசு சரியில்லாத வேளைகளில், ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே, ஆலோலம் பாடி ‘ மாதிரி பாடல்கள் கொண்டு என் கண்ணீர் துடைப்பது ராஜாவின் சுரங்கள்.ஒரு பூ மலர்வதைக்கூட சங்கீதமாகச் சொல்ல முடியும் என்று மலர்ந்த ‘வெள்ளி முளைத்தது’ [கீதவழிபாடு] கேட்டு விடிந்தது எத்தனை காலைப்பொழுதுகள் என்று சொல்லிமாளாது.

அமெரிக்கன் கல்லூரியில்* படித்துக்கொண்டிருந்தபோது, நானும் எனது நண்பர்களும். வகுப்பறைகளில் இருந்ததை விட ,கல்லூரிக்கு எதிரே இருந்த கணேஷ் டீ ஸ்டாலில் தான் அதிகம் நின்றிருப்போம்.

‘மண்வாசனை, கரையெல்லாம் செண்பகப்பூ’ நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை,இளமைக்காலங்கள்’ என்று கேட்டு எங்களைத்திகைக்க வைப்பதையே ராஜா சலிப்பின்றி செய்து வந்தார்.கணேஷ்  ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்டீ  குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது.

ராஜாவை நான் முதன் முதலில் தனிப்பட்ட முறையில் சந்தித்தது, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், ‘அதர்மம்’ பட பூஜை தினத்தன்று.
எனது அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ரமேஷ் என்கிற ரமேஷ்கிருஷ்ணன்*, அடையாறு திரைப்படக்கல்லூரியில் டைரக்‌ஷன் கோர்ஸ் முடித்து, அங்கேயே ஆக்டிங் கோர்ஸ் முடித்த சுரேஷ் என்பவரை தயாரிப்பாளராக அமைத்து தனது’அதர்ம ஆட்டத்தை ஆரம்பித்திருந்தான். பட நிறுவனத்தின் பெயர் ஜி.கே.ஃபிலிம்ஸ்.தயாரிப்பாளர்கள் அண்ணன் தம்பி மூன்று பேர்.ரமேஷ் மூத்தவர், சுரேஷ் நடுவர். சதீஷ் கடைக்குட்டி. 
ரமேஷ் கிருஷ்ணனுடன் சேர்ந்து சந்தித்த நாலைந்து சந்திப்புகளிலேயே நான் தயாரிப்பாள சகோதரர்களிடம் மிகவும் நெருக்கமாகிவிட்டேன்.

இந்த சமயத்தில் நான் ஆசிரியராகவும், பார்ட்னராகவும் இருந்த ‘சத்ரியன்’* அரசியல் பத்திரிகை தனது இறுதி மூச்சை நெருங்கிக்கொண்டிருந்ததால், நான் எனது பெரும்பாலான நேரங்களை டிஸ்கஷன் ,சீட்டு விளையாடுவது என்று ‘அதர்ம’ கோஷ்டிகளுடனேயே கழிக்க ஆரம்பித்திருந்தேன்.

நன்றாக நினைவிருக்கிறது.  அன்று அதிகாலை.ஏ.வி.எம்மில் லேசான தூறலடித்துக்கொண்டிருக்க பூஜைக்கு சரியான நேரத்தில் ராஜா இறங்கிவர, நான் தெய்வ தரிசனம் கிடைத்ததுபோல் சிலிர்த்து நின்றேன்.

