Wednesday, January 25, 2012

இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு! ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்


இன்று காலை சரியாக 10.10 மணிக்கு ரஜினியை, அவரது காரில் இறங்கும்போது பார்த்ததற்கு முந்தின கணம் வரை, அவரால் இன்னொரு படம் நடிக்கமுடியும் என்ற நம்பிக்கை  எனக்கு ஏற்பட்டதில்லை.காரணம் அவர் உடல்நிலை குறித்து பரவியிருந்த கன்னாபின்னா வதந்திகள்.

இதனாலேயே ‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி தினமும் அடிக்கப்படும் கும்மிகளைப் பார்த்து’ கோச்சடையான்’ன்னு ஒரு படமே கிடையாது என்று நான் கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.

இன்று காலை 9.50 டு10.20 முகூர்த்த நேரத்தில் திரையுலகினருக்கும், குறிப்பாக எங்களைப்போன்ற பத்திரிகையாளர்களுக்கும் நெருங்கிய நண்பரான FOURFRAMES' கல்யாணம் அவர்களின் புதல்வன் சதீஷுக்கும்,செல்வி அஞ்சலிக்கும்   திருமணம் சென்னை ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கோடம்பாக்கம் மொத்தமும் ரிஷப்ஷனுக்கு குவியும் என்பதால், ரஜினி விவரமாக,காலையிலேயே வந்துவிட்டார்.

அவர் காரிலிருந்து இறங்கி, கைகுழுக்கச் சென்ற அனைவருக்கும் கும்பிடு போட்டபடி , சிங்கநடை போட்டு லிஃப்டில் ஏறியதை வேகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்த போது, இன்னும் ஒரு படம் என்ன? ஒரு டஜன் படங்களிலே கூட நடிக்கலாம் என்று தோன்றியது.

சரி, இது கல்யாணம் சார் வீட்டுக் கல்யாணம். நமக்கு  இன்றைய சிறப்பு விருந்து அவர்தான்.

படத்தில் நம்ம கல்யாணம் சார்கிட்ட அல்வா வாங்கி சாப்பிடுறாரே அந்த
விவேக்  ஒரே காமெடியை சில நேரம் பல படங்களில் பயன்படுத்துவார்.
அதில் ஒன்றுதான் ... டி.ஐ.ஜி.யை எனக்குத்தெரியும். பட், ஆனா அவருக்கு என்னைத்தெரியாது....காமெடி

ஆனால் கல்யாணம் சார் விவகாரமே வேறு. சி.எம்.மை அவருக்குத்தெரியும். அதே சமயம், சி.எம். முக்கும் கல்யாணம் சாரை,என்னய்யா கல்யாணம்’ என்று பெயர் சொல்லிக்கூப்பிடுகிற அளவுக்கு நெருக்கமாகத் தெரியும்.

இவர் அவ்வளவு பெரிய’ ஆள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் ரொம்ப பெரிய ஆள்தான். குழம்ப ஒன்றுமில்லை.பதவி என்று பார்க்கிற போது, இயக்குனர் பிரியதர்ஷனுக்கு சொந்தமான ஃபோர் ஃப்ரேம்ஸ் என்கிற தியேட்டர் நிர்வாகி அவ்வளவுதான்.

ஆனால் இந்தப்பதவியை வைத்துக்கொண்டு, மொத்த இண்டஸ்ட்ரியையும் வசியப்படுத்தமுடிந்ததென்றால், அது கல்யாணம் சாரின் ஸ்ட்ரிக்டான.கடுமையான, பரிவுகலந்த, பாசம் கலந்த உபசரணை தான்
காரணம்.

கருணாநிதி இன்றைக்கு படம் பார்க்க வருகிறாரென்றால்,அவரோடு எத்தனை பேர் வருவார்கள், என்ன சாப்பிடுவார்கள்,எந்த ஹோட்டல் காபி கருணாநிதிக்குப் பிடிக்கும்.அத்தனையும் கல்யாணம் சாருக்கு அத்துபடி.

இளையராஜா  படம் பார்க்க வந்துகொண்டிருந்தால், அவர் வந்து சேருவதற்கு முன்பே மணக்க மணக்க தாளித்த பாசிப்பயறு வந்து சேர்ந்திருக்கும்.

தியேட்டரில் வைத்து குஷ்பு தனது குழந்தையின் பிறந்த நாளைக்கொண்டாடினால், வரும் குழந்தைகளுக்கான ஐஸ்க்ரீம் செலவை அண்ணன் ஏற்பார்.

