Saturday, January 7, 2012

நானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை


என் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன.
 இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்டு’க்கொண்டிருப்பது.
 நானும் நக்கீரனில், அது துவக்கப்பட்ட 5 வது இதழில் இருந்து சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயங்கள் அவை.
இன்று ஃபேஸ்புக்கில்,நண்பர்கள்  காலையிலிருந்து நக்கீரனைக்கிண்டலும் கேலியுமாய் ஓட்டுகிறார்கள். நக்கீரனுக்கு ஆதரவான குரல்கள்  வெகு சொற்பாகவே ஒலித்தன. அதைப்பார்க்கும்போது வேதனையாக இருந்தாலும் உப்பைத்தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும் என்பதையும் யோசித்தே ஆகவேண்டி இருக்கிறது.
. அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனியும் அளவுக்கு ஊழலில் பத்திரிகையாளர்கள் ஊறிப்போனதைக் கேள்விப்படும்போது, எனக்கு நக்கீரனின் ஆரம்பகட்டவிவகாரம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
 நான் சொல்லப்போகும் விசயத்தை நம்ப, ரொம்ப கஷ்டமாக இருக்கும்.ஆனால் நான் சொல்ல வருகிற செயலில் மும்முரமாக ஈடுபட்ட நக்கீரன் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் [தமிழ்ப்பத்திரிகை உலகில் ‘ஆசிரியர்’ என்று போடும் தகுதி படைத்த வெகுசிலரில் ஒருவரான] துரை எனது, மற்றும் நம்மில் பலரது ஃபேஸ்புக்கில் இருக்கிறார்.அதனால் அவரைத்தொடர்பு கொண்ட பிறகாவது அதை நம்புங்கள்.
நக்கீரனின் ஆரம்ப கால அலுவலகம் நம்பர் 12, மண்டபம் லேன், கீழ்ப்பாக்கத்தில் இருந்தது. வெறும் இரு அறைகளே கொண்ட அந்த அலுவலகத்தின் ஒரு அறையை தவறு செய்யும் நிருபர்களை கட்டிப்போட்டு உதைப்பதற்கென்றே வைத்திருந்தார்கள் நக்கீரன் துரையும், கோபாலும்.
தரமான இலக்கியங்கள் படித்த துரை ஆசிரியராக இருக்க, வண்ணநிலவன்[சில மாதங்கள் மட்டுமே இருந்தார்] வந்தியத்தேவன், ராகரவி,ஜான் ராஜையா,ஐ.எஸ்.இன்பதுரை,கவிஞர் விக்கிரமாதித்யன், மற்றும் முத்துராமலிங்கன் ஆகிய நான் அனைவருமே அரசியல் சார்பற்று ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய யாராக இருந்தாலும் துணிந்து தவறுகளைச்சுட்டிக்காட்டி, தூங்கும் நேரம் போக எல்லா நேரத்திலும் நக்கீரனின் வெற்றியை மட்டுமே சிந்தனையில் நிறுத்தி
வேர்வை சிந்தினோம்.
ஆரம்பத்தில் நான் சந்தித்த கோபாலைப்போன்ற நல்ல அண்ணனை,முதலாளியை நான் இன்னும்கூட வாழ்க்கையில் சந்திக்கவில்லை.
1988 என்று நினைக்கிறேன். மும்பையில் ‘போல்டு இந்தியா’ என்ற தினசரி ஒன்றில்  2 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு என் விருதுநகர்  வீடு திரும்பியிருக்கிறேன். என் அண்ணனின் பலசரக்குக்கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தபோது,   ரெண்டு மூனு பேர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள் ,’’ஜூனியர் விகடன் சவுபா சொல்லி,
கோபால் அண்ணன் உங்களை கூப்பிட்டுட்டு வரச்சொன்னார் போகலாமா?’’ என்றார்கள்.  

No comments:

Post a Comment