முதல்நாளே  கொஞ்சம் மன ரீதியாக, ரமேஷ் உட்பட்ட டீமை நான் தயார் படுத்தியிருந்த வகையில்,ரமேஷ்கிருஷ்ணன் உட்பட படத்தில் பணியாற்ற இருந்த அத்தனை டி.எஃப்.டி.மாணவர்களும் தாங்கள் போட்டிருந்த முரட்டு ஜீன்ஸ் பேண்டையும் பொருட்படுத்தாது, பட்பட் என்று ராஜா காலில் விழுந்து நமஸ்காரம் வைத்தவுடன்’ இந்தப்படம் கண்டிப்பா நல்லா ஓடும் என்று என் மனசுக்குப் பட்டது.
அன்று மதியமே மனோ குரலில் ‘தென்றல் காற்றே ஒன்றாய்ப் போவோமா?’ என்ற பாடலையும்,அடுத்த இரு தினங்களில் மேலும் 4 பாடல்களையும் முடித்துத்தந்த ராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரமேஷை விட்டு நகராமல் கவனித்துக்கொண்டே இருந்தேன். படம் பின்னணி இசைக்குப்போனபோது,திரைக்குள் நுழைந்துகொண்ட மந்திரவாதி போலவே எனக்குத்தெரிந்தார்.


அவருள் இருக்கிற இசை என்ற ஒன்றை எடுத்து விட்டால்,ராஜா என்பவர் இருந்துகொண்டிருக்கும் இடம் வெற்றிடமாய் மாறிவிடுமோ என்று எண்ணுமளவுக்கு முழுக்க முழுக்க இசையாகமட்டுமே அவர் இருந்தார், தெரிந்தார்.

அதற்கு அப்புறம் ‘சேது’ பிதாமகன்’ சமயங்களில் பாலாவுடன் , இளையஞானி கார்த்திக்ராஜா தனக்கு மேனேஜராக இருக்கச்சொல்லி வீட்டுக்கு அழைத்தபோது என்று பலமுறை மிக நெருக்கமாக ராஜாவை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு வார்த்தை கூட நான் பேச நினைத்ததில்லை.

பக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?

Monday, March 12, 2012

ப்ளாக்’எழுதினா மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடுவ

அன்பு வலைஞர்களே வணக்கம்,

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு , தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியிடமிருந்து, மார்ச்12 முதல் 19 வரை தமிழ்மணத்தின் சிறப்பு விருந்தினராக உங்களை தேர்வு செய்திருக்கிறோம். கலந்து கொள்ள சம்மதமா ? என்ற கேள்வியுடன் ஒரு கடிதம் வந்தது.  ஒரே ஒரு நண்பனுக்கு மட்டும் போன் செய்து தகவலைச் சொன்னபோது, அவன் சொன்ன பதில்,

‘மெயிலை நல்லா செக் பண்ணிப்பாரு அட்ரஸ் மாத்தி  அனுப்பிச்சிருப்பாங்க’.

நாலு மாசத்துக்கு முந்தி வரை “ப்ளாக்’ன்னா கருப்புக்கலர்ல  இருக்குமான்னு கேட்டுக்கிட்டு திரிஞ்ச நாதாரிக்கு அதுக்குள்ள ‘சிறப்பு விருந்தினர்’ அழைப்பு விட்டுட்டு, கெடா வெட்டி இவருக்கு பிரியாணி வேற போட்டு அனுப்புவாங்கன்னு கனவு காண்றான்  பாருங்க’- இந்த ரெண்டாவது வரி கண்டிப்பாக அவனது மைண்ட் வாய்சாகக்கூட இருந்திருக்கும்.

அவன் அப்படி நினைப்பதிலும் தப்பில்லை. காரணம் ’பொண்ணு ஊருக்கு புதுசு’ மாதிரி, இந்தப்பையன் ப்ளாக் ‘ஏரியாவுக்கு புதுசு.
நான் இதற்கு முன் நடமாடிய எல்லா இடங்களிலும் கணிசமான எண்ணிக்கையில்  கணினிகள் இருந்தபோதிலும், அதை ஒரு தீண்டத்தகாத பொருளாகவே பாவித்தவன் நான்.