படம் ஓடிக்கொண்டிருக்கும்போது,திடீரென ஏதாவது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால், பத்து வல்லுனர்களுக்கு போன் அடித்து வரவைத்து,பத்தாயிரம் ரூபாய் பில் வரக்கூடிய ஷோ ஒழுங்காக நடப்பதற்காக ,ஒரு லட்சம் செலவழிக்கவும் தயங்காதவர். இதுதான் கல்யாணம் சார் அனைவராலும் கவரப்பட்ட ரகசியம்.

பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிட நாலைந்து தியேட்டர்கள் இருக்கிறதென்றாலும் , ஃபோர்ஃப்ரேம்ஸில்  படம் என்றாலே எங்களுக்கு கூடுதல் உற்சாகம் தொற்றிகொள்ளும்.

காரணம் கல்யாணம் சாரை சந்திக்கக்கிடைக்கிற வாய்ப்பு. பட்டாசு வெடிப்பது போல எப்போதும் உற்சாகமாக எதையாவது பேசிக்கொண்டிருப்பார்.சென்னையில் தி பெஸ்ட் செக்ஸ் ஜோக்ஸ் வங்கியும் அவர்தான்.[ஆனா இப்ப கொஞ்ச நாளா சுத்த சைவமாயிட்டாரு]

தனது மகனின் திருமணபத்திரிகையை ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் ஒரே இடத்தில் தந்து விடலாமே என்று எங்களை இரு தினங்களுக்கு முன்பு அவரது தியேட்டரில் சந்தித்து  அழைப்பிதழ் கொடுத்தார்.
 5 நிமிடங்களில் முடிந்திருக்கவேண்டிய இந்த சந்திப்பு ,யாரும் எதிர்பாராமல் சுமார் 100 நிமிடங்கள் நீடித்தது.

‘என் பையனின் திருமண அழைப்பிதழை நியாயமாக உங்கள் வீட்டில் வந்துதான் தந்திருக்கவேண்டும். என் தியேட்டரும் உங்க வீடு மாதிரியேதான் என்று நினைத்ததால் இங்கேயே அழைத்தேன்’ என்று ஆரம்பித்தவரை மெல்ல சில கேள்விகளால் சுண்டி இழுத்தோம்.

‘தலைவரே உங்க பையனை எம்.பி.ஏ.வரைக்கும் படிக்க வச்சிருக்கீங்க. உங்க படிப்பைப்பத்தி சொல்லுங்க?

உண்மையைச்சொல்லனும்னா நான் ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சேன்.

ஒன்பது பாஸா பெயிலா?

ஏன், நான் எட்டு பாஸு நீங்கஒன்பதாங்கிளாஸ் ஃபெயிலுன்னு என்ன ஓட்டுறதுக்கா? நோ கமெண்ட்ஸ்
.
தலைவரே எல்லா நடிகர்களும் உங்களுக்கு ரொம்ப நெருக்கம்கிறது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நெருக்கமான நடிகைகளைப்பத்தி சொல்லுங்க?

சம்பந்தப்பட்டவங்க கிட்ட கேட்டுட்டு அப்புறமா சொல்றேன்
.
முந்தியெல்லாம் கவர்ச்சி நடிகைகளும், பச்சப்புள்ளங்களும் பாத்து  பயப்படுற மாதிரி ஒரு முரட்டு மீசை வச்சிருந்தீங்களே, அத ஏன் எடுத்துட்டீங்க?

எனக்கு பேத்தி பிறந்த அன்னைக்கி எடுத்துட்டேன்.

தலைவரே, நீங்க கண்டிப்பானவரா? கனிவானவரா?


ரெண்டும் கலந்த கலவை நான்.

ரஜினிக்குப் பத்திரிக்கை வச்சிட்டீங்களா?


நானும் என் மனைவியும் தான் வச்சிட்டு வந்தோம். முதல் ஆளா வந்து நிப்பேன்னு சொன்னவர், எங்களை அத்தோட விடலை. என் மனைவியைப் பார்த்து,’’ இவர் ரொம்ப பயங்கரமான ஆளு ஆச்சே ,இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு தெரியலையே’’ன்னு கலாய்ச்சார்.என் மனைவி அமைதியா சிரிக்கவே, ரஜினி என்னை அப்பவும் விடலை,’ரொம்ம்ப்ப கஷ்டமா இருக்குமேன்னுட்டு ரஜினி பிராண்ட் சிரிப்பு ஒண்ணு சிரிச்சார்.

‘இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் எவ்வளவு உரிமையோட நம்மகிட்ட பேசுறார் என்ற மன நிறைவோடு நானும் என் மனைவியும் வீடு திரும்பினோம்’

கல்யாணம் சாரின் நெகிழ்ச்சியான மனநிலையை கலைக்கவிரும்பாமல் ப்ரஸ்மீட்டைக்கலைத்தோம்.


3 comments: