Thursday, January 19, 2012

நக்கீரனில் ஆபிஸ் பாய்- என் கதை- 7




எந்த வேஷத்துக்கும்
பொறுத்தமற்றது  என் முகம்
சுற்றிச்சூழ
நடக்கிறது நாடகம்
 -வித்யாஷங்கர்.




நேற்று ஒரு நண்பர் போனில் ‘அட போங்கங்க நீங்க,நம்ம டைமிங்குக்கே ஒத்துவர மாட்டேங்குறீங்க. என்னத்தையாவது எழுதீட்டு பாதியில விட்டுட்டுப்போயிடுறீங்க’ என்று ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் தராசு, படிக்கல் திருடும் வடிவேலு மாதிரியே கோபித்துக்கொண்டார்.

என் கதையில், கடைசியாக நம்பிராஜனின் மோதிரங்கள் கவிதை
படித்துவிட்டு மோதிரங்களை கோபால்  கழட்டி எறிந்திருப்பார், அதில்  நான், துரை மற்றும் நம்பிராஜன் ஆகியோர் ஆளுக்கு ஒன்றாக பொறுக்கி எடுத்திருப்போம் என்று நினைத்திருப்பீர்களேயானால் அது ரொம்ப தப்பு.

அந்த கவிதை ஒரு எறும்புக்கடி அதிர்ச்சியைக் கூட கோபாலுக்கு ஏற்படுத்தவில்லை. இதோ இன்னும் ரெண்டு மோதிரம் வாங்கி மாட்டப்போகிறேன் என்கிற மாதிரி வெளியே கிளம்பி போய்விட்டார்.
பெரிய சேதாரமில்லாமல் தப்பியதில் துரைக்கும் எனக்கும் சந்தோஷம்.

நம்பிராஜ் எனப்பட்ட அண்ணாச்சி ஆகிய விக்ரமாதித்யன் ஆரம்ப கால நக்கீரனில் சில மாதங்களே வேலை பார்த்தாலும் அவர் எங்களுக்கு கொடுத்த அதிர்ச்சிகள் ஏராளம்.
'தேவாங்கு வாழும் முடி கயிறுக்காக' அண்ணாச்சி எழுதிய கவிதை போலவே அண்ணாச்சியைப்பற்றி எழுதுவதென்றால்,  அண்ணாச்சி வாழ்வது சரக்கடிப்பதற்காக’ என்றால் மிகையில்லை.

தம்பி, நான் கவிஞன். நான் சொன்னா அது நடக்கும். சாய்ங்காலம் பெரிய புயல் மழை வந்து ’கடை’யெல்லாம் அடைச்சிருவாங்க போல தெரியுது. இப்பவே வாங்கி வச்சிக்கிட்டம்னா நல்லது. சரக்கை ஸ்டாக் பண்ணி வைத்துக்கொள்வதற்கு சகல வித்தைகளையும் கையிலெடுப்பார் அண்ணாச்சி
.
இவர் நக்கீரனில் இருவேறு உலகம்’ என்ற பெயரில் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன் போன்றவர்களிடம் பேட்டி எடுத்து எழுதி வந்தார்.

இந்தப்பய வேற எதோ ஒரு நக்கீரனைப்பத்தி எழுதி நம்மள கன்ஃபியூஸ் பண்ணப்பாக்குறான் போல இருக்கு’ என்று  நீங்கள் கண்டிப்பாக நினைக்கக்கூடும். அடுத்து எழுதும்போது இதழை ஸ்கேன் பண்ணிப்போட்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துவைக்கிறேன்.ஆரம்ப கால நக்கீரன் இதழ்களை சேர்த்து வைத்திருக்கும்  சில நண்பர்களை நெருங்கிவிட்டேன். நக்கீரனின் பழைய இதழ்கள் என் கைக்கு வந்து சேராததாலேயே ஆர்டராக என்னால் எழுதமுடிவில்லை.

சமீபத்தில் மக்கள் தொடர்பாளர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த நக்கீரன் கோபால், அவரது வீட்டில் மக்கள் தொடர்பாளர் சங்க ஆண்டு மலர் ஒன்றை தற்செயலாகப்பார்த்திருக்கிறார். அதைப்புரட்டிக்கொண்டிருந்தவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
மலரில் ஒரு பக்கத்தைப்புரட்டி, ‘முத்துராமலிங்கம்   உங்க சங்கத்துல மெம்பரா?, இவன நான் எப்பிடி வச்சிருந்தேன்.ஏரியா ரிப்போர்ட்டரா வந்த பயலை, நக்கீரன்ல இணை ஆசிரியராக்கி, ‘உதயம் ‘ பத்திரிகையில ஆசிரியராக்கி அழகு பாத்தேனே, பிறகு ஏன் நக்கீரன்ல மூன்றரை வருடங்கள் ஆபீஸ் பாயாக வேலை பார்த்தேன்னு எழுதியிருக்கான்.

இத எப்பிடி நீங்க எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம போட்டீங்க’லேசாக படபடப்பானார் கோபால். அந்த நண்பர்களுக்கு கோபால் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. உங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை? [ தொடரும்]


திண்டுக்கல்லுக்கு மாலன் ஏன் போனார்? என்கதைஎழுதும் நேரம் இது-2
 நானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை-4


1 comment:

  1. அப்படியே மாலன் மேட்ட்ரையும் சொல்லுங்க்..

    ReplyDelete