‘’இன்னொரு பத்து நிமிஷத்துல ஆபிஸுக்கு வந்துருவேன். பாஸ்வேர்டைத் தட்டி சிஸ்டத்தை ஆன் பண்ணி வையிங்க’ என்று யாராவது சொன்னால், ஏதோ என் சொத்தில் பங்கு கேட்ட மாதிரி அவ்வளவு கோபம் வரும் எனக்கு.

அப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்ட கதை பெருங்கதை என்பதால், அதை பிறகு பேசுவோம், சுருக்கமாக ஒரு வரியில் சொல்வதானால், கடந்த தீபாவளி அன்று பெய்த பதினாறு மணிநேர மழைதான் என்னை ஒரு ப்ளாக்கராக மாற்றியது என்று சொல்லவேண்டும்.

என்னங்க கிடந்து குழப்புறீங்க’?

இதுதான் என்னிடம் இருக்கும் சிக்கல். நான் எதைப்பற்றியாவது விளக்கப்போனால், அது உங்களை மேலும் கொஞ்சம் குழப்பமான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

ஆனால் பெரியவங்க சொல்லியபடி பார்த்தால், குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும். ஐ மீன், நீங்க என்கிட்ட மீன் பிடிச்சி, ஃப்ரை பண்ணியோ குழம்பு வச்சோ சாப்பிடனுமுன்னா கொஞ்சம் குழம்பித்தான் ஆகனும்.
 
கடந்த நவம்பர் 21- தான் நான் முதல் பதிவு போட்ட நாள். பார்த்திபனோட வித்தகன்’ படம் பார்த்துட்டு,லேசா மரை கழண்ட ஒரு நேரத்துல என்னோட க’ வலைப்பயணம் துவங்கிச்சி.
ஆரம்பத்துல ‘ப்ளாக்கை’ படிக்க வக்கிறதுக்கு பக்கத்து வீட்டுப் பிள்ளைங்களான மாயா, அஸ்மிதாவுக்கெல்லாம் ஐஸ்கிரீம் வாங்கித்தந்த வகையில நிறைய செலவாச்சி. ’’ஒவ்வொரு மேட்டர் படிக்கிறதுக்கும் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீம்  கேக்குறீங்களே, இது உங்களுக்கே அநியாயமாத்தெரியலையான்னு வடிவேலு மாதிரியே ‘அவ்வ்வுன்னு’ அழுதும் பாத்தேன்.


அந்த ஐஸ்நெஞ்சக்கார பிள்ளைங்க அசைஞ்சி குடுக்கிற மாதிரி தெரியலை.’’அங்கிள் எங்கள இப்படி கட்டாயப்படுத்தி படிக்க வைக்கிறதுக்கு கூட, இ.பி.கோ.வுல  ஏதாவது செக்‌ஷன் கண்டிப்பா இருக்கும். நாங்க வெறுமனே ஐஸ்கிரீமோட நிறுத்திட்டமேன்னு சந்தோஷப்படுங்க.’’

இப்படி எக்கலுக்கும் நக்கலுக்கும் ஆளாகி தான் ஏழெட்டு ஹிட்டுகளே வாங்க முடிந்தது.
எனது பிளாக்குக்கு ‘ஓஹோ புரடக்‌ஷன்ஸ் ‘ என்று சினிமாப் பெயர் வைத்திருந்தாலும், எனக்கு சகட்டுமேனிக்கு கவிதை வரும் என்பதால், நான்  இதில் ‘இலக்கியம்’ எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தேன்.

மேற்படி, இருவகையினரையும் பார்த்தபோது, மொள்ளமாரிகள் மற்றும் முடிச்சவிக்களின் எண்ணிக்கை, சினிமாவை விட  இலக்கிய ஏரியாவில் அதிகம் தென்பட்டதால்,சரி உடம்பில் கொஞ்சம் தெம்பு வரும்வரை சினிமாவே எழுதுவோம் என்று முடிவு பண்ணி இங்கே வந்தேன்.

  • ‘’ப்ளாக்’ குல 20 வரிக்கு மேல எழுதுனா யாரும் படிக்க மாட்டாங்க’’
  •  தகவல் சூடா இருந்தா போதும். ரைட்டிங் ஸ்டைல இன்னைக்கு எவனும் மதிக்கிறதில்ல’
  • தலைப்பு கவர்ச்சியா இருந்தா போதும், உள்ள சப்ப மேட்டர்கூட எழுதலாம்’
  • எப்பவுமே இடுகைகளைப் போடுறப்ப வாஸ்து பாத்துப் போடனும்’’-
  • ‘ப்ளாக்’ எழுதுற வேலையெல்லாம் வேணாம்.அப்புறம் நீ மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடுவ’
  • ‘சிலபேர் கனவுல வந்தெல்லாம் எழுப்பி,அப்புறம் நாளைக்கி என்ன எழுதப்போறன்னுல்லாம் கேப்பாங்க’

இப்படி ஆரம்ப  நாட்களில் சில குத்துமதிப்பான ஆலோசனைகள், எச்சரிக்கைகள் கிடைத்தன.

ஒரு மூன்று மாத முடிவில், ‘அண்ணே சினிமாவுல மவுத் டாக் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப உங்க ‘ஓஹோ புரடக்‌ஷன்ஸ்’ தான் மவுஸ் டாக்’ என்று ஒரு சக ப்ளாக்கர் பாராட்டி அலெக்‌ஷா ரேங்க்ல உங்க ப்ளாக் நிலவரம் படிங்க’ என்றபோது, அப்படி என்ற ஒன்று இருக்கிறதா? என்று பார்த்து,திரும்ப அவருக்கே போன் செய்து,

‘’என்னோட ப்ளாக் மதிப்பு 30ஆயிரம் யூ.எஸ். டாலர்கள்னு போட்டிருக்கே,அதை எதாவது சேட்டுக்கடையில வெறும் ஆயிரம் டாலருக்காவது அடமானம் வைக்கமுடியுமான்னு கேட்டப்ப, ‘ அடமானம் போகாது .உங்க மானம்தான் போகும்’ன்னு போனை வச்சவர் அதுக்கப்புறம் ஏன் என்கிட்ட பேசவேயில்லைன்னு இதுவரைக்கும் தெரியலை.

சரி அவர விடுங்க. ‘தமிழ்மணம்’ எனக்கு தந்திருக்க இந்த தங்கமான வாய்ப்பை,என்னால முடிஞ்ச வரைக்கும் சிறப்பா செய்ய விரும்புறேன்.

என்னோட தொழில்நுட்ப அறிவுகுறைவு காரணமா,இதுவரைக்கும் ப்ளாக் படிக்கிற உங்களோட முறையான தொடர்புல இல்லாம இருந்திருக்கேன்.இனியும் அது தொடர வேண்டாம்.

இந்த ஒரு வாரத்துல, கொஞ்சம் சினிமா,.. ஞ்சம் அனுபவம், ...சம் இசை,.....ம்  சமையல் குறிப்பு எழுதலாமுன்னு இருக்கேன்.அப்புறம்,  நீங்க ஒருவேளை விடுவிச்சிட்டா , என் சொத்து மொத்தத்தையும் உங்க பேருக்கே எழுதி வக்கிற மாதிரி ஒரு புதிரும் கைவசம் இருக்கு.அதை நாளைக்கு எழுதுறேன்.
 
வலைஞர்களே, அய்யா சாலமன் பாப்பையா சொன்னமாதிரி, வாங்க இந்த ஒரு வாரம் பழகிப்பாக்கலாம்.புடிச்சா உங்க வீட்டுப்பிள்ளையா நீங்க ஏத்துக்கோங்க. பிடிக்காட்டிஉங்க வீட்டு  பின்வாசல்வழியா  நானே சுவரேறி வந்திடுறேன்.

 ஆக, இனி, எப்பிடிப்பாத்தாலும் நான் உங்க வீட்டுத்தொல்லைதான்.